தி எக்ஸார்ஸிஸ்ட்

அப்பா நீங்க ஒரு பேய்க்கதை எழுதுங்க.
மாயம் மந்திரம் இல்லாம எழுதணும்.
சொல்லிவிட்டு பதினோரு மணிக்கு சென்று விட்டாள் மகள்.

பேய் படங்கள் ஆர்வத்துடன் பார்ப்பேன்.
சிறு வயதில் நிறைய ஆங்கில படங்கள் வரும். தரை டிக்கெட் எண்பது பைசா.
படத்தை பற்றி நண்பர்களிடம் பேசும்போது விறுவிறுப்பை ஏற்றிக்கொண்டே இருப்பேன். அப்போது தான் கூட்டு சேர்வார்கள். நாற்பது பைசாவில் சமோசாவுடன் என் காரியம் சுபமாய்  முடியும்.

ஆங்கில பேய்கள் ஈவு இரக்கம் இல்லாத ஒன்று. ஆக அது பயமுறுத்தும் முன்பே பயத்தை வடிகட்ட யாரேனும் பாத்ரூமில் குளித்து கொண்டிருந்தால் உடை மாற்றினால் அது கூடுதல் போனஸ்.

இப்படித்தான் ரோஸ்மேரி என்னும் படத்தில்...

மணி இப்போதே 12.30 தூக்கம் வேறு வருகிறது. பேய் அலையும் நேரம் அல்லவா? மாடி தனிஅறை இரவு எல்லாமே பேய்களுக்கு ஜாலியான அட்மாஸ்பியர். நான் யோசித்து ஒன்றும் கிடைக்கவில்லை. சிலர் இந்த சப்ஜெக்ட்டில் எப்படி எழுதி தள்ளுகின்றனர் என்ற யோசனை வேறு.

சற்று வயதாகி விட்டதால்...

(ரொம்ப கொஞ்சம்தான்...இங்கே யாரும் ஸ்லைடு போட்டு காரியத்தை கெடுக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டு கொள்கிறேன்.இப்போதான் ஒருமாதிரியா போய்ட்டு இருக்கு).

பேய் பயம் போயே போய்விட்டது. இப்போது வரும் படமெல்லாம் பாராநார்மல் என்று மனோதத்துவம் விஞ்ஞானம் உம்மாச்சி எல்லாம் கலந்து கட்டி உருமி அடித்து கிலி காட்டுகின்றனர்.
அம்மணிகள் கழுத்தில் இருந்து பாதம் வரை கவுன் போட்டுக்கொண்டு பெட்டில் பல் காட்டி பயமுறுத்த பார்க்கிறார்கள்.
நினைக்க நினைக்க எரிச்சல்தான் வந்தது.

அந்த காலத்தில் ஈவில்டெட் கூட...ஒரு நிமிடம் பொறுங்கள்.  இப்போது நினைவுக்கு வருகிறது.
ஆம்...அவள்...குல்கர்னி...இல்லை இல்லை குல்கர்னி 2010களில்...இது நடந்தது 90களில்...

அப்போது கல்லூரியில் வேலை பார்த்து வந்தேன். நூலகம். எஸ்.ஆர். ரங்கநாதன் அந்த நூலகம் வர மாட்டார் என்ற தைரியத்தில் எனக்கு வேலை போட்டு கொடுத்தார்கள். முதலாளிகள் நம்பிக்கையை நான் காப்பாற்றி கொடுப்பவன். ஒன்பது மணிக்கு திறந்து வைத்து கொண்டால் போதும். ராசுக்குட்டி பாக்யராஜ் மாதிரி களை கட்டும்.

பேராசிரியர்கள் வகுப்பை ஒப்பேற்றிவிட்டு ஐக்கியமாகி விடுவார்கள். எங்கள் கும்பலில் திருஷ்டி விழும். அத்தனை அந்யோந்நியம்.

ஒரு அகடமிக் இயரில் அவள் வந்தாள்.
சட்டென்று பெயர் நினைவில் வரவில்லை.
எப்படி வரும்? ஒன்றா..இரண்டா...?

காட்சிகள் கண்ணில் விரிகிறது. அன்று போலவே இன்றும் மிதக்கும் உணர்வு.
இந்த என்டார்ஃபின் அப்படியே வேலை செய்கிறது இன்னும் கூட.

சாதாரணமாகவே அவளுடன் பேசுவேன். எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன். அப்போது அது சக்கை போடு போட்டது.
ஸோ... மிகுந்த மரியாதைக்கு உரிய
ஆசிரியர்கள் அவர்கள்.

சாதாரண தோழமையாக பரிமளித்த அந்த உறவு நாளடைவில்...டேய் உன் ஆளு வர்றா என்று சக நண்பர்கள் அழுத்தமாய் சொல்லும்போது கிர்...வந்தது.

அப்போதுதான் ஒரு பேய் படம் வந்து இருந்தது. அது பற்றி பேசிக்கொண்டே இருந்தனர்.

