நிலாவில் ஒரு ஷாப்பிங்

"நாளைக்கு நேரமா எழுப்பி விடுமா...செமஸ்டர் எக்ஸாம்கு படிக்கணும்", என்று கூறிக்கொண்டே தன் அறையை நோக்கி நடந்தான் அருண்.

"ஆமா ஆமா...ஆறு மாசமா படிக்காத தான் அரைமணி நேரத்துல படிக்கப்போறியாக்கும்", வழக்கம்போல் அம்மா அர்ச்சனாவின் அர்ச்சனை.

"அப்படிலாம் ஒரு வருங்கால விஞ்ஞானியை எடை போடதமா,ஒரு நாள் நான் கண்டு புடிச்சு தயாரிச்ச பறக்கும் தட்டுல நிலாவுல போய் நீ ஷாப்பிங் பண்ற நாட்கள் வெகு தொலைவில் இல்லமா...அன்னிக்கு இதை கண்டுபுடிச்சதே என் பையன் அருண் தான் என சொல்லி சீன் போடுவ.பயப்படாத அதுக்கெல்லாம் நான் உன்ன எந்த அமௌன்ட்டும் சார்ஜ் பண்ண மாட்டேன்"என்றவனை தலையில் கொட்டு வைத்து "பேசியே சாதனை பண்ணாம போய் தூங்கி நேரமா எழுந்து படிக்கிற வழிய பாருடா"என்று அனுப்பிவைத்தாள்.

தூங்கி அரை மணி நேரம் தான் கடந்து இருக்கும்...காது கிழிவது போல் சத்தம் வரவே கண்கள் தேய்த்து துயில் கலைந்தான்.அந்த சப்தம் ஏதோ ஐம்பது அறுபது ஹெலிகாப்டர்கள் தன் வீட்டின் மேல் பறப்பது போல் உணர்ந்தான்.
"அம்மா...அம்மா" என்று அழைத்தவனுக்கு வெளியே வந்த இரைச்சல் சப்தம் மட்டுமே பதிலாய் கிடைத்தது.

ஒன்றும் விளங்காதவனாய் படுக்கையை விட்டு எழுந்தான்.படுக்கையை சுற்றி ஒரே புழுதி மையமாக காட்சி அளித்தது..
வெளியே மக்களின் அறைகூவல் அவனை மேலும் பதற்றமடைய செய்தது.

தைரியத்தை திரட்டியவனாய் படுக்கையை விட்டு எழுந்து பதற்றத்துடன் வெளியே வந்தான்..
அதிர்ச்சியில் வாயை பிளந்தவனை ஏதோவொரு நல்லுள்ளம் கொண்ட முகமறியா நபர் வந்து இழுத்துக்கொண்டு பதுங்கும் குழிக்குள் கொண்டு சென்றார்.

"இங்க என்ன நடக்குது அண்ணா", என்று அருண் கேட்ட வினாவிற்கு விடையளிக்க நேரமில்லாமல் அவர் மீண்டும் அந்த பதுங்கும் குழியிலிருந்து வெளியே சென்று விட்டார்.

சுற்றுமுற்றும் பார்த்தான்.தன் போல பலரும் அங்கே இருந்தனர்.அவர்களின் அருகே சென்றான்.எந்த கேள்வியும் கேட்குமுன் தன் தந்தை வயதை ஒத்த ஒருவர் தானே வந்து "ஒன்னும் பயப்படாத பா,பூமிக்கு வேற்று கிரக வாசிகள் படையெடுத்து வந்து இருக்காங்களாம்..மீட்பு குழு உன் குடும்பத்தாரையும் காப்பாத்தி இருப்பாங்க.போயி தேடி பாரு", என்று கூறினார்.

