மலையாள கவிதைகளை புரிந்து கொள்வது குறித்து-------------------கட்டுரை,----------- கவிதை
கவிதையின் இரு அடிப்படை அம்சங்கள்
எந்த மொழியினாலும் கவிதைக்கு இரு இயல்புகள் இருக்கும். ஒன்று அதன் பொதுத்தன்மை இன்னொன்று அதன் தனித்தன்மை. பொதுத்தன்மை என்பதை அனைத்து மானுடருக்கும் பொதுவான தன்மை என்று சொல்லலாம். ஒரு கவிதை மொழி பெயர்க்கப்படும் போது உலகம் முழுக்க அனைவருக்குமே அதன் சாரமான ஒரு பகுதி புரிகிறது, இதுவே கவிதையின் பொதுஅம்சம். நமக்கு நல்ல கவிதை உலகம் முழுக்க எப்படியோ நல்லகவிதையாக அடையாளம் காணப்படுகிறது. இந்த அம்சம் இருப்பதனால்தான் உலக கவிதை என்ற கருத்தே உருவாகியுள்ளது . யோசித்துப்பாருங்கள் நாம் இன்று மாபெரும் கவிஞர்களாக கருதும் பலர் நமக்கு மொழிபெயர்ப்பு மூலமே அறிமுகமானவர்கள். தாந்தேயானாலும் சரி தாகூரானாலும் சரி .
அதே சமயம் நம்மால் கவிதையின் ஒரு பகுதியை மொழிபெயர்க்கவே முடியாது என்பதை காணலாம். அப்பகுதி அம்மொழிக்கே உரிய தனித்தன்மையினால் ஆனதாக இருக்கும். அது அக்கவிதை முளைவிட்ட கலாச்சாரத்துக்கே உரியதாக இருக்கும். வேற்று மொழியில் வேற்று கலாச்சாரத்தில் இருந்தபடி அந்த அம்சத்தை புரிந்துகொள்ள முடியாது.
அந்த மொழியை படித்தாலும் கூட அன்னியக் கலாச்சாரத்தை சேர்ந்த ஒருவரால் ஆதை முழுக்க அணுக முடியாது. ஷேக்ஸ்பியரை நாம் மூல மொழியிலேயே படிக்கிறோம் ஆனாலும் நம்மால் அக்கவிதையுலகின் குறிப்பான ஒரு பகுதியை உள்வாங்கிக் கொள்ள முடியாது. அது ஆங்கிலோ சாக்ஸன் வாழ்வுடன் சம்பந்தப்பட்டது. அடிக்குறிப்புகள் விளக்கங்கள் மூலம் அதை நமக்குப் புரியச் செய்யலாம், ஆனால் நம் மனம் உணர்வு பூர்வமாக அதை வாங்கிக் கொள்ளாது.
ஒரு சிறந்த கவிதை இவ்விரு பண்புகளையுமே கொண்டிருக்கும் என்று சொல்லலாம். அதில் மானுடப்பொதுவான கூறுகளும் இருக்கும், அக்கலாச்சாரத்துகேயுரிய தனித்தன்மைகளும் இருக்கும். ஆகவே தான் ‘முற்றாக மொழிபெயர்க்க முடியாத கவிதையும் சிறந்த கவிதை அல்ல, முற்றாக மொழிபெயர்த்துவிடக்கூடிய கவிதையும் சிறந்த கவிதை அல்ல’ என்கிறார்கள்.
மலையாளக் கவிதைகளை படிக்கும்போது இந்த பொதுவிதியை நாம் நினைவில் வைத்திருக்கவேண்டியுள்ளது . நாம் கேரளக் கலாச்சாரத்திலும் மலையாள மொழியிலும் முளைத்த கவிதைகளை படிக்கிறோம். நமக்கு வந்து சேர்வது இரு அம்சங்கள். கவிதையில் உள்ள அடிப்படையான மானுட உணர்ச்சிகள், மானுட விழுமியங்கள் ஆகியவை ஒரு பகுதி. கேரள , மலையாள கலாச்சாரத்துகே உரிய தனித்த பண்பாட்டுக் கூறுகள் இன்னொரு பகுதி. முதல் அம்சம் நமக்கு எளிமையாக புரியும் ,மற்ற அம்சத்தை நாம் சிரத்தை எடுத்து புரிந்துகொள்ள வேண்டும்.
