புறங்கூறும் தீமையாளர் அடுநரகுக்கு ஆளாவர் - குறளை, தருமதீபிகை 150

நேரிசை வெண்பா

பொய்யோடு கூடப் புலையும் கொலையுமே
வெய்ய புறங்கூற்றில் மேவியுள - ஐயகோ
அத்தீமை யாளர் அடுநரகுக்(கு) ஆளாகிச்
செத்தேறு கின்றார் செறிந்து. 150

- குறளை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

பொய்யும், புலையும், கொலையும் புறங்கூற்றில் பொருந்தியுள்ளன; ஆதலால் கோள் சொல்லும் தீமையாளர் கொடிய நரகிற்கே ஆளாகி அழிந்து படுகின்றார்.

இப்பாடல் கோளில் நிறைந்துள்ள கொடும் பாதகங்களைக் குறித்தது; புறங்கூற்று - ஒருவனைக் குறித்து மறைவாகப் புறத்தே பழித்துச் சொல்லுவது.

இல்லாத பழிகளையெல்லாம் ஏற்றிச் சொல்லுதலால் பொய் முதலிய பொல்லாமைகள் பல அதில் கேடுடையதாய் நின்றன.

கொலை முதலிய தீமைகள் பலவற்றையும் கோள் விளைத்து விடுதலால் கோளன் கொடிய பாதகன் ஆகின்றான்; ஆகவே அடு நரகிற்கே ஆளாய் அவன் அடியோடு அழிகின்றான்.

பாவம் செய்த உயிர்களை சரீரத்தில் வைத்துப் பதைக்கப் பதைக்க வதைக்கின்ற இடத்திற்கு நரகம் என்று பேர். அடு என்றது அதன் கொடிய துன்ப நிலை தெரிய வந்தது.

வெம்மை யோடுபிறர் தம்பழி விளம்பி யுழலும்
செம்மை யில்லவர்கள் தீயுமிழும் வாயில், அயலார்
தம்மில் வாழ்பவரை நோக்கினர் தடங்கண் மிசையும்,
அம்மஓ எனஇருப்பு முளைகொண் டறைதியால்,

மின்னும் நக்க கதிர்வேல் விகட பத்திரமிகப்
புன்மை இல்லவர் தமைப்பழி புகன்ற இவரைத்
துன்னு மூளை தசைசோரி நிறைபாழ் நரகின்வாய்ச்
சென்னி கீழுற மடுத்தனல் செறித்தி டுதியால். - காசிகாண்டம்

இங்கே கோட்சொல்லித் திரிந்தவர் நரகத்தில் எமபடர்களால் படும் துயர நிலைகளை இவற்றால் அறியலாகும்.

செத்து ஏறுகின்றார் செறிந்து என்றது இறந்து பட்ட பின் அவர் விரைந்து போகின்ற இடநிலையை உணர்த்தி நின்றது.

கோளால் இம்மையில் பழியும், மறுமையில் நரகத் துன்பமேயாம்; அந்தப் பாழான சொல்லை மனிதன் யாண்டும் பழகாமலும் கேளாமலும் இருக்க வேண்டும் என்பது கருத்து.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Apr-19, 11:35 am)
பார்வை : 19

புதிய படைப்புகள்

மேலே