ஆரோக்கியமே ஆனந்தம்
தாயிடம் பெற்ற
உடலை
ஆரோக்கியம்
இல்லாமையால்
நோயிடம் தாரை
வார்க்கிறோம்
உடல்
பயிற்சி இல்லாததால்
நம் வாழ்க்கையில்
விழுகிறது வழுக்கை
நோய் நம் மீது
தொடுக்கின்றது வழக்கை
உடல் உறுதிக்கு
கொடுக்கின்றது இழுக்கை
ஆகவே
ஆரோக்கியம் காக்க
போக்கிடுவோம்
நம் மீதுள்ள அழுக்கை
இல்லையெனில்
கண்களைத் தாக்கிவிடும்
அழுகை
நாம்
கண்களுக்கு
வைக்கவேண்டிய மை
தூய்மை
நாம்
சுத்தம் காத்தால்
ரத்தத்தில்
ஏன் வெள்ளை
அணுக்களுக்கும்
சிவப்பு அணுக்களுக்கும்
நடக்கப்போகின்றது
யுத்தம்
நாம்
தாரத்தை
பேணிக்காக்கிறோமோ
இல்லையோ
சுகாதரத்தைக்
காத்திட வேண்டும்
சுகாதாரம்
நம் உடலின்
ஆதாரம்
அதற்கு வலு சேர்க்க
உண்போம் நல்ல
ஆகாரம்
தவிர்ப்போம் காரம்
தண்ணீர் குடித்தால்
கண்ணீர் குறையும்
நம்மை
எரிக்கின்ற தீ வியாதி
வியாதிக்கு வரும் முன்பே
வை தீ
அன்று
உணவே மருந்து
இன்று
மருந்தே பலருக்கு உணவு
நகைச்சுவையே
கவலையின் மாத்திரை
நாம் மனதிலிருந்து
எடுப்போம் வஞ்சகம்
எனும் மா திரை
யாருடைய
வாழ்க்கையிலும்
விளையாடாது
நம் வலக்கையில்
மட்டும் விளையாடுவோம்
கள்
மனிதன்
கல்லீரலின்
தலையில் போடும் கல்
ஆராரிரோ
நம் ஆரம்பம்
ஆரோக்கியமே
நம் ஆனந்தம்