தரணி வாழும் வரைக்கும்

ஆற்றொனா துயரில்
அழகு உடல் துவள
அதற்கு மருந்திட
அறிவியல் மருத்துவரை நாட

அவருக்கான ஊதியம்
ஐந்நூறை கரைத்திட
எழுதிய சீட்டிற்கு அவரின்
மருந்துக்கடையை அணுக

ஆன மருந்தின் செலவோ
இரண்டாயிரத்தைத் தாண்டியது
இரண்டு நாள் கழிந்தும்
எதுவும் மாறாமல் துடித்தது என்னுடல்

மீண்டும் அவரை அணுகி
மீளாத் துயரை விளக்கி
விடை என்ன எனக் கேட்டால்
மருந்தின் வீரியம் மங்கியுள்ளது என்றும்

மாற்று மருந்தை வாங்கி உண்ண
பரிந்துரைத்த மருந்தின் விலை மூவாயிரம்
நோய் தீருமுன் மருந்தின் விலைக்காரணம்
விளங்க வேண்டி வியாபாரியிடம் வினவ

மருந்துக்கு இலாபம் நானூறு மடங்கு என்றும்
விற்காமல் போனால் விரைந்து அழித்து
உற்பத்திச் செலவை ஓரளவு சரிக்கட்டி
உற்பத்தியாளர் வாழ வழியே இந்த இலாபம் என்றனர்.

நோயாளிகளே நோய்க்காண உள்ளோரே
தாழ உரைக்கிறேன் தவறேதும் செய்யாமல்
தரணி வாழும் வரைக்கும் நோய்க்காணா இருந்தால்
மருந்து உற்பத்தியாளர் உயிர் வாழமாட்டார்

எனவே அடிக்கடி நோய்க்கண்டு
திங்களுக்கு பத்து தடைவையேனும்
மருத்துவரை அணுகி மருந்தை உண்ணுங்கள்
அரசும் அரசாங்கமும் அழகுற வாழும்

நீங்கள் எவ்வகை கெடினும் - அரசுக்கு
யாதொரு துன்பம் இல்லை - நம்மை
அடி முட்டாளாய் வைத்து இருப்பதே
அரசின் மாபெரும் கொள்கை.
--- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (16-Apr-19, 4:33 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 695

மேலே