முதிர் கன்னி

முதிர் கன்னி பேசுகிறேன்

நான்
ஒரு ஏழை வீட்டில்
இருவர்
எதுகையும் மோனையும்
இல்லாது
எழுதிய கவிதை
என்னை யாரும் படிக்கவில்லை
இல்லை இல்லை
யாருக்கும் பிடிக்கவில்லை

என் கருவறையில்
வாழும் கடவுளுக்கு மட்டும்
நடை திறப்பு நாள்
குறிக்கப்படவே இல்லை

எந்த வண்டும்
அறியவில்லை
இப்பூவின் மணத்தை
இப்பூவையின் மனத்தை

அதனால்
தள்ளிவைத்தனர்
என் மணத்தை
தள்ளி வைத்தாலும்
நான்
தள்ளிவைக்கவில்லை
இன்னும்
கொள்ளிவைக்கவில்லை
என் மானத்தை
தன்மானத்தை

நான்
தி மு க வின் தலைவி
தி மு க என்றால்
திருமணம் முடியாக் கன்னி

மலரெல்லாம்
வடிவிடும் மாலையாக
மலர்நான்
வாடுகின்றேன் மாலையாக

ஆண் அல்ல
ஆண்டுகள் மட்டுமே
என்னை ஆண்டுகொண்டிருக்கிறது

கணவன் என்பதாலோ
என்னவோ
கனவுகளில் மட்டுமே

என் மூச்சின்
வெப்பத்தோடு
ஒப்பிட்டால்
சூரியனே நிலவுதான்

மாங்கல்யம் இல்லாது
மாங்காய் உண்கிறேன்
நா ருசிக்கு அல்ல பசிக்கு

இரவிடம்
சில நேரம்
நான் இரந்துபோகிறேன்
சிலநேரம்
இறந்துபோகிறேன்

முகத்தைப்
பார்க்கும் ஆண்கள்
பெண்ணின்
அகத்தைப் பார்ப்பதில்லை

வரதட்சணை கேட்கும்
பெரியோர்கள்
தயவு தட்சணை
பார்ப்பதில்லை

என் புன்நகையை
விரும்பாத சமூகம்
பொன் நகையை
மட்டுமே கேட்கிறது

இமயத்தில்
தோன்றாத கங்கை
என்
இமை மையத்தில்
தோன்றியது

தேதி முடிந்த
உணவுப் பொருளாய்
நான் திருமணச் சந்தையில்

மக்களே என்று
அறிவீர்
நான்
உணவுப் பொருள் அன்று
உணர்வுப் பொருள் என்று

கவிஞர் புதுவைக் குமார்

எழுதியவர் : புதுவைக் குமார் (9-Apr-19, 5:37 pm)
Tanglish : mudhir kanni
பார்வை : 80

மேலே