ஸ்வேதா தெர்வுசெய்த கதை --------------எர்னெஸ்ட் ஹெமிங்கவேயின் A clean well-lighted place ஒரு சுத்தமான, நன்கு ஒளியூட்டப்பட்ட இடம்
பொழுது மிகவும் பிந்திவிட்டிருந்தது. அனைவரும் அந்த விடுதியை விட்டு வெளியேறியிருந்தனர் ஒரு வயோதிகரைத் தவிர. மின் விளக்கினால் விழுந்த இலைகளின் நிழல் தன் மேல் படும்படி அவர் அமர்ந்திருந்தார். பகல் முழுக்கத் தூசி படிந்திருக்கும் அத்தெருவில் தூசடங்கி பனிப்படர்ந்திருந்தது. அந்த அந்தி வேளையில் அங்கே அமர்ந்திருப்பது அந்த காது கேளாதவருக்குப் பிடித்திருந்தது. இரவில் நிலவும் நிசப்தத்திலிருந்த வித்தியாசத்தை அப்போழுது அவரால் உணர முடிந்தது.
விடுதியிலுள்ள இரண்டு பணியாட்களுக்கும் தெரியும் அந்த முதியவர் குடித்திருக்கிறாரென்று. என்ன தான் நல்ல வாடிக்கையாளர் என்றாலும் போதை சற்றுக் கூடினால் பணம் தராமல் அவர் கிளம்பிவிடக்கூடும். இதை கருத்தில் கொண்டு இருவருமே அவர் மேல் ஒரு கண் வைத்தவாறு இருந்தனர்.
“சென்ற வாரம் அவர் தற்கொலை செய்ய முயற்சித்தார்" என்றான் அதில் ஒருவன்.
"ஏன்?”
“அவர் துயரத்தில் இருந்தார்.”
“எதனால்?”
“காரணம் ஏதுமில்லை”
“எதுவுமில்லை என உனக்கு எப்படித் தெரியும்?”
“அவரிடம் தான் நிறையப் பணம் உள்ளதே”
விடுதியின் கதவுப்பக்க சுவர் அருகே கிடந்த மேசையில் அவர்கள் இருவரும் வெளி முற்றத்தைப் பார்த்தபடி அமர்ந்தனர். காற்றில் மெலிதாக அசையும் இலைகளின் நிழல் நடுவே வீற்றிருக்கும் அக்கிழவரைத் தவிர வேறெந்த மேசையிலும் ஆளிருக்கவில்லை. ஒரு பெண்ணும் ஒரு ராணுவ வீரனும் அத்தெருவின் வழியே நடந்து சென்றனர். தெருவிளக்கின் ஒளி அவன் காலரிலிருந்த பித்தளை எண் தகட்டில் பட்டுப் பிரதிபலித்தது. அந்தப் பெண் தன் தலையைத் துணியேதும் கொண்டு மூடவில்லை. அவனது நடைக்கு ஈடு கொடுத்தபடி அவள் வேகமாக நடக்க முயன்றாள்.
“அவன் காவலாளியிடம் அகப்படுவான்” பணியாட்களில் ஒருவன் கூறினான்.
“அவரிடம் அவன் சிக்கினால் மட்டும் என்ன?”
"இத்தெருவை விட்டு அவன் விரைவில் தப்பித்தால் நல்லது. இல்லையெனில் காவலாளியிடம் நிச்சயம் பிடிபட்டுப் போவான். அவர்கள் ஐந்து நிமிடம் முன்னர் தான் அவ்வழியே சென்றனர்”
நிழலில் அமர்ந்திருந்த வயோதிகர் கண்ணாடி கோப்பையால் தன் தட்டைத் தட்டி ஒலியெழுப்பினார். இருவரில் இளையவன் அவரருகே சென்று “என்ன வேண்டும்?” என்று வினவினான்.
கிழவர் அவனைப் பார்த்து “இன்னுமொரு பிராந்தி” என்றார்.
“உங்களுக்குப் போதை முற்றிவிடும்” கிழவர் மீண்டும் அவனைப் பார்த்தார். அவன் அங்கிருந்து கிளம்பலானான்.
“முழு இரவும் அவர் இங்கு தான் இருப்பார்” தன் சக பணியாளனிடம் கூறினான். "எனக்கு தூக்கம் வருகிறது. மூன்று மணிக்கு முன்னால் நான் உறங்கப்போவதே இல்லை. அந்த ஆள் அன்றே தற்கொலை செய்திருக்கலாம்”
அந்த பணியாள் விடுதியிலுள்ள மது அடுக்கிலிருந்து பிராந்தி புட்டியையும் ஏந்தும் தட்டையும் எடுத்துக்கொண்டு அந்த முதியவரின் மேசை நோக்கி நடந்தான். தட்டை கீழே வைத்து விட்டு, ஒரு கோப்பை நிறைய பிராந்தியை அவருக்காக ஊற்றினான்.
