இளையோர் மனநலம்
மனிதம் போற்றிட மானுடம் காத்திட
மண்ணில் படைத்திட்டான் மனிதனை இறைவன்!
மானுட மாண்பை மண்ணுக்கு உணர்த்திட
மண்ணில் அவதரித்தான் அவனே மகான்கள் வடிவில்!
இறைவன் படைத்திட்ட இயற்கையை மிஞ்சிய மாபெரும் படைப்புகளை
இம்மண்ணில் படைத்திட்டான் இன்றைய மனிதன்!
அணுவில் தொடங்கி ஆயுதம் வரையிலும்
செல்பேசியில் தொடங்கி செயற்கைக்கோள் வரையிலும்
ஈடில்லா படைப்புகளை இப்புவி பெறவே
இனிதாய் படைத்திட்டான் இன்புற்று வாழவே!
இத்தனை படைப்பிலும்
உண்மையில் பெற்றது என்ன?
உலகத்தை சுருக்கி உள்ளங்கையில் வைத்தது!
இயந்திர வாழ்வினை இனிதாய் தந்தது!
வேகத்தைப் பெருக்கி விவேகத்தைக் குறைத்தது!
வாழ்க்கைக் கல்வியை வருமானக் கல்வியாய் கொடுத்தது!
வாழ்க்கைக்கான வேலையை
வேலைக்கான வாழ்க்கையாய் மாற்றியது!
பரந்து விரிந்த வீடுகளை
செங்குத்தாய் அடுக்கி தீப்பெட்டியாக்கியது!
கூட்டுக்குடும்பத்தை சிதைத்து கூண்டுக்குள் அடைத்தது!
தனிக்குடும்பத்தை விதைத்து தனியாய் தவிக்கும் பொழுதுகளை தந்தது!
கையளவு கைபேசியில் கடலளவு தகவல்கள் கொடுத்தது!
இணையதளம் வழியே இயக்கத்தைக் குறைத்தது!
பயணம் செய்வதில் பாதி நேரம்!
வேலை செய்வதில் மீதி நேரம்!
நல்லதும் கேட்டதும் நம் கைகளுக்குள்ளே-எதை
பயன்படுத்துவது என்பதோ அவரவர் விருப்பத்துக்குள்ளே!
அத்தனை படைப்பும் நன்மைக்காக
ஆனால் அதுவே கெடுதலுக்காக!
இன்றைய உலகில் இத்தனை வசதி-அதனால்
இல்லை இளையோருக்கு மன நிம்மதி!
நற்பண்புகளைப் புகட்டிட நற்பள்ளிகள் இல்லை
நல்வழிப் படுத்திட வீட்டில் நம்மவரும் இல்லை!
மன அழுத்தம் போக்க மனிதன் விழைகின்றான்!
மனமயங்கும் விடயங்களில் இளையோன் வீழுகின்றான்!
காரணம் அனைத்தும் காலம் தந்ததே!
களைந்தே அதனை காப்போமே இளையோனை!