கண்ணாடி

கீழிருந்து சில படிகள் ஏறிச்செல்ல முடிவில் அந்த விரும்பத்தகாத அறைகளை பார்க்க முடிகிறது. மனம் ஏற்றுக்கொள்ள தயங்கும் எதிரெதிர் அடுக்குகளில் அந்த அறைகள் சூழ்ந்து இருந்தன.

மைய அறைக்கு முன்பாக அந்தக்கால தகர சேர்களும் இந்தக்கால பிளாஸ்டிக் சேர்களும் இருந்தன. அதில் மனிதர்கள் இருந்தனர்.

ரபேசன். இவர் மனநோய் மருத்துவர்.

இவர் நண்பர் என் முதலாளி. முதலாளி கொடுத்த விட்ட ஒரு கவருக்கு நான் தூதுவன்.
கொடுத்து விட்டு கிளம்பி விடுவேன். நேரே பார்த்து கொடு என்பது உத்தரவு. நான் உத்தரவுக்கு பணிவேன்.

காத்திருக்க எனக்கு சம்மதம். காத்திருந்தாலும் அந்த நேர உளைச்சலை எல்லாம் இந்த டோக்கன் கொடுப்பவள் இடை போக்கிவிடும்.

உக்காருங்க...சற்று கிசுகிசுப்பான அந்த கட்டளைக்கு உரிய மரியாதையுடன் அந்த ஆள் அருகில் அமர்ந்து கொண்டேன்.

அந்த 'இடை' கண்களால் மொத்த கூட்டத்தையும் அளந்து எல்லோர் கையிலும் ஒரு எண்ணை கொடுத்தது. எனக்கும் வந்தபோது நான் வந்த விஷயத்தை சொன்னதும் 'இடை' டாக்டர் வரட்டும் என்றபடி போய் விட்டது.

அந்த கூட்டத்தில் ஒரு பதினைந்து பேர் இருக்கலாம். அதில் பாதி மனநோய்காரர்கள்.
அந்த நோய் பெயர் கூட அவர்களுக்கு தெரியாது. சொல்லப்படாது.

உக்கிரத்துக்கு ஏற்ப கரண்ட் முதல் மாத்திரை வரை தரப்பட்டு அவர்கள் நிம்மதியாய் இருந்த உலகம் சின்னாபின்னமாய் அழிக்கப்பட்டு யதார்த்த உலகுக்கு அழைத்து வரப்படுவர்.

பின் அவர்களும் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தி கொள்ள முடியும்.

பக்கத்தில் இருந்த ஆள் கொஞ்சம் விவரமான ஆள் போல் இருந்தார். கையில் ஒரு நீயூயோர்க்கர் மாகசின் இருந்தது. என் வாசிப்பு அறிவை காட்ட கழுத்தை ஒட்டகம் போல் ஒடுக்கி அதை உற்றுப்பார்க்கும் முயற்சி செய்ய...அவர் புன்னகையுடன் காட்டினார்.

பழைய நீயூயோர்க்கர்...ரொம்ப பழயதாய் கூட இருக்கலாம். இது மரை கழண்ட கேஸ் இல்லை என்று பேச்சுதுணைக்கு வைத்துக்கொள்ள முடிவு செய்தேன். 'இடை' வருவதும் போவதுமாய் இருந்தது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

"இந்த மாகசின் கடந்த இருபது வருடமாக இந்த கைகளில் மட்டுமே வைத்திருக்கிறேன் என்றால் உங்களால் நம்பமுடியாது" என்று புன்னகைத்தார். எனக்கு 'திக்'கென்று இருந்தது.

பார்க்க நன்றாகத்தானே இருக்கிறார்...அப்பறம் என்னவாக இருக்கும். என்று யோசித்தபடியே சார் பெயரென்னவோ என்றேன்.

புதுப்பூனை புது எஜமானனை வாலை உயர்த்தி நோட்டமிடுவது போல் பார்த்துவிட்டு "பெயரை விடுங்கள்...எனக்கொரு டிஃபரெண்ட் ப்ராபளம்" என்றார்.

