பூ மலர்ந்தது பறித்துச் சென்றாள் பாவை
பூ மலர்ந்தது
பறித்துச் சென்றான் பக்தன் அருச்சிப்பதற்கு
பூ மலர்ந்தது
பறித்துச் சென்றாள் பாவை தொடுத்து சூடிக்கொள்வதற்கு
பூ மலர்ந்தது
ரசித்து நின்றான் கவிஞன் வெண்பாவில் சொல்வதற்கு
பூ உதிர்ந்தது
மண்ணில் புரண்டது வாடிச் சருகாகி மண்ணோடு கலந்தது
பயனற்றுப் போயிற்றே என்று வருந்தினேன்
ஏதோ ஒரு குரல் கேட்டது
மண்ணோடு கலந்து உரமாகி இதோ பூத்துக் குலுங்குகிறோம்
அவன் இறைவனை அருச்சிக்கட்டும் அவள் தொடுத்துச் சூடட்டும்
நீ எழுதடா உன் பாவை நாங்கள் வாழ்த்துகிறோம் என்றது !