சினிமாவுக்குள் இதயம் செருகிய மகேந்திரன்

சினிமாவுக்குள் இதயம் செருகிய மகேந்திரன்
========================================================ருத்ரா

இயக்குனர் மகேந்திரன் அவர்களின்
இதயத்துடிப்பு அடங்கியது
அறிந்து நமக்கு எல்லையற்ற துயரம்.
சினிமா என்பது
வெறும் கச்சாபிலிம்களின்
நீண்ட நீண்ட பாம்பின்
உடல் அல்ல.
நிகழ்வுகளை தின்னும்
அந்த நீண்ட ஒளி நிழல் பாம்பு
"படம்" எடுத்து திரையில்
ஆடும்போது
கதை ஓட்டங்களைத்தான்
நாம் பார்த்தோம்.
அதில் இதயத்தை
பதியம் செய்து
பதிவு செய்து
காட்டியது அவர் மட்டுமே.
தனி மனிதன்
சமூகம்
இந்த இரண்டையும்
அவர் இதயநாளத்தைக்கொண்டு
கட்டி
அதில் உணர்வுகளின்
உயிரோட்டத்தை தொப்பூள் கொடியாக்கினார்.
"உதிரிப்பூக்கள்"
என்ற அந்த ஒரு படம் போதும்.
மனிதன் எனும் மிருக மிச்சம்
அல்லது
மனிதன் எனும் தெய்வ அச்சம்
இரண்டையும்
சமுதாயத்தின் ஒற்றைப்புள்ளியில்
ஒன்று சேர்த்தார்.
சமூகம் மனிதன் மூலமாகவே
தன்னை வார்த்துக்கொள்கிறது
என்ற அந்த பாடம்
வரலாற்றுத்தடங்களை பதிக்கவல்லது.
அவரது கலைத்தொண்டுக்கு
நம் சிரம் தாழ்த்த வணக்கங்கள்.


================================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (2-Apr-19, 12:41 pm)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 51

மேலே