பேசும் போதே மேலே விழுந்து பிடுங்கும் லட்சணம் தெரியவில்லை என்றாலும் வாசல் பக்கம் விழுந்து ஓட ஏதுவான இடத்தில் வாகாய் அமர்ந்துள்ளோம் என்னும் ரெட்டை தைரியத்தில் பேச முடிவெடுத்தேன்.

உங்கள் பிரச்சினை என்ன?

நீங்கள் முகம் பார்க்கும் கண்ணாடி முன் பார்க்கும் உங்கள் உருவத்தை பிம்பம் என்றுதானே சொல்வீர்கள்?

ஆம். உண்மையும் அதே.

அந்த பிம்பம்தான் உண்மையான நீங்கள். ஆனால் உங்கள் பிம்பமோ யதார்த்த உலகில் இருப்பது போல் உங்களை நம்ப வைக்கிறது.

நீங்கள் அதில் சிக்கி இருப்பது உங்களுக்கு தெரியாதவண்ணம் உங்கள் மனம் படைக்கப்பட்ட பின்னப்பட்ட ஒன்று என்றது நீயூயோர்க்கர்.

ஓ..அதற்குதான் டாக்டரிடம் வந்தீர்கள் போலும் என்றேன் அப்பாவியாய்.

அது மெல்ல ஒரு புன்னகையை தருவித்து என்னை உற்று பார்த்தது.

ஆம்...அதற்குதான்...ஆனால் இந்த ப்ரசனைக்கு டாக்டரை பார்க்கப்போவது நான் இல்லை...

பின்?

நீங்கள்...

நானா...?நான் வந்த விஷயம் வேறு.

என் நோக்கம் ஒரு செய்தி தொடர்பான ஒன்று. நான் ஒருவரின் தூதுவன்.

ஆம்...நாம் தூதுவர்கள் மட்டுமே. ஏனெனில் இங்கு உண்மையான நிலையான ஒரே ஒரு விஷயம் மட்டுமே உண்டு. அது நீங்கள் என்பது நான் மட்டுமே. என்றார்.

சரி...இது ஒரு வினோதமான நபர். அவர் மனம் நோகாது அன்பாய் பேசிவிடலாம். ஒரு மணி நேரத்தில் கூட டாக்டர் வரலாமே...

எப்படி என்றேன்?

காரணங்கள் நிலையாய் இருப்பது உண்டா?

இல்லை.

தத்துவம், சிந்தனை, கொள்கை, கோட்பாடுகள், தர்மங்கள், ஒழுக்கம், நாகரீகம் இப்படி எதுவும் நிலை அல்ல சரியா?

ஆம் என்றேன். வாசலை பார்த்தபடி.

அதுபோல் ஒரு குறுகிய நேரத்தில் மனிதர்கள் தங்களை அறியாமல் ஒருவருக்கொருவர் மாற்றி கொண்டு விடுவார்கள்.

அதன்படி இப்போது நீங்கள் என்பது நான் என்று அவர் சொல்லி முடித்தபோது இதை இப்படியே விடக்கூடாது என்று முடிவு செய்தேன்.

உங்களால் ஆதாரம் தர முடியுமா?

இன்று நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம் என்று ஆதாரம் தர முடியுமா?

வாக்களிக்கிறோம்.

போதுமா?

வேறு?

உங்கள் ஒர் நியாயமான தொந்தரவை சீர் செய்ய எத்தனை அலைச்சல்களில் உயிர் விட வேண்டி இருக்கிறது? எத்தனை மன்னர்களை வணங்க வேண்டிய நிலை?

நீயூயோர்க்கர் கொஞ்சம் விஷயமுள்ள ஆள்தான் என்று பட்டது. நீ நான் என்று குழப்பிவிட்டு மெஸ்மரைஸ் செய்து ஆதார் உள்பட அனைத்தும் கேட்டு விடுவாரோ என்ற பயம் வந்தது.
நாம் உறுதியாக இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டேன்.

