புள்ளிகள்

ஒன்றும் தோன்றாதபோது நான் அவனை நினைத்து கொள்வேன்.

தமிழ் படங்களில் காட்டும் அசகாய சூரன் போலத்தான் அவனும் கல்லூரி காலத்தில். படிப்பை தவிர அனைத்திலும் ஜொலித்தான். நேரே திரைப்படம் இயக்க  முடிவு செய்து இருந்தான்.

இயக்குனர் ஆடூர் கோபாலக்ருஷ்ணனை சந்திக்க திருவனந்தபுரம் செல்லும் போது கட்டிப்பிடித்து பஸ் ஏற்றி அனுப்பினேன்.

காலங்கள் ஓடியது.

அது அமெரிக்காவில் கூட மொபைல் போன் இல்லாத காலம். இன்லேண்ட் லெட்டர் காலம். பொங்கல் வாழ்த்துக்களை முதலில் தபால்காரர் சொல்லும் காலம். மாடுகள் பருத்திக்கொட்டைக்கு பஞ்சமில்லாது வாழ்ந்த காலம்.

டில்லி எந்த திசை என்றுகூட தெரியாத காலம். ஓட்டு போட்டு மறந்துவிட்டு பெண்கள் மஞ்சள் மணக்க முளைப்பாரி தூக்கி சுமந்து இறக்கி வைத்த உடன் தூறல் போடும் காலம். பிரியாணிக்கும் குவாட்டருக்கும் கள்ளக்காதல் ஒளிராத காலம். ஆகவே அது அந்த காலம்.
சும்மா ஒரு இருபது வருஷத்துக்கு முன்னாடிதான்...


பஸ் ஏறி போனவன் என்ன ஆனான்? அவன் பெயர் சுரேஷ். எனக்கு பிடித்த பெயர்.

தெருவில் பிச்சை எடுப்பவர் பைத்தியக்காரர்கள் பார்த்தது உண்டா? இவர்களில் சிலர் வேறு மாதிரி...நாமாக பிச்சை இட முடியாது.
சில பைத்தியங்களுக்கு உடை உணவு தர முடியாது. அவர்களின் நேர் பார்வைகள் நம்மை குத்தி விடும். கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா...பாணி. மனிதர்களை துச்சமாக பார்த்து வீதிகளை அளந்து கொண்டிருப்பார்கள் ஆனந்தமாக. கொடுத்து வைத்தவர்கள் என்று நினைப்பேன். உண்மையும் கூட.

சுரேஷ் அப்படி ஆகவில்லை என்பதை கண்டுபிடித்தபோது காலம் நிறைய மாறி இருந்தது. யாரோ மாற்றி இருந்தனர்.

மொபைல் இருந்தது. தபால்காரர் காணவில்லை. மாடுகள் மார்க்கெட்டில் பிச்சை எடுத்தன. கழுதையை முட்டிவிட்டு போஸ்டர் தின்றன. அதன் பால் நாறியது.
பிரியாணிக்கு பெண்கள் கிடைத்தனர்.
ஊருக்குள் கட்சியின் மாவட்ட செயலாளர் மடியை பிடித்துக்கொண்டு அலைந்தனர்.
ஊருக்கு வெளியே இருந்த பிட்டு பட தியேட்டர்கள் தங்கள் பெருமூச்சை தொலைத்து இருந்தன.

நான் சுரேஷை கண்டுபிடித்து விட்டேன்.
பெண்டாட்டியின் நச்சரிப்பில் பழைய தோழமையை நினைப்பது போல் வேறு சுகம் உண்டா...நச்சரித்தாள். நான் இவனை தேடி வந்து விட்டேன்.

அவன் தெய்வீகம் மணக்கும் பிச்சைக்காரனாகவோ பைத்தியமாகவோ மாறியிருக்கவில்லை. இருந்தான்.
அவன் லட்சியம் என்று நினைத்திருந்த எல்லாமும் இப்போது அவனிடம் இல்லை.

