சேனியம்மன் கொலுவிருக்கும்

சேனியம்மன் கொலுவிருக்கும் அழகியகற் கோட்டம்
***சீர்மிகவே அமைந்திருக்கும் சிங்காரத் தோட்டம் !
வானிலொளிர் வெண்மதியாய் அன்னையவள் தோற்றம்
***வற்றாத கருணையினால் வாழ்வில்வரும் மாற்றம் !
தேனினிய சொல்லெடுத்துப் பக்தியுடன் பாடத்
***தேவியவள் குளிர்ந்துநம்மை ஆட்கொள்வாள் மெல்ல !
நானிலத்தில் நல்லவழி காட்டிடுவாள் என்றும்
***நம்பிடுவோர் குறைகளையத் துணைவருவாள் நன்றே !!

அன்னரத மீதேறி ஆனந்த மாக
***அண்டுவார்தம் உள்ளத்தில் குடியிருக்க வருவாள் !
புன்னகையில் முத்தொளிர ஒய்யார மாகப்
***பூரிப்பில் தனைமறந்து பொலிவோடு வருவாள் !
கண்ணாடி வளையோசை கலகலவென் றொலிக்கக்
***கனிவாக அணைத்திடவே களமிறங்கி வருவாள் !
பன்னீரும் சந்தனமும் வீதியெங்கும் மணக்கப்
***பரிவாக மஞ்சளொடு குங்குமமும் தருவாள் !!

வேப்பிலையின் வாசத்தில் நெகிழ்ந்தவளும் விரைந்து
***வெவ்வினைகள் வேரறுக்கப் பிரம்பெடுத்து வருவாள் !
பூப்போட்டு வணங்குபவர் வாழ்விலொளி யேற்றப்
***பூரணியாய்ப் பொன்முகத்தில் சிரிப்பேந்தி வருவாள் !
கூப்பிட்ட குரல்கேட்டுக் கடைக்கண்ணால் நோக்கிக்
***குழந்தையைப்போல் குதித்தோடி குறைதீர்க்க வருவாள் !
காப்பணிந்து தீச்சட்டி ஏந்திவரு வோரைக்
***காப்பதற்குக் கண்முன்னே கனலாக வருவாள் !!

சிம்மவாக னத்தினிலே சிங்கார மாகச்
***சிலைபோலும் பேரழகி சிலம்பொலிக்க வருவாள் !
பம்பையோடு பறையதிரத் தாளத்தோ(டு) ஆடிப்
***பாங்குடனே பிறைநுதலை உயர்த்தியவள் வருவாள் !
தெம்மாங்கு பாட்டோடு கும்மிகொட்டி னாலும்
***சிந்தைகுளிர்ந்து தலையாட்டிச் சிலிர்த்தவண்ணம் வருவாள் !
அம்மையவள் அழகுகண்டால் கூத்தாடும் நெஞ்சம்
***அடிபணிய விலகிடுமே மனத்திலுள்ள வஞ்சம் !!

காதுகளில் தோடாடக் கருங்கூந்த லாடக்
***கட்டிவைத்த பூச்சரமும் கொண்டைதனி லாட
மாதவளின் மெல்லிடையில் மேகலையு மாட
***மார்பினிலே மணிச்சரமும் பெருமையுட னாட
ஓதுகின்ற மந்திரத்தின் ஒலியிலுள மாட
***ஓங்கார மானவளின் திருவுருவைக் கண்டால்
வேதனைகள் விலகிவிடும் வெற்றிவந்து சேரும்
***மேன்மையுடன் மெய்ஞானம் கூடிவரும் நன்றே !!!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (31-Mar-19, 11:14 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 51

மேலே