“போன வாரமே நீ உன்னை மாய்த்திருக்கவேண்டும்” என்று அந்த செவிடரிடம் முனகினான். கிழவர் தன் விரல்களால் சைகை காண்பித்து
"இன்னும் கொஞ்சம்” என்றார்.
அவன் ஊற்றிய பிராந்தி, கோப்பையை நிரப்பி, தண்டின் மேல் வழிந்தோடி அடுக்கியிருந்த தட்டுகளில் முதலிலிருந்த தட்டின் மேல் சிந்தியது. கிழவர் "நன்றி” என்றார்.
மீண்டும் அந்த புட்டியை விடுதியினுள் எடுத்துச் சென்றான். பின் மற்றொரு பணியாளன் அருகே சென்று அமர்ந்துக்கொண்டான்.
“அவருக்கு போதை முற்றிவிட்டது”
"எல்லா இரவுகளையும் அவர்
போதையிலே கழிக்கிறார்”
"எதற்காக அவர் தற்கொலை செய்ய நினைத்தார்?”
"எனக்கு எப்படித் தெரியும்?”
“அதை எவ்வாறு செய்ய துணிந்தார்?”
“கயிறிட்டுத் தூக்கில் தொங்கினார்”
"அறுத்தது யார்?”
"அவருடைய மருமகள்”
“ஏன் அவர்கள் அப்படிச் செய்தார்கள்?”
"அவர் ஆன்மாவிற்காக பயந்து”
“பணம் எவ்வளவு இருக்கிறது அவரிடம்?”
"நிறையவே”
“அவருக்கு எண்பது வயதாவதிருக்கும்”
"எனினும் அவர் ஒரு எண்பது வயதுக்காரர் என்பதை நான் சொல்ல வேண்டும்”
“அவர் வீட்டிற்குக் கிளம்பினால் பரவாயில்லை. நான் ஒரு போதும் மூன்று மணிக்கு முன்னால் தூங்கச் செல்வதில்லை. உறக்கத்திற்கு உகந்த நேரமா அது?”
"அவருக்கு பிடித்திருக்கிறது. அதனால் விழித்திருக்கிறார்”
“அவர் தனியாள். நான் அப்படி இல்லை. எனக்காக படுக்கையில் காத்துக்கிடக்கிறாள் என் மனைவி”
"அவருக்கும் மனைவி இருந்திருக்கிறாள்”
“இந்த நேரத்தில் அவருக்கு ஒரு மனைவி இருந்திருந்தாலும் அவர் நிலையில் எந்த மாற்றமும் வந்திருக்கப்போவதில்லை.”
“அதெப்படி சொல்ல முடியும்? மனைவி உடனிருந்தால் அவர் தேறியிருப்பாரோ என்னவோ.”
“அவர் மருமகள் தான் அவரைப் பார்த்துக் கொள்கிறாளே. அன்று கயிறு அறுத்தது கூட அவள் தான் என்று சொன்னீரே”
“தெரியும்”
“அவரளவுக்கு வயதாக எனக்கு விருப்பமில்லை. வயதானவன் அருவருப்பளிப்பவன்.”
“எப்போதும் அல்ல. கிழவர் சுத்தமானவர். சிந்தாமல் குடிப்பார். இப்போதும் கூட, நல்ல குடி. எப்படியிருக்கிறார் பார்”
"நான் அவரை பார்க்க விரும்பவில்லை. அவர் வீட்டிற்குச் சென்றால் நல்லது. வேலை செய்வோர் மீது எந்தவொரு மதிப்பும் அவருக்கு இருப்பதாய் தெரியவில்லை“
கிழவரின் பார்வை கோப்பையிலிருந்து விலகி சதுரப்பரப்பிற்கு அப்பால் நகர்ந்து, பின்னர் பணியாளர்களிடம் சென்றது. தன் கோப்பையைச் சுட்டிக்காட்டி “இன்னுமொரு பிராந்தி” என்றார்.
அவசரத்திலிருந்த பணியாள் அவரருகே சென்றான்.
"தீர்ந்தது”
குடிகாரர்களிடமும், வெளிநாட்டினரிடமும் முட்டாள்கள் பிரயோகிக்கும் வாக்கிய ஒழுக்கம் இல்லாத நடையில் அவரிடம் பேசினான்.
"இனி ஏதுமில்லை. மூடியாயிற்று”
“இன்னும் ஒன்று”
“இல்லை. தீர்ந்தது" அவன் மேசையின் ஓரத்தைத் துண்டால் துடைத்த பின் முடியாது எனத் தலையசைத்தான்.