மரபுக்கவிதையும் நவீனக்கவிதையும்
இக்கவிதைகள் மலையாளத்தின் நவீனக் கவிதைகள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். மரபுக்கவிதை , நவீன கவிதை என்பதற்கிடையே பெரிய வேறுபாடு உள்ளது.நாம் அறிந்த முதல்வேறுபாடு வடிவம் சார்ந்தது. மரபுக்கவிதை யாப்பில் இருக்கும். நவீனக்கவிதை யாப்பு இல்லாமல் இருக்கும். ஆனால் இந்த வேறுபாடு மேலோட்டமான ஒன்றே.மேலும் ஆழமான வேறுபாடுகள் உள்ளன.
முக்கியமான வேறுபாடு கவிதையின் நோக்கத்தில் உள்ளது. மரபுக்கவிதை ‘வலியுறுத்தும்’ நோக்கம் கொண்டது .எதை? நெறிகளை, அறங்களை, சில அடிப்படை உண்மைகளை. இந்த அம்சத்தை நாம் பொதுவாக மரபுக்கவிதைகளிள்ல் காணலாம் . ஒரு கவிதையை எடுத்துப்பார்த்தால் அது எதைப்பற்றி பேசுகிறது, அதன் மையக்கருத்து என்ன என்பதை தெளிவாக சொல்லிவிடலாம்.
நமக்கு பள்ளி கல்லூரிகளில் பாடமாக வைக்கப்படுவது மரபுக்கவிதையே .ஆகவே தேர்வில் கேள்விகள் ‘இந்த நாலடியார் பாடலின் மையக்கருத்து யாது?’ என்ற வகையில் கேட்கப்படுகின்றன.நாமும் பதில் எழுதிவிடுகிறோம். நவீனக் கவிதையில் இந்த அம்சமே கிடையாது. நவீன இலக்கியத்தில் கருத்துக்கள் சொல்லப்படுவது இல்லை. கருத்துக்களுக்கு ஆதாரமான மன இயக்கம், உணர்வுகள் மட்டுமே சொல்லப்படுகின்றன. கருத்துக்களை வாசிப்பின் மூலம் நாம் தான் உருவாக்கிக் கொள்கிற்றோம். ஆகவே மரபுக்கவிதையில் செய்வது போல நவீனக்கவிதையில் “இதன் மையக்கக்கருத்து யாது?” என்றெல்லாம் கேட்கக் கூடாது.அது நவீனக்கவிதையை மிகத் தவறாக மதிப்பிடுவதில் சென்று முடியும். இந்த நவீனக்கவிதை பற்றி என்ன நினைக்கிறாய், உன்னுடைய வாசிப்பு என்ன, நீ கண்டடைந்த கருத்து என்ன என்றுதான் கேட்கவேண்டும்.
அடுத்த முக்கியமான வேறுபாடு நவீனக் கவிதை எதையுமே சொல்ல முற்படுவது இல்லை , உணர்த்தவே முற்படுகிறது என்பதாகும்.அது எதையுமே வலியுறுத்திக் கூற முற்படுவது இல்லை. அதற்கு நேர்மாறாக ஏற்கனவே வலியுறுத்திக் கூறப்பட்டவற்றை மறு பரிசீலனை செய்யவே நவீனக்கவிதை முற்படுகிறது. மரபான கவிதை திட்டவட்டமான முறையில் ஒன்றை சொல்ல முற்படுகிறது.அதற்காகவே அது உவமை, உருவகம் முதலிய அணிகளை பயன்படுத்துகிறது .
ஆனால் நவீனக்கவிதை அம்மாதிரி எதையுமே சொல்லிப்புரியவைக்க முயல்வது இல்லை.அது ஓர் அனுபவத்தை மட்டுமே வாசகனுக்கு கொண்டு செல்ல முயல்கிறது. ஓர் அகமன ஓட்டத்தை வாசகனுக்குள் உருவாக்க எண்ணுகிறது.அதற்காகவே அது அணிகளை பயன்படுத்துகிறது. இவ்வகையான புதிய அணிகள் வேறுபெயரில் வழங்கப்படுகின்றன.இவை மொழியுருவகம் [metaphor] படிமம் [poetic image] என்ற இரு பொது அடையாளங்களால் குறிப்பிடப்படுகின்றன.