நீங்க அந்த மூவீ பாத்தாச்சா ஸ்ரீ?

இன்னும் இல்லை...நீ...நீங்க?

சும்மா நீ வா போ னே பேசுங்க. போர்மாலிட்டி வேணாம்.

ஓ...நைஸ்...

பாத்தாச்சா நீங்க?

இல்லை. நீ ஏக்ஸார்சிஸ்ட் பார்த்து இருக்கியா?

நோ

கம்ப்ளீட்டா எலெக்ட்ரோமாக்நடிக்.

அப்படியா? அவள் ஆச்சர்யத்தில் பூத்தாள்.
என்னவோ இவளே அந்த தியரியை கண்டுபிடித்த மாதிரி.

ஒரு லோக்கல் ஆதர் புத்தகத்தை வைத்து வருங்கால தூண்களை கொன்று குவிக்கும் கலையில் மன்னி. இதையெல்லாம் அவளிடம் சொல்ல நான் என்ன லூசா?

1972 ல வந்த படம். வில்லியம் டைரக்டர்.
கிராபிக்ஸ் ஒன்னும் கிடையாது. இந்த தியரி படம் முழுக்க பேசும்.

அவள் இடைமறித்து அந்த அறிவியலில் என்னவோ கேட்டு தொலைக்க ஒன்றும் புரியவில்லை. அப்போது யூட்யூப் எல்லாம் அத்தனை பரிச்சியமும் இல்லை.

சட்டென்று பேச்சை மாற்ற வாலி கவிதை பிடிக்குமா என்றேன்.

கிரேட் பொயட்.

அட...நம்ம டிராக்...

வைரமுத்து என் பக்கத்து ஊர்தான்.

பார்த்து இருக்கீங்களா?

பேசியே இருக்கேன்.

அது சொல்லுங்க ப்ளீஸ்

எத்தனை அள்ளி விட்டாலும் அலுங்காமல் குலுங்காமல் கேட்டு கொண்டே இருப்பாள். போதாதா...

செமஸ்டர் லீவ் வந்தால் இருப்பு கொள்ளாது. நானோ நான்-டீச்சிங். ஓர வஞ்சகத்துடன் லீவ் கிடைக்கும். டீச்சிங் என்றால் வாரி வழங்குவர். என் சாபங்களை பெற்றுக்கொண்டு நண்பர்கள் பஸ் ஏறினர்.

அவள் புதிதாக சேர்ந்ததால் அவளுக்கும் லீவில் ஆப்பு வைக்கப்பட்டது. இதை
என்னிடம் சொல்லும்போது என் முகத்தை நீங்கள் கற்பனை செய்ய வேண்டும்.

உள்ளே மிருகம். வெளியே தெய்வம்.

அந்த விடுமுறை நாட்களில் யாரும் இல்லாத கடையில் டீ ஆற்றும் வேலைதான் எனக்கு. கல்லூரிக்கு செல்லும் கையோடு கணையாழி, காலச்சுவடு, புதிய எழுத்து இன்னும் சில புத்தகங்கள் எடுத்து கொண்டு போய் விடுவேன்.

வர வர நீ மின்னிட்டு இருக்கடா என்ற ஒரேயொரு பொறாமை கொண்ட நண்பன் கூடவே இருந்தான். அவன் ஏன் போகவில்லை என்று நீங்கள் கேட்டால் இப்போ அது ரொம்ப முக்கியமா என்ற பதிலையும் சொல்லி கொள்ளுங்கள்.

அவள் காலையில் வந்துவிடுவாள். கொஞ்ச நேரம் பேப்பர் பார்த்து என் புத்தகங்களை வாங்கி கொண்டு படிக்க ஆரம்பிப்பாள்.

எப்படி ஸ்ரீ இதுவெல்லாம் படிக்கறீங்க?
ஒன்னும் புரியவில்லை என்றாள்.
இப்போது புரிகிறதா நான் ஏன் புரியாது எழுதுகிறேன் என்று...

அவளுக்கு புரிய வைக்க முயற்சி செய்தேன். அப்போது ஆச்சர்யம் கொள்ளும் அவள் முகம் பற்றி சொல்ல வேண்டும். வேண்டாம் சொன்னால் சுமி கமெண்ட் பாக்ஸில் ஜொள்ளை குறை என்று போடுவார்.

பேசிக்கொண்டே இருந்தோம். நொடிகள், மணிகள்,நாட்கள் அருமை அருமை என்று உண்மையாகவே சொல்லும்படி கழிந்தன.

அவள் கால்களில் மஞ்சள் மின்னும்.

நீ எப்பவும் மஞ்சள் தேச்சுப்பியா..

ம்

என்ன சோப் யூஸ் பண்ணுவே

பியர்ஸ். நீங்க

லைஃப்பாய். அதை நான் சொல்வேனா...அப்போது பார்த்து விலை உயர்ந்த சோப்பின் பெயர் நினைவுக்கு வரவில்லை. லக்ஸ் என்றேன். என்னை ஒரு மாதிரியாக பார்த்தாள்.