இதனால் என்ன செய்யலாம்? என்ன செய்ய முடியும்? என்றேன்.

ஒன்றும் இல்லை. ஒரு தகவல் இது சொன்னேன். நாம் யாரையெல்லாம் சந்திக்கின்றோமோ அவர்கள்தான் நாம்.

நாம் உண்மையில் அடுத்தவருக்கு மட்டுமே வாழ்கிறோம். இதை சொல்லி புரிய வைப்பதற்கு முன் என்னை பலவந்தமாக இங்கே கொண்டு வந்து விட்டனர் என்றார்.

அதுவும் நல்லதுதானே என்று சொல்ல அவர் முகம் மாறி விட்டது.

டாக்டரிடம் என்ன விசயமாக வந்து உள்ளீர்?

சொன்னேன்.

நீங்கள் அப்போது உங்கள் எஜமானன் வடிவில் வந்து உள்ளீர்கள்...நீங்கள் வரவில்லை என்பது தர்க்கத்தில் சரியா என்றார்.

ஓரளவு சரியாய் பட்டது. அது சரிதான்.

இப்போது முதல் நீங்கள் என்பது நான் என்று மாறி விட்டீர்கள். ஏனெனில் இத்தனை நபர்களை தாண்டி என்னிடம் நீங்கள் வரக்காரணம் அதுதான். இனி நான் முதலில் டாக்டரை சந்தித்தால் அவர் நான் ஆகி விடலாம். அல்லது நான் அவராகி விடலாம்...என்றார்.

நான் வாயை மூடிக்கொண்டேன்.

இனி பேசினால் நீயூயோர்க்கர் என்னை எந்த முடிவுக்கும் கொண்டு செல்ல முடியும் என்பதால் அவர் என்னை பார்க்கும்போது அனைத்தையும் ஏற்றுக்கொள்வது போன்ற பாவனையை வைத்துக்கொண்டேன். வேறு இடத்துக்கு போவதும் சற்று நாகரீகமான ஒன்றாய் இல்லை.

விட்டத்து பேன், பல்லி என்று பார்வையை மாற்றி கொண்டேன். அவர் என் காதுபக்கம் பார்ப்பது போன்ற குறுகுறு.

நீயூயோர்க்கர் சொன்னதில் என்னவோ இருப்பது போல் மனம் தனியே யோசிக்க ஆரம்பித்தது.

அவரின் ஒவ்வொரு வார்த்தையையும் பிய்த்து ஒட்டி கொண்டது. பொழுதும் போக வேண்டுமே?
மனதை அதன் போக்கில் விட்டுவிட்டு இடை வருகிறதா என்று ஒரு கண்ணிலும் நீயூயோர்க்கரை ஒரு கண்ணிலும் வைத்துக்கொண்டேன்.

டாக்டர் வந்து அறைக்குள் செல்ல இடை உள்ளே புகுந்தது. பத்து நிமிடங்கள் கழிந்தன.

முதலில் என்னை அழைக்க நான் நீயூயோர்க்கரிடம் சிநேகமாய் சிரித்து விட்டு உள்ளே சென்றேன்.

ஃபென்தடால் மணம் அறையில் கமழ்ந்து ஒரு கணம் தலை சுற்றி நின்றது. டாக்டர் அவரின் அந்த தெய்வீக புன்னகையை தொடர்ந்து உக்காருங்க...உங்கள் சீஃப் போன் பண்ணிட்டார்...உங்க பேர் கூட சொன்னார் மறந்து போச்சு சாரி...உங்க பேர் என்ன?

"பெயரை விடுங்கள் டாக்டர்...எனக்கொரு டிஃபரெண்ட் ப்ராபளம்" என்றேன்.

எழுதியவர் : ஸ்பரிசன் (22-May-19, 8:01 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : kannadi
பார்வை : 173

மேலே