ஒரு நிகழ்வையோ காட்சியையோ மட்டும் சொல்லி அதன் பொருளை முழுமையாக வாசகனின் கற்பனைக்கே விட்டுவிட்டால் அது படிமம் எனப்படுகிறது . அதாவது ஓர் உவமையில் எது உவமையோ அதை மட்டுமே சொல்லி உவமிக்கப்படுவதை வாசகனின் கற்பனைக்கே விட்டு அவன் மனதை அச்சித்திரத்தை விரிவாக்க முடிந்தால் அது படிமம் .
வெள்ளத் தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்தனையது உயர்வு
[நீர்மட்டத்துக்கு ஏற்ப அல்லிமலரின் தண்டின் நீளம் இருக்கிறது . அதுபோல மனிதர்களின் உள்ளத்தின் உயரத்துக்கு ஏற்ப அவர்களின் உயர்வும் அமைகிறது]
மலர் உவமை. உவமிக்கப்படுவது தெளிவாகவே சொல்லப்பட்டு விட்டது – உள்ளம். தற்கால மலையாளக் கவிதைகள் நூலில் கெ ஜி சங்கரப்பிள்ளை எழுதிய பல்லி என்ற கவிதையை பாருங்கள் .உவமை மட்டுமே உள்ளது .உவமிக்கப்படுவது சொல்லபடுவதில்லை. இதுவே படிமம் என்பது. அறுந்து விழுந்த வால் பார்க்கிறது . பல்லி அதோ அமர்ந்திருக்கிறது , எந்த இழப்புணர்வும் இல்லாமல். ஒரு புதிய இரைக்காகவோ துணைக்காகவோ அமர்ந்திருக்கிறது பல்லி .
இந்த படிமத்திலி¢ருந்து அர்த்தத்தை கற்பனைசெய்துகொள்வது வாசகனின் பொறுப்பு. அந்த கற்பனையை தூண்டிவிடுவது மட்டுமே கவிஞனின் வேலை. கவிஞன் என்ன சொல்ல வருகிறான் என்ற கேள்விக்கே கவிதையில் இடமில்லை. நவீன இலக்கிய வடிவங்கள் எல்லாமே அப்படித்தான்
அது எல்லா வாசகர்களாலும் முடியுமா என்று கேட்கலாம் .அதற்கான பயிற்சிதான் நவீனக் கவிதை வாசிப்பிற்கான பயிற்சி என்பது. இசை கேட்க , ஓவியத்தை ரசிக்க அனைத்துக்கும் பயிற்சி தேவை. பயிற்சி இல்லையேல் அவை வெறும் ஒலியாகவோ அல்லது நிறமாகவோ மட்டும் தென்படக்கூடும். பயிற்சி எப்படி வரும் ? தொடர்ந்த பழக்கம் மூலம்தான். மரபுக்கவிதையை படிக்க நாம் சிறு வயதிலேயே நாம் பழகிவிட்டிருக்கிறோம் . ஆகவே நமக்கு அது புரிகிறது. சொற்பொருள் மட்டும் தெரிந்தால் போதும். நவீனக் கவிதையில் சொற்கள் எல்லாமே தெரிந்தவை, கூறுமுறை மட்டுமே தெரிய வேண்டியுள்ளது .
இலக்கியப்படைப்பில் பல வாசிப்புகளுக்கு இடமுள்ளது. எந்த படைப்பு அதிகமான வாசிப்புக்கு இடம் தருகிறதோ அதுவே நல்ல படைப்பு. நான் வாசிப்பது படைப்பில் உள்ளுறைந்துள்ள என் படைப்பு. இதை ஆங்கிலத்தில் இலக்கிய விமரிசகர்கள் மிக விரிவாக பேசியுள்லனர். தமிழில் தமிழவன் ‘படைப்பும் படைப்பாளியும் ‘ என்ற நூலில் விளக்கி எழுதியுள்ளார். ழாக் தெரிதா போன்ற சில வ்மரிசகர்கள் எல்லைக்கு போய் படைப்புக்கும் வாசிப்புக்கும் நேரடையான உறவே இல்லை என்கிறார்கள். படைப்பு மீது அர்த்தம் ‘வழுக்கி’ சென்றபடியே உள்ளது என்கிறார்கள்.