கிழவர் எழுந்து, தான் பயன்படுத்திய தட்டுகளை மெல்ல எண்ணினார். பின்னர் சட்டைப்பையிலிருந்து ஒரு தோல் பணப்பையை வெளியில் எடுத்தார். தான் குடித்தவற்றிற்கான பணத்தை செலுத்தி ஒரு அரை பெசட்டாவை டிப்ஸாக வைத்துவிட்டு கிளம்பினார். தெருவில் அவர் போவதை அந்த பணியாள் பார்த்துக்கொண்டிருந்தான், ஒரு முதுக்கிழவர் தட்டுத்தடுமாறி ஆனால் கண்ணியத்துடன் நடந்து சென்றுக்கொண்டிருந்தார்.
அவனிடம் "அவரை ஏன் நீ இங்கேயே தங்கி குடிக்க விடவில்லை?” என நிதான குணமுடைய பணியாளன் கேட்டான். அந்நேரம் அவர்கள் விடுதியின் இரும்பு ஷட்டர்களை கீழ் இழுத்து மூடிக்கொண்டிருந்தார்கள்.
"நேரம் இரண்டரைக் கூட ஆகவில்லை"
“நான் வீட்டிற்குச் சென்று படுக்கவேண்டும்”
“ஒரு மணி நேரம். அதிலென்ன இருக்கிறது?”
“அவரை விட நான் அதை அதிகம் பொருட்படுத்துகிறேன்”
“ஒரு மணி நேரம் எல்லோருக்கும் ஒன்று தான்.”
“நீயும் கிழவரைப் போலவே பிதற்றுகிறாய். அவர் ஒரு புட்டியை வாங்கி வீட்டிலேயே குடிக்கலாம்”
"அதுவும் இதுவும் ஒன்றாகாது”
“ஒன்றாகாது தான்” மணமாகியிருந்த பணியாள் ஆமோதித்தான். அநீதிக்கு துணைப்போகும் படி பேச அவனுக்கு விருப்பமில்லை. அதே சமயம் அவன் அவசரத்தில் இருந்தான்.
“பின்னர் நீ? வழக்கமான நேரத்திற்கு முன் வீடு திரும்ப உனக்கு பயமேதுமில்லையா?””
"என்னை அவமானப்படுத்த நினைக்கிறாயா?”
“இல்லை, ஆம்ப்ரே (மனிதா). வேடிக்கைகாகச் சொன்னேன்”
"இல்லை” அவசரத்திலிருந்த பணியாள் ஷட்டரை கீழிழுத்து விட்டுச் சொன்னான். “மாறாக எனக்கு நம்பிக்கை உண்டு. நான் நம்பிக்கையே உருவானவன்”
“உனக்கு இளமை, நம்பிக்கை, வேலை எல்லாம் இருக்கிறது” மூத்த பணியாளன் கூறினான். “உன்னிடத்தில் எல்லாம் உண்டு."
"உமக்கு என்ன குறை?”
“அனைத்தும். வேலையைத் தவிர”
"என்னிடமுள்ளவை அனைத்தும் உன்னிடமும் இருக்கிறதே”
"இல்லை. எனக்கு என்றுமே நம்பிக்கை இருந்ததில்லை. நான் இளைஞனுமல்ல”.
“போதும் வா. உளறுவதை நிறுத்திவிட்டு விடுதியைப் பூட்டு”
“எந்நேரமாயினும் இங்கே தங்க விரும்புவர்களில் நானும் ஒருவன்." அந்த மூத்த பணியாளன் தொடர்ந்தான். “உறைவிடங்களுக்குத் திரும்பிட நினைக்காதவர்கள். இரவுகளை கழிக்க வெளிச்சத்தை நாடுபவர்கள். இவர்களுடன் கூடே நானும் இங்குத் தங்க விழைகிறேன்.”
"நான் வீடுத் திரும்பி நேரே என் படுக்கைக்குப் போக வேண்டும்”
"நாம் இருவரும் இரு வேறு குணம் படைத்தவர்கள்” மூத்த பணியாளன் கூறினான். அவன் இப்போது வீட்டிற்குச் செல்வதற்கான உடை உடுத்தியிருந்தான். “இளமை, நம்பிக்கை ஆகிய கூறுகள் அழகானவை என்றாலும், கேள்வி அவை பற்றியதல்ல. ஒவ்வொரு இரவும், விடுதியை மூட எனக்கு மனம் வருவதில்லை. யாராவது ஒருவருக்கு இவ்விடம் தேவைப்படக்கூடும் என்பதால்”
"ஆம்ப்ரே, இரவு முழுதும் திறந்திருக்கும் பொடெகாக்கள் உள்ளன”
"உனக்குப் புரியவில்லை. இது ஒரு சுத்தமான, மனதிற்கு இணக்கமான ஒரு விடுதி. நன்கு ஒளியூட்டப்பட்ட இடம். அதுவும் அருமையாக ஒளியூட்டப்பட்டிருக்கிறது. இலைகளின் நிழல் கூட இங்குத் தெரியும்”
“குட் நைட்” என்றான் இளைய பணியாளன்.
