அழகுஎன்ன அழகு
அலை பாய்ந்து சுழன்று அடிக்கும்
கருவண்டு கண்களில் அழகு இல்லை...
கார்மேகமாய் பரந்து விரிந்திருக்கும்
கருங்கூந்தலில் இல்லை அழகு....
பரந்து விரிந்த வீரம் நிறைந்த
தோள்களில் இல்லை அழகு...
கேட்போரை திகைக்கச் செய்யும்
நுனி நாக்கு தவழும்
ஆங்கிலத்தில் இல்லை அழகு...
காண்போரைத் திகைக்க வைக்கும்
கைபேசியால் அழகு இல்லை...
அளவு பார்த்து அணிந்து பார்த்து
மாற்றங்கள் செய்து
உடுத்திக் கொள்ளும் ஆடை அழகு இல்லை....
முதுமை காலத்தில்
தள்ளாடும் தாய் மனம் அறிந்து
தனிமையில் தவிக்க விடாமல்
ஆறுதல் அளிப்பது அழகு...
அடுத்த வேளை
சாப்பாட்டுக்கு வழியின்றி அவதிப்படுவோருக்கு
உணவளிப்பதில் அழகு...
வேதனையில் வெந்து திகைத்துப்போய்
மன ஆறுதல் இல்லாமல் தவிப்பவரை
கூடுதலான வார்த்தைகளால்
குத்திக் கிழிக்காமல் இருப்பது
பெரிய அழகு...
வறண்டு கொல்லும் இந்த கோடைக்காலத்தில்
ஐந்தறிவு ஜீவன்களுக்கு நீர் அழிப்பது அழகு....
நீரின்றி வாடப்போகும் எதிர்காலத்தைக் காப்பாற்ற
மரங்களை பாதுகாப்பது அழகு....
இப்படியாக
உலகம் முழுவதும்
மனம் கவரும்
எத்தனை எத்தனையோ
அழகுகள் இருக்கும்போது
நிலையில்லாத
அழிந்து போகும் உடல் அழகு
ஒன்றும் பெரிய அழகு இல்லையே....