அவனுக்கு என்னை நினைவு இருந்தது. அவன் எனக்கு காட்டி கொடுத்த உலகத்தை விட்டு விலகி வருடங்கள் ஓடி விட்டன. இருந்தாலும் காலம் அவனை மட்டும் பள்ளம் பறித்து வைத்திருந்தது.

எப்டிடா இருக்க சுரேஷ்?

பாக்கிரையே. நல்லாத்தான் இருக்கேன்.

அந்த சினிமா ஆசையெல்லாம்...

அது எனக்கு ஆசையா என்று அவன் திருப்பி கேட்டபோது தலை குனிந்தேன்.

தமிழில் சினிமா இன்னும் எடுக்கவில்லை என்றுதான் சொல்வான். இதை மாற்ற நிறைய கற்க வேண்டும். ஆனால் அது சினிமாவில் இருந்து அல்ல என்பான்.

இப்போ என்ன பண்றே?

நல்லா சாப்பிட்டு சாப்பிட்டு இளைச்சு போய்ட்டு இருக்கேன். சிரித்தான்.

என்னடா ஆச்சு.. அந்த டைரக்டர் சேத்துக்க மறுத்துட்டாரா...

நான் போனப்போ அவர் படம் பண்ணலை.

சரி வேலைக்கு போகலாமே

நிறைய போனேன். வந்துட்டேன். அங்கே அந்த வேலையில்  நான் இல்லை னு தோணினா திரும்பி வந்துடுவேன்.

இப்போ என்ன செய்யறே... இதை நான் கேட்டிருக்க கூடாது. சிரைக்கிறேன் என்று சொல்ல அவனுக்கு உரிமை உண்டு. நீ பெத்து பெத்து தள்ளிட்டு வேற என்ன புடுங்கிட்டு இருக்க என்றும் கேட்கலாம்.
என் கார் சம்பளம் பெண்டாட்டியின் கப் பிரா சென்ட் பி.எப் கெத்து பாங்காக் பெண்ணிடம் ஐநூறு டாலர் கட்டி வெறிக்க வெறிக்க பார்த்தது பிரதோஷம் தவறாது கோவிலுக்கு போவது சனிக்கிழமை எள் முடிச்சு என்று போகிறது என் வாழ்க்கை.
நான் அது மட்டும் கேட்காது "கடைசியில் தோத்து போய்ட்டியாடா" என்றும் கேட்டேன். இந்த வாய் அப்படி...சீ...

"கடைசியில் நீ ஜெயிச்சுட்டியா" என்று சுரேஷ் கேட்டபோது மேல் படித்த பாராவை க் த் எல்லாம் மாற்றி சொன்னேன். பின்
சொல்ல வேண்டாமா இவையெல்லாம்?

ஸோ... ஜெயிச்சுட்டே...

கிட்டத்தட்ட அப்படித்தானே இப்போ என்ன குறை சொல்லு. என்ன கொஞ்சம் ஏண்டா இப்படி னு ஒரு எண்ணம் வரும். என்னமோ இல்லையே இதுல என்ன கிடைச்சதுன்னு மனசு கேக்கும். பாரேன் என் தொப்பை...இதுக்கா ஓடினோம் னு இருக்கும். ஆனா எனக்கு வேற கிடையாது. இப்படித்தான் தாத்தா அப்பா எல்லாம் இருந்து போனாங்க என்றேன்.

அப்போ நீ யாருக்கும் இல்லை. உனக்கும் இல்லை. இது வாழ்க்கைன்னு சொல்ல முடியுமா?

தெரியலை... இருக்கேன். கடன் வாங்க வேண்டாம். நினைச்சது வாங்கலாம்..எங்கே வேணும்னாலும் போகலாம்...காசு..இத்யாதி..இத்யாதி..

சுரேஷ் என்னை பார்த்தான். அப்படி பார்த்தபோது அவமானமாக இருந்தது.
சுகுணாகிட்ட இன்னிக்கு சண்டை.