"குட் நைட்” என்றான் மற்றொருவன். மின் விளக்கை அணைத்து விட்டு அவன் தனக்குத் தானே பேசிக்கொள்ளத் தொடங்கினான்.
நிச்சயம் ஒளி தான் காரணி. ஆனாலும் ஒரு இடம் சுத்தமாகவும், புலன்களுக்கு இணக்கமாகவும் இருப்பது அவசியம். இசை தேவைப்படாது. கண்டிப்பாக உனக்கு இசைத் தேவைப்படாது. ரா பொழுதுகளில் ஏதோ ஒரு விடுதி மட்டும் திறந்திருக்கிறது என்பதற்காக அதன் முன்னால் கண்ணியமாக உன்னால் நிற்க முடியாது.
அவன் எதற்காக பயந்தான்? பயமும் அல்ல பீதியும் அல்ல. அது அவனுக்கு நன்கு பரிச்சயமான ஒரு உணர்வு - இன்மை. சகலமும் இன்மை, மனிதனும் இன்மையே. அது மட்டும் தான். கொஞ்சம் வெளிச்சம், சுத்தம் கூடவே ஒழுக்கம் அந்த இன்மைக்குத் தேவைப்படுகிறது. சிலர் அதை உணராமலே அதில் வாழ்ந்தனர் ஆனால் அவனுக்குத் தெரியும். அது அனைத்தும் ஒன்றுமில்லாதது - நாடா. நாடா இ புயே நாடா இ நாடே புயே நாடா. ஒன்றுமில்லை பின்னர் ஒன்றுமில்லை பின்னர் ஒன்றுமில்லை.
நாடாவில் இருக்கிற எங்கள் நாடாவே, உம்முடைய நாமம் நாடா, உம்முடைய இராட்சியம் நாடா. உம்முடைய சித்தம் நாடாவில் செய்யப்படுவதுபோல் நாடாவில் செய்யப்படுவதாக.
எங்கள் அனுதின நாடாவை எங்களுக்கு இன்று அளித்தருளும், எங்களுக்கு நாடா செய்தவர்களை நாங்கள் நாடா செய்வது போல் எங்கள் நாடாகளையும் நாடா அருளும். எங்களை நாடாவில் விழவிடாதேயும், நாடாவிலிருந்து எங்களை இரட்சித்தருளும். இன்மை நிறைந்த இன்மையாளே வாழ்க! இன்மை உம்முடனே!
அவன் நகைத்துக்கொண்டே ஒரு மது விடுதி முன் நின்றான். அங்கு ஒரு பளபளப்பான ஆவியால் இயங்கும் காபி இயந்திரம் வைக்கப்பட்டிருந்தது.
“என்ன வேண்டும்?” மது பரிமாறுபவர் கேட்டார்.
“நாடா”
"ஓட்ரோ லொக்கொ மாஸ்" இன்னுமொரு முட்டாள் மனிதன் என்று சொல்லித் திரும்பிவிட்டார்.
“ஒரு சிறிய கோப்பையளவு வேண்டும்” என்று பணியாளன் அவரிடம் கேட்டான். “இங்கே உள்ள ஒளி பிரகாசமாகவும் மனதிற்கு இணக்கமாகவும் உள்ளது. ஆனால் விடுதி மினுக்கின்றி இருக்கிறது.”
மது பரிமாறுபவர் அவனைப் பார்த்தார் ஆனால் பதில் ஏதும் அளிக்கவில்லை. உரையாடலுக்கு ஏற்ற நேரமல்ல அது என்று அவருக்குத் தோன்றியிருக்க வேண்டும்.
"உமக்கு இன்னுமொரு கோப்பிட்டா வேண்டுமா?”
“வேண்டாம். நன்றி” பணியாளன் வெளியே கிளம்பினான்.
அவனுக்கு மது விடுதிகளும், பொடெகாக்களும் பிடிக்கவில்லை. ஒரு சுத்தமான, நன்கு ஒளியூட்டப்பட்ட விடுதி அவை போலின்றி வேறு விதமாக இருக்கும்.
மறு யோசனை ஏதும் இல்லாமல் அவன் தன் அறைக்குச் சென்றான். படுக்கையில் வெறுமே படுத்துக் கொண்டு, பொழுது விடிந்து வெளிச்சம் வந்ததும் தூங்கிப் போனான்.
தனக்குத் தானே சொல்லிக் கொண்டான் , எப்படியும் இன்சோம்னியாவாக தான் இருக்கும். பலருக்கு இது இருக்கவே செய்யும்.
Swetha S