2019 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் – விஷ்ணுபுரம் இலக்கிய விருது ------------இளம்கவிஞர் சதுரை அவர்களுக்கு வழங்கப்படுகிறது
[2019 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் – விஷ்ணுபுரம் இலக்கிய விருது இளம்கவிஞர் ச.துரை அவர்களுக்கு வழங்கப்படுகிறது
. விருதுவிழா வரும் ஜூன் 9 ஆம் தேதி சென்னையில் தி.நகர் தக்கர்பாபா அரங்கில் நிகழ்கிறது. மதியம் 2 மணிமுதல் சிறுகதைகள் குறித்த கருத்தரங்கும் மாலை 6 மணிமுதல் விருதளிப்புவிழாவும் நடைபெறும்]
===============================================================================================================================
. மத்தி என்னும் கவிதைத்தொகுதிக்காக இவ்விருது வழங்கப்படுகிறது. சமகாலக் கவிதைத்தளத்தில் செயல்படுபவர்களில் பலரை பரிசீலித்தோம். பலரிடம் பரிந்துரை கோரினோம். கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன் ச.துரையை பரிந்துரை செய்தார். நண்பர்கள் பரிசீலித்தபின் இம்முடிவு எடுக்கப்பட்டது.
குமரகுருபரனின் பிறந்தநாள் ஜூன் 10. ஒரு நாள் முன்னதாக ஜூன் 9 அன்று சென்னையில் விழா நிகழும். நண்பர்கள் அனைவரும் முன்னரே பயணப்பதிவுகள் செய்யவேண்டும் என கோருகிறோம். சென்ற ஆண்டுபோல மதியம் கருத்தரங்கும் மாலையில் விழாவுமாக ஒருங்கிணைக்கலாமா என்பதை அரங்கம் கிடைத்தபின்னரே முடிவு செய்யவேண்டும்
குமரகுருபரன் மறைந்தபின் வழங்கப்படும் மூன்றாவது விருது இது. முதல்விருது கவிஞர் சபரிநாதனுக்கும் இரண்டாம் விருது கவிஞர் கண்டராதித்தனுக்கும் வழங்கப்பட்டது. குமரகுருபரனின் நினைவை போற்றும் இந்நாள் இளம்கவிஞர்களுக்குரியதாக ஆகிவிட்டிருப்பதை மகிழ்வுடன் எண்ணிக்கொள்கிறோம். கவிஞனுக்குரிய கொந்தளிப்பும் அமைதியிழப்புமாக வாழ்ந்து குறுகியநாளில் மறைந்த குமரகுருபரன் எங்கள் அனைவருக்கும் அணுக்கமான நண்பராக இருந்தார். எனக்கு இனிய இளவலாகவும். இந்நாளில் அவரை நினைத்துக்கொள்கிறேன்
ஜெ
_________________________________________________________________________________________________________________________________
தொடர்புடைய பதிவுகள்
ச.துரை – நான்கு கவிதைகள்
=========================
எங்களுடைய உவர் நிலத்தில்
வெட்டுண்ட காய்ந்த மரத்தி ஒருத்தி இருக்கிறாள்
ஏழடி இருப்பாள் எனக்குத்தெரிய முக்கால் ஆண்டுகளாக
ஒரே இடத்தில் அலைபார்க்கிறாள்
காற்று வாங்குகிறாள், நீராடுகிறாள்
எப்போதாவது புரண்டுபடுப்பாள்
அப்போதெல்லாம் கடலும்
எதிர்த்திசைக்கு மாறிக்கொள்ளும்
*
மொத்தமாகப் பதுங்குழிகளில் வந்து விழுந்தார்கள்
“அப்பா நாம் ஏன் பாம்பைப்போல
படுத்தபடியே நகர்கிறோம்?”
இறைவன் வானிலிருந்து
திராட்சிகளை வீசிக்கொண்டிருக்கிறார் மகளே
அவை புளிக்கும் திராட்சைகள்
உனக்குப் பிடிக்காதல்லவா?
*
தற்செயலாக நடந்ததுதான்
மூளையை அகற்றிவிட்டு தலையில்
ஆப்பிளை வைத்து தைத்துவிட்டேன்
வெகுசிறிய மாற்றம்தான்
அது பிரச்சினையில்லை
தற்போது அகற்றிய இந்த மூளையை
என்ன செய்வது என்பதில் ஆரம்பிக்கிறது குழப்பம்
ஒரு கஞ்சாத்தோட்டத்திற்குள் புதைத்துவிடலாம்
பேரல் நிரம்பிய எரிசாராயத்திற்குள் மிதக்கவிடலாம்
பிரேதபரிசோதனை அறைக்குள் தள்ளிவிடலாம்.
கூவம் ஆற்றில் வீசலாம்
தெருநாய்களுக்கு என்றெல்லாம் ஆப்பிள் சொன்னது
எனக்கு எதுவுமே சரிப்பட்டு வரவில்லை.
ஒருமுறை மூளையிடமே கேட்கலாமே
மீண்டும் ஆப்பிளை நீக்கி
தலையில் மூளையை வைத்தேன்
அது ஆப்பிளைத் தின்றுவிடு என்றது
*
கூடைக்குள் வைக்கப்படுகிற
ஆப்பிளைப்போலத்தான்
ஒவ்வொரு இரவுகளிலும்
உன்னைத் தொட்டிலுக்குள்
வைப்பேன் மகளே
நீ அத்தனை சிவப்பு
மொழி அத்தனை இனிப்பு
அம்மா உனக்கு அழகான குடுமி இடுவாள்
அது அப்படியே ஆப்பிளின்
காம்பைப்போல் இருக்கும்.
==========================================================================================================================
தொடர்புடைய பதிவுகள்
ச.துரையின் மத்தி கவிதைகள்- லக்ஷ்மி மணிவண்ணன்
ச.துரைக்கு குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது
குமரகுருபரன்- விஷ்ணுபுரம் விருதாளர்கள்.
ச. துரை கவிதைகள்
இருளுக்குள் பாயும் தவளை. ச. துரை கவிதைகள் – கடலூர் சீனு
Save
Share