பல்லிவால் கவிதையை நான் எப்படி படிக்கிறேன் என்று சொல்கிறேன் .இது ஒருவாசிப்புதான் . இப்படி பல வாசிப்புகளுக்கு இடமுண்டு. அதாவது இது பொழிப்புரை அல்ல. பல்லியின் வால் உயிருள்ளது .ஆனால் அது பல்லியின் ஓர் உறுப்புமட்டுமே . அதற்கென எந்த தனியடையாளமும் இல்லை .பல்லிக்கு வாலை இழப்பது ஒரு தப்பித்தல். அதற்கு வேறு வால் முளைக்கும். ஆகவே அதற்கு கவலையே இல்லை. சமூகத்தில் பிறிதொருவரை சார்ந்து வாழக்கூடிய பலரை நாம் கண்டு வருகிறோம். கணவனை சார்ந்து வாழும் மனைவிகள் மிகச்சிறந்த உதாரணம். அபூர்வமாக சகோதரர்களை சார்ந்து வாழ்பவர்கள் உண்டு. அவர்கள் அவ்வாறு துண்டித்து வீசப்பட்டால் அடையும் துடிப்பின் சித்திரத்தையே இக்கவிதை அளிக்கிறது. துடித்து துடித்து மரணத்தை நோக்கி செல்கிறது அந்தவால். அந்த வால் போல துடிக்கும் பலரை நான் கண்டதுண்டு என் வாழ்வில் .அப்போதெல்லாம் இக்கவிதையை எண்ணிக் கொள்வேன் .
இன்னொரு கோணத்திலும் யோசிக்கலாம். சில கொள்கைகளை, சில நிறுவனங்களை நம்பியே வெகுகாலம் வாழ்ந்து விடுபவர்கள் உண்டு . சட்டென்று அதிலிருந்து துண்டிக்கப்பட நேர்ந்தால் அப்படியே அழிந்து போய்விடுகிறார்கள் அவர்கள். கம்யூனிச இயக்கங்களை சேர்ந்த பலர் அப்படி அழிந்து போயிருக்கிறார்கள். ஏன் இப்படி யோசியுங்கள், நாற்பது வருடம் ஓர் அலுவலகத்தில் வேலைபார்த்து ஒருவர் ஓய்வு பெறுகிறார் .அவரை பதினைந்து நாளில் அவ்வலுவலகம் மறந்துவிடும்.அவர் இப்பல்லிவாலின் நிலையிலிருக்கிறார் .அதாவது ஓரு உயிருள்ள அமைப்பிலிருந்து பிரிந்துபோய் தனித்தன்மை இல்லாமல் படிப்படியாக அழிய நேரும் வாழ்க்கைச்சந்தர்ப்பத்தை இக்கவிதைகனுபவமாக்குகிறது இல்லையா?
இதுதான் படிமக்கவிதையின் இயல்பு. நவீனக்கவிதையில் பெரும்பாலானவை படிமக்கவிதைகளே .படிமம் என்ற வடிவம் நவீனக்கவிதை என்ற வடிவம் எப்போது பிறந்ததோ அப்போதே பிறந்தது .நவீனக்கவிதையின் பிதாமகரான எஸ்ரா பவுண்ட் தான் படிமம் என்ற உருவத்தையும் சீர்படுத்தியவர். தற்கால மலையாளக் கவிதைகள் என்ற தொகுப்பில் குதிரை நடனம்[அய்யப்ப பணிக்கர்] ,ஒற்றையானையின் மரணம்[ என் என் கக்காடு], சிலைகள்[ கெ சச்சிதானந்தன்] முதலியவை தூய படிமக் கவிதைகள் .குதிரை நடனம் என்ன சித்திரத்தை தருகிறது? தகுதி உடையவர்களின் முன் தகுதி இல்லாத ஒருவன் ஆட வருகிறான்.தன்னுடைய தகுதியிமையையே அவன் தன் தகுதியாக ஆக்கிக் கொள்கிறான். இதை வாழ்வுடன் ஒப்பிடவேண்டுமா? வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்கும் மாணவன் அதிகாரியாகிறான். கடைசி மதிப்பெண் வாங்கும் மாணவன் அரசியல்வாதியாகி அவனுக்குமேலே அதிகாரத்தில் அமர்கிறான். இது ஓர் உதாரணம்தான்.