எனக்கு இந்த காஸ்மெடீஸ் அறிவு சுத்தமாய் கிடையாது. பாண்ட்ஸ் பவுடர் விட்டால் உலகில் வேறு ஒன்றும் இல்லை என்று நினைத்த காலம்.

ஏன் கூடாதா?

இல்ல. கேட்டேன்.

இனி சுதாரித்து கொள்ள வேண்டும்.

அவளை கவிதைக்குள் இழுத்து கொண்டு போனேன். உலக கவிஞர் பட்டியல் எப்போதும் என்னிடம் இருக்கும்.

பேசிக்கொண்டே இருந்தபோது ஒரு நாள் கேட்டேன்.

காதல் பற்றி என்ன நினைக்கிறே?

அவள் ஒரு வினாடி என்னை பார்த்து மிக மெதுவாய் தலை கவிழ்ந்தாள்.
நீங்கள் கற்பனை கூட செய்யமுடியாது வாசகர். நான் தனித்தனி ஸெல்லாய் உதிர்ந்து கொண்டிருந்தேன்.

அவளிடம் ஒரு நடுக்கம் விரவியது. அவள் விரலால் எதுவோ வரையவும் சட்டென்று புன்னகைக்கவும் செய்தாள். ஒரு ஆழ்ந்த பெருமூச்சை அவள் இழுத்து விட்டதும்....
அடேங்கப்பா...நிரம்பி விட்டேன்.

நாங்கள் எழுந்து கேன்டீன் சென்றோம்.
வறுமையின் நிறம் சிகப்பு படத்தில் சிப்பி
இருக்குது பாடல் கேட்டது. ஆனால் கைகள் உரசவில்லை. தள்ளியே நடந்து வந்தாள்.கள்ளி.

ஸ்ரீ நாளைக்கு ஊருக்கு போய்ட்டு வெகேஷன் முடிச்சிட்டு வரேன்.

உனக்கு கிடைச்சிடுச்சா...

ம்

ஒரு வாரமா

ம்

ரொம்ப மிஸ் பண்ணுவேன்.

பண்ணுங்க.

நீ

நானும்.

எல்லோரும் விடுமுறை முடிந்து கூடினோம்.  வழக்கம்போல் ஒரு பிரயோஜனமும் இல்லாது வெட்டிப்பொழுதை கழித்துவிட்டு மீண்டும் கூடினோம். அவள் மட்டும் வரவில்லை. நான் அவளை தேடிக்கொண்டே இருந்தேன்.

எங்கடா உன் ஆளு என்று கேட்டவர்க்கு பதில் சொல்ல முடியாமல் தவித்தபோதும் கொஞ்சம் பெருமையாய் இருந்தது.

அவள் பின்னும் வரவில்லை.

இந்த கதையில் க்ளைமாக்ஸ் என்று ஒன்றும் கிடையாது.


அவளுக்கு ஆக வேண்டியது ஆகி இருக்கும். ஏதேனும் பங்களாகாரன் சிங்கப்பூர்வாசி அள்ளிக்கொண்டு போய் இருப்பான்.

நண்பர்கள் சரக்கடிக்க நான் ஒரு காரணம் ஆனேன். விடுடா நெப்போலியனை வச்சு பஞ்சாயத்து பண்ணிக்கிடலாம். வசந்தி வாந்தியா வந்துடவா...

அழுகையே வராத என்னை அழ வைத்து பார்த்தனர். அவர்களோடு குடியாய் கிடந்த போது சங்கரன் கேட்டான்.

உங்களுக்குள் அப்படி சூப்பரா ஓடிட்டு இருந்துச்சு. என்னதாண்டா ஆச்சு. நீ சொன்னியா இல்லையா...

என்ன சொல்லணும்

ஐ லவ் யூ சொன்னியா?

காதல் பத்தி என்ன நினைக்கிறே னு கேட்டேன்

அப்பறம்

அவ வெக்கப்பட்டா...

அப்பறம்

டீ குடிக்க போனோம்.

அப்பறம்

சிப்பி இருக்குது முத்துமிருக்குது பாட்டு கேட்டுச்சு

அப்பறம்

அவ்ளோதாண்டா...

இந்த காதலை புரிஞ்சுக்க தெரியாத அவ
உனக்கு தேவையே இல்லை.
நீ பேசாம இரு. கவலை விடு.என்றான்.

நண்பர்கள் எழுந்தனர். நடக்க முடியாது ஆடிக்கொண்டிருந்த என் பையில் கை விட்டு மூவாயிரம் ரூபாய் பில் கட்டிவிட்டு
காமாட்சி சொன்னான்.

விடுடா லூஸ்ல...சிவில் ல ஒரு சூப்பர் பிகர் வந்துருக்கு. ஆவணியில் முடிச்சிடலாம்.

அது அடுத்த வெகேஷன் வரும் காலம்.

எழுதியவர் : ஸ்பரிசன் (21-May-19, 4:30 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 142

மேலே