என் மரணத்திற்கு பின்

என் மரணத்திற்கு பின்
என் வாழ்வு எப்படி இருக்கும்
என எனது மனதில் ஆசை
ஒன்று தோன்றியதுவே

அதை என் வரியில் சொல்லிடவே
நானும் நினைத்தேன்
அதற்கு என் அறிவும் என் மனதும்
ஆவலுடன் ஒத்துழைத்ததுவே

எப்பொருளும் எச்செயலும்
நிரந்தரமில்லை
என் உறவும் என் நட்பும்
நான் இருக்கின்றவரையே

அன்றொரு நாள் என் வாழ்க்கை
முடியும் தருணம்
அரை நொடியில் நானும் அதை
உணர்ந்தும் கொண்டேன்

அதை யாரிடமும் பகிரவும்
அவகாசமில்லை
அப்படி ஒரு சூழலில் என்னையும்
வைத்தான்

அவனிடமும் கைகூப்பி கெஞ்சிப்
பார்த்தேன்
சிறிது நேர அவகாசம் கேட்டும்
பார்த்தேன்

இத்தனை நாள் வாழ்ந்த வாழ்வு
நிறைவில்லையா என்றான்
எதற்காக அவகாசம் என்றும்
கேட்டான்

என் மனதில் எண்ணங்கள்
பலவுமுண்டு
அதை பகர்ந்திடவே அவகாசம்
தேவை என்றேன்

என் மனைவி என் மக்கள்
என் பக்கத்தில் வேண்டும்
என் நட்புக்கள் யாவருமே
என் அருகில் வேண்டும்

என் ஆசான் என் குருவை
பார்க்கவும் வேண்டும்
என் சுற்றம் யாவர்க்கும்
நான் சொல்லிட வேண்டும்

பிறக்கும் பொழுது என் வரவை
கணக்கிட்டு சொன்னாய்
யாவரையும் மகிழ்ச்சிக் கடலில்
மிதக்கவும் வைத்தாய்

எங்கு சென்றாலும் சொல்லாமல்
நான் சென்றதும் இல்லை
சொல்லாமல் செல்வது என்
பழக்கமும் இல்லை

என் முகத்தை சில நொடிகள்
உற்றுப் பார்த்தான்
இதுவரைக்கும் வாழ்ந்த வாழ்வு
போதாதா என்றான்

நீ சொன்னவற்றை செயல் படுத்த
நேரம் வேண்டுமே
அதற்கு துளியேனும் இடமில்லை
என்னுடன் கிளம்பு

என சொல்லிக் கொண்டே
என்னையும் சற்றே அனைத்து
தன்னுடன் என்னையும்
நடக்கச் சொன்னான்

அவனுடன் செல்வதில் எந்த
ஆட்சேபனையும் இல்லை
இருந்தும் என்னவளிடம் சொல்லாமல்
போவதால் ஓரு குற்ற உணர்வு

அவனுடனே பயணித்தேன்
மெதுவாய் நானும்
ஏதோ உந்துதலால் நானும்
கீழே பார்த்தேன்

அசையாமல் படுத்திருந்தேன்
நானும் அங்கே
என்னவளும் என்னையும் தான்
எழுப்பப் பார்த்தாள்

என்னை தொட்டு எழுப்பி
உரக்க குரல் கொடுத்தும்
பார்த்து விட்டாள்
அசைவற்ற என் உடலை
உற்றுப் பார்த்தாள்

விஷயத்தின் வீரியத்தை
உணர்ந்தும் கொண்டாள்
நான் இனி இல்லை என்ற
உண்மையை புரிந்தும் கொண்டாள்

ஒரு நிமிடம் தடுமாறித் தான்போனாள்
பொங்கி வரும் கண்ணீருடன் கலந்தும் விட்டாள்
அடுத்த செய்கை என்னவென்று
யோசிக்க மறுத்தாள்

இதையெல்லாம் பார்த்த நானும்
கலங்கிப் போனேன்
பேசமுடிந்தும் பேசாமல் சிலையாய்
நின்றேன்

நான் கண்ட காட்சி தனை
அவனும் கண்டான்
முடிந்து போன விஷயத்தைப்
பேச மறுத்தான்

இத்தனை கல்
நெஞ்சக்காரனா அவன்
அவன் மௌனத்தின் மேல்
நான் கோபம் கொண்டேன்

என் முகபாவம் பார்த்து அவன்
தனக்குள் சிரித்தான்
அவனை முதன்முதலாய்
வினோதமாய் நானும் பார்த்தேன்

என்னையும் அவன் இடத்திற்கு
கூட்டி சென்றான்
எனக்கு என்று ஒரு இடம்
காட்டி இருக்கவும் செய்தான்

எந்தன் செய்கைகள் யாவைக்கும்
ஒரு அர்த்தமுண்டு
அதை புரிந்து கொள்ள நீ
மறுத்தால் நான் என்ன செய்ய