‘ஒற்றையானையின் மரணம்’ இதேபோல ஒரு படிமத்தையே முன்வைக்கிறது . ஒற்றையானை ஒரு போதும் கூட்டத்துடன் சேராது என நாம் அறிவோம். அது தன் வழியை தானே கண்டடைவது. தன்னம்பிக்கையும் தனியான தேடலும் கொண்ட மனிதர்களை அந்த யானை குறிக்கிறது எனலாம்.அது கொல்லப்பட்டு விட்டது [சுட்டுக் கொல்லப்பட்டு விட்டது] அந்த யானையின் மரண அலறலைகேட்டபடி ஒருவன் ஊரை விட்டு விலகி இடிபாடுகளி¢ன் வழியாக காடுகளை நோக்கி செல்கிறான். தன்னை வாழ அனுமதிக்காத ஊரை விட்டு செல்கிறான் என எடுத்துக் கொள்ளலாம். ஒற்றையானையின் மரணம் என்பது தனித்தன்மையின் மரணத்தை குறிக்கிறது என்று கொள்ளலாம். 1960கள் உலகம் முழுக்க மனிதனின் தனித்தன்மைக்காகவும் , சிந்தனை சுதந்திரத்துக்காகவும் கலகக் குரல்கள் எழுந்த காலகட்டம் என அறிவீர்கள்.நக்சலைட் இயக்கம் உருவான காலகட்டம் அது. அக்காலகட்டத்தின் முடிவை, அன்றைய இயக்கங்களின் வீழ்ச்சியை சொல்லும் கவிதை இது என நான் வாசிக்கிறேன். அதேபோல சிலைகள் ஒரு படிமத்தை முன்வக்கிறது . மாமனிதர்கள் எல்லாம் வரலாற்றில் வெறும் பெயர்களாக மாறிக் கொண்டிருப்பதை சித்தரிக்கும் கவிதை அது.
மொழியுருவகம் என்பது மரபுக்கவிதையில்பயன்படுத்தப்பட்ட உருவக அணியேதான். ஆனால் உருவக அணியில் உருவகித்தல் என்பது திட்டவட்டமான ஒரு கருத்தை தெளிவுபடுத்தும் ஓர் உத்தியாக உள்ளது. நவீனக்கவிதையில் அப்படி திட்டவட்டமான கருத்து இல்லை. அந்த கருத்து வாசகனின் கற்பனைக்கே விடப்படுகிறது . ஆனால் வாசகனின் கற்பனையை பலதளங்களைச்சார்ந்து விரித்தெடுப்பதற்கு உதவியாக பல மொழிக்குறிப்புகள் அளிக்கப்பட்டு உருவகம் மேலும்மேலும் விரிவு படுத்தப்படுகிறது. தொடர்புள்ள பல விஷயங்கள் அதில் கொண்டுவந்து இணைக்கப்படுகின்றன. இன்னொரு முக்கியமான வித்தியாசம் என்னவென்றால் மரபான உருவகம் ஒரு காட்சியாகவோ ஒரு தருணமாகவோ இருக்கும். ஆனால் நவீனக்கவிதையில் உள்ள உருவகம் மொழிசார்ந்ததாக இருக்கும். மொழியை பயன்படுத்தும் விதம் மூலமே அது விரிவடையும். ஆகவே அதை மொழியுருவகம் என்று சொல்லலாம். [இங்கே ஒரு எச்சரிக்கை மெட்ட·பர் என்ற சொல் தத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. அது அங்கே முற்றிலும் மாறுபட்ட தளத்தில் பயன்படுத்தப்படுகிறது .அதை இங்கே குழப்பிக் கொள்ளக் கூடாது.]
மலையாளக் கவிதைகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் கவிதை உத்தி மொழியுருவகம்தான் . ஓர் உருவகத்தை முன்வைத்து அதை மொழியின் வழியாக வளர்த்து சென்று அது குறிப்பிடும் பொருளை மிக விரிவானதாக ஆக்குவது இந்த உத்தி. பிறவி[ஆற்றூர் ரவிவர்மா] ஓர் உதாரணம் ஒரு பெரும் புயலுக்கு முந்தைய கணத்தை சொல்ல முற்படும் கவிதை பிறவி. அப்புயல் ஒரு புது யுகத்தின் பிறவியின் குறியீடு எனலாம். ஒரு மீட்பர் , ஒரு தலைவர் பிறக்கப்போகிறார் என்ற எண்ணமும் வழி தெரியாத தத்தளிப்பும் இக்கவிதையில் இருக்கிறது . இங்கே நம் கற்பனை தூண்டப்படுவதுடன் அது ஒரு ‘குறிப்பிட்ட’ அர்த்த தளம் நோக்கி ஆற்றுப்படுத்தப்படுகிறது. அந்த குறிப்புப்பொருள் கவிதைக்குள் திடமாக உள்ளது . ஆகவேதான் இது உருவகம்.
