அந்த நீலக் கடற்கரை ஓரம்

அந்த நீலக் கடற்கரை ஓரம்
அந்த நீலக் கடற்கரை ஓரம்
தடங்களால் தன் முகத்தை மூடி
மல்லாந்து கிடக்கிறது மணற்படுக்கை…...
ஏதோ ஓர் உணர்வினை
கக்குவதாய் அத்தடங்கள்…..
ஆனந்தம் பீறிட்ட ஆர்ப்பரிப்பின்
எச்சங்களாய்…….
சில தடங்கள்….
நிழல் கொளுத்த விருட்சங்கள்
விழுவித்த விதைகளாய்……
சில தடங்கள்……
அமைதியை அறுவடை செய்யும்
கோடாரியாய்….
சில தடங்கள்…..
நிராசைகளின் எடை கூடி
சரிந்து விட்ட பாரமாய்……
சில தடங்கள்…..
தன்னுள் தனைத் தேடுவோனின்
தோண்டல்களாய்……
சில தடங்கள்……
காதலில் சிக்குண்டோனின்
மோகச் சிந்தல்களாய்…..
சில தடங்கள்…….
காதற்ச் சிறை மீண்டானின்
நிம்மதிப் பெரு மூச்சாய்…..
சில தடங்கள்…..
இற்றுப் போய் தெரு சேர்ந்த
ஓலைச் சுவடிகளாய்….
சில தடங்கள்….
வறுமையில் தொலைந்தவனின்
அடையாள ஓவியமாய்….
சில தடங்கள்….
சு.உமா தேவி