உன் வாழ்வில் ஒரு பகுதி
பூலோக வாழ்க்கை
அது முடிந்த பின்பு அடுத்து
என்னவென்று நீ அறியவும் மாட்டாய்

சில காலம் நீயும் இங்கு
என்னுடன் இருப்பாய்
இங்கு வாழ்க்கை முறை
முற்றிலும் மாறுபட்டு இருக்கும்

சொன்னவனை ஏளனமாய்
நானும் பார்த்தேன்

இந்த வாழ்வை நானும்
ஒன்னும் கேட்கவில்லையே

இருந்த வாழ்வை தொலைத்து
விட்டு இது என்ன வாழ்வு

என் மக்கள் துயரமும்
சில காலம் தான்
ஆனால் நான் அவர்களோடு
வாழ்ந்த வாழ்வை எப்படி மறப்பேன்

கேட்காமல் கொடுப்பதுதான்
என் சுபாவம்
அதன் படியே நீ நடப்பாய்
உன்னை அறியாமலே

மனித வாழ்வின் அரிச்சுவடி
மழலையில் தொடங்கும்
சிறு உடலுடனே உடம்பையுமே
சுமந்து கொண்டு

இங்கு உருவம் என்ற சொல்லுக்கு அர்த்தமில்லை
ஆன்மாவிற்கே பிரதானமாய் இடமும் உண்டு
உடம்பெனும் கூடு இங்கே இல்லை
உணர்வுகளுக்கு இங்கு வேலையும் இல்லை

உன் அறிவும் மனமும் உணர்ச்சியுமே
என்னிடம் தஞ்சம் அடைந்ததுவே
மானிட வாழ்க்கை ஞாபகங்கள்
அறவே நீயும் மறந்திடுவாயே

உன் வாழ்க்கை குறிப்பின்
கணக்கு வழக்கு எல்லாம்
இங்கே என்முன் அலசப்படும்
தக்க முடிவும் உடனே இங்கு
சொல்லப்படும்

ஒருகணம் நானும்
என்னைப் பார்த்தேன்
எனக்கே ஒன்றும்
புரியவில்லை

கவசமாய் இருந்த
உடம்பையும் தான்
எங்கோ நானும்
தொலைத்து விட்டேன்

நினைத்துப் பார்க்க
முற்பட்டேன்
அதுவும் என்னால்
முடியவில்லை

இதுவரை நடந்த
நிகழ்வுகளும்
பொய்யாய் இருப்பதுபோல்
உணர்ந்தேன்

அவன் சொல்வது அனைத்தும்
உண்மைதானோ
என்னை அவன் வசம்
இழுக்கின்றானோ

மெல்ல என் நிலைமையை
நான் உணர்ந்தேன்
தற்பொழுது நான் இருக்கும் இடம்
மிக பரிச்சயமானதாய் தோன்றியது

பின் இத்தனை நாளாய்
நான் எங்கிருந்தேன்
நினைவில் சரியாய்
தெரியவில்லை

ஏதோ ஜென்மஜென்மமாய்
நான் இருந்த
இடத்திற்கு திரும்ப
வந்தது போல்

ஆனந்த கடலில்
குளித்து வந்தேன்
அங்கும் இங்கும்
அலைந்து கொண்டே

ஆன்மா என்ற
சொல்லிற்கு
அர்த்தம் அழகாய்
விளங்கியது

எந்த சலனமும்
எனக்கில்லை
புத்துணர்வு பெற்றது
போல் உணர்ந்தேன்

அங்கு என் போல பல
ஆன்மாக்கள் திரியக்கண்டேன்
உயிரற்ற பொம்மை போல
உலவக் கண்டேன்

உயிரில்லா உடலுக்கு
ஒரு மதிப்பும் இல்லை
அது போல் உருவம் இல்லா
ஆன்மாவினால் எந்த பலனும் இல்லை

என்னையும் தான் அவன்
அழைத்தான் தன்னருகிலே
என் மானிட வாழ்வின் வரவு
செலவை சொல்லத் தொடங்கினான்

என் பாவ, புண்ணிய கணக்கை
என்முன் வைத்தான்
அதை நான் புரிந்து கொள்ள
வசதியாய் அவன் மொழியில் சொன்னான்

என் ஆன்மாவிற்கும் புரியும்
படியாய் அதுவுமிருந்தது
இது எப்படி சாத்தியம் என
அவனை வியப்புடன் பார்த்தேன்

நீ தெரிந்து செய்த பாவங்கள்
இவை இவை என்றான்
தெரியாமல் செய்தவையோ
இவையெல்லாம் என்றான்

இதற்கு மேலும் ஒன்றிருக்கு
புரிந்து கொள் என்றான்
உன்னவளின் நல்ல மனம்
அதுதான் என்றான்