உன்னை பாக்கணும்னு தோணிச்சு.யோசிக்காது கிளம்பி வந்துட்டேன் என்று சொன்னபோது கண் அரும்பியது எனக்கு.

அவன் முகத்தை திருப்பி கொண்டான்.

அரசியல் மதம் ஜாதி பொருளாதாரம் கடவுள் கலை உணவு இப்படி எல்லாம் உன்னை சுரண்டி நீ என்பது யார்னு  உனக்கே தெரியாம ஆக்கிடுச்சு இதுவாவது புரியுதா என்று கேட்டான்.

எனக்கு புரியவில்லை. இவை எதுவும் இல்லாது நான் இல்லை. இந்த எல்லாமும் என்னுள் எப்படியோ தேங்கிய ஒன்று.
நான் இவை இல்லாது போனால் இருக்க முடியாது. வாழ இயலாது.

புரியலை என்றேன்.

புரியாது. நீ இவைகளுக்கு மட்டுமே பிறந்தது போல உன்னை ஆக்கினர். பின் இதற்கு மட்டுமே இருக்கும்படி உன்னை பழக்கம் செய்தனர். இப்போது சமூகத்தின் கைதேர்ந்த வாட்ச் மேன். இதுவரை அதை சரியாக செய்து விட்டாய்.

இது ஒவ்வொன்றுக்கும் ஒரு நபர் உண்டு. நபர்கள் எல்லாம் சேர்ந்து உன்னை அவர்களாக மாற்றி வரும்போது அவர்கள் எல்லாம் உனக்கு சின்னங்களாக மாறிக்கொண்டனர். நீ இவைகளை பழகிக்கொண்டதும் உன்னை துரத்த சொல்லி அனுப்பி வைப்பார்கள். நீ துரத்துவது உன்னை மட்டும்தான். ஓட ஓட பணமும் அதிகாரமும் அவர்களுக்கு.

நான் மகிழ்ச்சியாக இருக்கேன் சுரேஷ். எனக்கு ஒரு தெம்பை இது எல்லாம் உருவாக்கி தந்து உள்ளது. உழைக்கிறேன். வெகுமதியை பெறுகிறேன்.

பின் ஏன் மனைவியுடன் பிரச்னை?

இது சாதாரண நிகழ்வு.

எனில் இவ்வளவு தூரம் வர காரணம்?

காரணம்...

நீ உன்னை தொலைத்து விட்டு தேடுவது மட்டுமே நிகழ்கிறது. தொலைந்து போனவர்களிடம் இருந்து வந்த நீ தொலைத்து கொண்டிருந்தவர்களோடு தொலைத்து கொண்டிருக்கிறாய்.

ஒரு நாள் மடிவதுதானே வாழ்க்கையும்?

வாழாதபோது மடிதல் என்பது நோய்.

நான் அமைதியாக இருந்தேன். எனக்குள் யார்யாரோ வந்து எது எதையோ நிரப்பி நன்றாக குலுக்கி கலந்து என்னை வேறொன்றாக்கி வைத்திருப்பது போன்ற உணர்வை அவன் வார்த்தைகள் சொல்லாமல் சொல்லின.

உறவுகளும் நட்பும் அலுவலகமும் வீடும் இப்போது வெறும் அலுவலகமாகவே என் கண்களுக்கு தெரிந்தது.

சுரேஷ் எழுந்து கொண்டான்.

இந்த தப்பு எங்கடா ஆரம்பிச்சது? என்னை யாரு இப்படி ஆக்கினது என்று கேட்டபோது அவன் சட்டையை அணிந்து கொண்டு வா போகலாம் என்றான்.

சாயங்காலம் ரொம்ப வெயில் தெரிந்தது. இருந்தாலும் அவனோடு நடக்கும்போது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

எழுதியவர் : (23-May-19, 7:02 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : pulligal
பார்வை : 102

மேலே