மரபுக் கவிதையில் நேரடியாக கருத்துக்களைச் சொல்லும் [staement]கவிதைகள் ஏராளமாக உண்டு . உண்மையில் அவை கருத்துக்களைச் சொல்லும்போது அக்கருத்துக்களுக்கு பின்னால் உள்ள உணர்வுகளையே சொல்கின்றன. கருத்துக்காக சொல்லப்பட்ட கருத்து கவிதை அல்ல.
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அற்றே
செல்வத்தை தேய்க்கும் படை
[சுரண்டப்பட்டவன் துயரப்பட்டு தாங்காது அழுத கண்ணீர் செல்வத்தை அழிக்கும் ஆயுதமாகும்] போன்ற கவிதைகளை உதாரணமாக சொல்லலாம். நவீனக் கவிதை இம்மாதிரி நேரடியாக பேசுவது இல்லை .ஆனால் நேரடியாக பேசுவது போன்ற ஓர் உத்தியை அது கைகொள்கிறது . அப்படிப் பேசும் போது ஒன்று அது இடக்காக உள்ளர்த்தங்களை காட்டிப் பேசுகிறது. அல்லது குறிப்பு என்ற வடிவில் சில விஷயங்களை மட்டும் சொல்லி பலவிஷயங்களை வாச்க ஊகத்துக்கு விட்டு பேசமுற்படுகிறது. இவ்விரு முறைகளுக்கும் உதாரணமாகும் கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன.
நானும் சைத்தானும் [எம் கோவிந்தன்] சக்ரட்டீஸ¤ம் கோழியும்[கெ சச்சிதானந்தன்]’ இரவுணவு ‘ [ஏ.அய்யப்பன்] ஆகிய கவிதைகள் இடக்கான முறையில் பேசும் கவிதைகள் எனலாம். அவை எவற்றை அங்கதமாக விமரிசிக்கின்றன என்பதே முக்கியமாக கவனிக்கப் பட வெண்டும். .சாக்ரட்டீஸ¤ம் கோழியும் கவிதையில் சச்சிதானந்தன் தத்துவ சிந்தனையை எள்ளலுக்கு ஆளாக்குகிறார் .சாக்ரட்டீஸின் ஒரு கடன் கிரேக்கத்தையே கடனாளிஆக்கியது என்ற வரியில் ஒரே சமயம் பாராட்டும் சிரிப்பும் ஒளிந்துள்ளது. எள்ளல், துக்கம் போன்ற உணர்வுகளின் வழியாக நாம் அடையும் அனுபவமே இக்கவிதைகள் அளிப்பவை.
இம்மலையாளக் கவிதைகளின் ஒரு பொது அம்சத்தை சொல்ல விரும்புகிறேன். இவை 1960,70 காலகட்டங்களில் எழுதப்பட்டவை. நக்சலைட் இயக்கம் கேரளத்தில் உருவாகி ஒடுக்கப்பட்டு அழிந்த வரலாற்று தருணத்தின் பின்னணி இவற்றுக்கு உண்டு. பிறவி போன்ற கவிதைகளில் அந்த எழுச்சியையும் ஒற்றை யானையின் மரணம் போன்ற கவிதைகளில் அதன் வீழ்ச்சியையும் காணலாம்.
இக்கவிதைகளில் நாம் நமது கவிதை ரசனைமூலம் பொதுவாக அறியக்கூடிய அம்சங்கள் இவை. இவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு கவிதைக்கும் அவற்றுக்கேயுரிய தனிப்பட்ட கலாச்சார தனித்துவம் உள்ளது. கேரள கலாச்சரக் கூறுகள் உள்ளன.அவற்றை நாம் கவிதையை கூர்ந்து படித்து உள்வாங்கிக் கொள்வதன்மூலமே அறிய முடியும். கவிதைபடிப்பதன் நோக்கங்கள் இரண்டு. கவிதை அனுபவம் ஒன்று. ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்துடன் உறவு கொள்ளுத்ல் இரண்டு. இரண்டு தளங்களிலுமே வாசிப்பு நிகழவேண்டும்.
அதாவது இன்றுவரை நீங்கள் கவிதை வாசித்த முறையை இவற்றுக்கு போடாதீர்கள். கவிஞன் என்ன சொல்கிறான் என்று தேடாதீர்கள். இச்சொற்கள், படிமங்கள் உங்கள் மனதில் என்ன விளைவை உருவாக்கின என்று பாருங்கள். நீங்கள் அடைந்த அர்த்தமே இக்கவிதையின் அர்த்தம் — உங்களைப் பொறுத்தவரை