அந்த நாள் ஞாபகம்

அந்த நாள் ஞாபகம்
*************************************

மாடுகட்டிப் போரடிச்ச களத்துமேட்டு நிலமெல்லாம்
வீடுகட்டி நாறடிக்கும் அடுக்குமாடி குடிலாச்சு !

கூடுகட்டி இனம்பெருகும் குருவிவகைக் கூட்டமெல்லாம்
நாடித்தேடி மரங்களின்றி வீட்டுக்குள் பூந்திருச்சு !

காடுவெட்டி கழனிகண்ட வெள்ளாமைப் பெரியோர்கள்
கடன்கட்ட வழியின்றி தற்கொலையே முடிவாச்சு !

பாடுபட்டு உழைத்திட்ட நம்நாட்டு மனிதவளம்
கிட்டிவரும் காசுக்காய் சாப்ட்வேரில் அடங்கியாச்சு !

நடைகட்டி காததூரம் கடந்தநம் மானுடமோ
கடைகண்ணி செல்வதற்கே வாகனத்தில் ஏறியாச்சு !

சீறியெழும் கலையான சிலம்பாட்டம் நின்னுபோயி
சீரழிக்கும் சீட்டுக்கட்டு சூதாட்டம் பெருகிடிச்சு !

கணக்கிட்டு செலவழிச்ச நம்மவரின் குடும்பங்கள்
கனவுஎனும் பகட்டாலே நல்லாவே கவுந்திருச்சு !

தீர்த்தமாட சேத்திரங்கள் போயிவந்த நம்மினமோ
தீர்த்தமிடும் டாஸ்மாக்கே கதியென நின்னுடுச்சு !

வீடுகெட்டுப் போகாது காத்துவந்த சாரங்கள்
கேடுகெட்ட செயலாலே முழுசாவே அழிஞ்சிடுச்சு !

தொட்டிகட்டி பிள்ளைதனை கொஞ்சுகிற காட்சிபோயி --சினிமாவில்
அட்டிக்கட்டி எச்சியிடும் "இச் "சுக்கள் மிச்சமாச்சு !

எட்டுக்கட்டும் எட்டுக்கட்டை எசப்பாட்டு மறஞ்சுபோயி
மெட்டுக்கிடும் குத்துவகை பாட்டதுவே ரசனையாச்சு !

புதினங்கள் ஏகமாக மனுசமனம் மாறிப்போயி
புத்தம்புது கைபேசி சிறுவர்கள் கையிலாச்சு !

உண்பதற்கு நேரமின்றி உறங்குதர்க்கு மனமின்றி
கண்டதைப் பார்வையிட இணையவெளியே துணையாச்சு !

என்னாச்சு ஏதாச்சு எப்படிங்க இப்டியாச்சு
முந்தையநாள் இருந்ததெல்லாம் மீண்டுமினி வராதோ !

எழுதியவர் : சக்கரைவாசன் (14-May-19, 12:56 am)
பார்வை : 89

மேலே