அதை காயப்படுத்தி வாழ்வதே
உன் வழக்கம் என்றான்
அவள் பக்க நியாயத்தை
உணர மறுத்தாய்

உன் எண்ணத்தை அவள் மீது
திணித்து வந்தாய்
அதை உணர்ந்தும் உணராதது
போல் உன் வாழக்கையை
அமைத்தாய்

இது போல பாவச்செயல்
வேறொன்றும் இல்லை
இப்படிப்பட்ட உள்ளத்தோடு
ஏன் வாழ்ந்து வந்தாய்

துள்ளியமாய் அவன் சொல்வதை
கேட்டு வியந்தேன்
என் மனதை எவர் அறிவார்
என இறுமாப்புடன் இருந்தேன்

நீ செய்த புண்ணியங்கள்
சிலவற்றைப் பார்ப்போம்
என சொல்லிக் கொண்டே
என் விழிகளை உற்று நோக்கினான்

உன் தாய் தந்தை செய்கையினால்
கொஞ்சம் பெற்றாய்
உன் மனைவியின் அருகாமையால்
நிறையப் பெற்றாய்

உன் எழுத்தில் நல்லதையே
நீயும் சொன்னாய்
பக்தியின் உட்பொருளை
நிறையத் தந்தாய்

மற்றவரை புண்படுத்தும்
பழக்கம் இல்லை
உன்னை புரிந்து கொள்ளா
எவரையும் நீ அவமதித்ததுமில்லை

கிடைத்த வாழ்வு போதும் என்று
நிறைவாய் இருந்தாய்
எதுமீதும் ஆசையில்லை
என்றே வாழ்ந்தாய்

என்று சொல்லிவிட்டு
தனக்குள்ளே கணக்கும் போட்டான்
சில நிமிடம் யோசித்துவிட்டு
என்னையும் பார்த்தான்

கூட்டிக் கழித்து பார்த்து விட்டேன்
எதுவுமே இல்லை
உன் வாழ்க்கை முறை எதுவும்
எனக்கு பிடிபடவில்லை

சந்தர்ப்பம் கிடைப்பது
ஒரு முறை தானே
நான் தந்த வாழ்க்கைக்கு
நீ பலமும் சேர்க்கலை

நீ வாழ்ந்த வாழ்வின் நோக்கம்
உனக்குப் புரிந்ததா, இல்லை,
பிறந்து விட்டோம் வாழ்ந்திடுவோம்
என்றிருந்தாயா

உன்னை அனுப்பியதின் நோக்கம்
தான் உனக்குப் புரிந்ததா
புரியாமல் நான் யாரையும்
அனுப்பியதில்லை

அனைத்து ஆன்மாக்கள் தஞ்சம்
கொள்வது என்னிடமே தான்
நேரம் காலம் பார்த்து
சிலரை நான் திருப்பி அனுப்புவேன்

அது....

ஆறறிவு வாழ்வு என்ற நிச்சயமுமில்லை
ஐந்தறிவு வாழ்வாகவும் அது இருக்கலாம்
எந்த அறிவும் இல்லாத வாழ்வாவும் இருக்கலாம்
இனி, வாழ்வே இல்லை என்ற நிலைப்பாடகவும் இருக்கலாம்
முடிவெடுக்கும் அதிகாரம் என்னிடம் மட்டுமே

உன் விஷயத்தில் எதுவும்
எனக்கு பிடிபடவில்லை
எந்த அடிப்படையில் முடிவு
எடுப்பேன் தெரியவுமில்லை

அதுவரைக்கும் இங்கு நீயும்
உலாவிக் கொண்டிரு
சமயம் கிடைத்தால் மீண்டும்
பார்ப்போம் என்றே சொன்னான்

ஒரு நிமிடம் என்று நான் சொன்னவுடனே
கேள்விக் குறியோடு என்னைப பார்த்தான் விசித்திரமாக

உன் செயலுக்கும் சொல்லுக்கும்
மறுபேச்சில்லை
இருந்தும் சில வார்த்தை உன்னிடம்
நானும் பேச வேண்டும்

அகிலத்தை இயக்குகின்ற
ஆதிபகவன் நீ
என் இயக்கமும் அதில் ஒன்று
நீ அறியாதவன் இல்லை

என் வாழ்வை அலசிப் பார்த்து
என் மேல் பழி போடுகிறாய்
ஆரமர யோசித்துப் பார்
உனக்கு உண்மை புரியும்

என்று சொல்லிவிட்டு நானும்
அங்கிருந்து நகர்ந்தேன்
இதை படிப்பவர்க்க்கு என் வாழ்வும்
ஒரு படிப்பினையாகும்

என்று சொல்லி முடிக்கின்றேன்
என் வரிகளைத்தான்

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (2-Apr-19, 3:59 pm)
பார்வை : 98

மேலே