இதை கேட்ட அருணிற்கு தூக்கிவாரி போட்டது.அவனையும் அறியாமல் கண்ணீர் அவன் கன்னங்களில் வழிந்தோடியது.ஒரு நொடி கூட தாமதிக்காமல் தேடுதலை தொடங்கினான்.
தேடி தேடி அலைந்து சென்றான்..தான் இதுவரை கண்ட மற்றும் காணாத முகத்தையெல்லாம் கடந்து சென்றான்.தன் தாயின் முகத்தை மட்டும் எங்கு தேடியும் காணவில்லை.

தாய்க்கு ஒரே மகன் என்றுமட்டுமல்ல உறவு என்று சொல்லிக்கொள்ளவே அர்ச்சனாவிற்கு அருண் மட்டும் தான் இருந்தான்..பத்து வருடங்களுக்கு முன் மாரடைப்பில் இறந்துபோன தன் தந்தை கூறிய கூற்றெல்லாம் இன்று நடக்கிறதே என்ற எண்ணமும் அவன் மனதில் சட்டென்று உதைக்க...
வந்த வழியே மீண்டும் சென்றான்...பதுங்கும் குழியிலிருந்து வெளியே செல்ல முயன்றவனை அங்கிருந்தோர் தடுத்தனர்.
"என்னப்பா தம்பி!!!உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா?வெளியே போற நிலைமையா இருக்கு?" என்று ஒரு பெண்மணி சொல்ல..
முன்னதாக அருணிற்கு விளக்கமளித்தவர் வந்து "என்ன தம்பி?நான் அவ்வளோ சொல்லியும் நீ இப்படி பண்றியே..கொஞ்சம் பொறுமையா இருப்பா.உன்னோட குடும்பத்தார் இங்க இல்லனாலும் இன்னும் இது போல மூன்று பதுங்கும் முகாம் இருக்கு.அங்க கூட இருக்க நிறைய வாய்ப்பு இருக்கு", என்றார்.

"சார்...எங்க அம்மா மட்டும் தான் சார் எனக்கு உறவுன்னு சொல்லிக்க என்னோட இருகாங்க.அவங்கள காணோம்.ஆனா நான் இப்போ அவங்கள தேடி போகல.எங்க அப்பாவும் சயின்டிஸ்ட் தான்.aliens வரப்போ பயன்படுத்தறதுக்காக தனியா ஒரு ப்ரோக்ராம் செஞ்சு அதை ஒர்கவுட் செய்ய பொருட்களும் வச்சு இருக்காரு.அதை அசெம்பிள் செஞ்சு இவங்க கூட போராடி நம்ம பூமியவே காப்பாத்தலாம்", என்று சொல்லி முடிக்க
அந்த இரைச்சலிலும் முழுவதும் கேட்ட மீட்பாளர், "சரி வா பா..உனக்கு துணையாய் நானும் வரேன்", என்றார்.

இருவரும் அப்போர்களத்தை உயிரை பணயம் வைத்து கடந்து அருண் வீட்டை சென்றடைந்தனர்.
அங்கே அவன் வீடு பாதி சிதைந்த நிலையில் காண கிடைக்க தன் தந்தையின் அறையை நோக்கி சென்று அலமாரியின் உள்ளறையில் வைத்த Aliens' Attacking Programming(AAP) புத்தகத்தை கைப்பற்றினான்.

அதை திறந்து படித்து பார்த்தவனுக்கு ஏமாற்றம் மட்டுமே பரிசாக கிடைத்தது.காரணம்,அதை செயல்படுத்த குறைந்த பட்சம் 500 இரும்பு பொருட்கள் தேவை.அப்படியே தயாரித்தாலும் வேற்றுகிரக வாசிகள் வைத்திருக்கும் 40கும் மேற்பட்ட பறக்கும் தட்டுகளுக்கு இது ஒன்று ஈடாகாது என்று வருந்தியவன் அப்படியே சரிந்து அமர்ந்தான்..அலமாரியையே வெறிக்க பார்த்தவன் சட்டென்று மற்றொரு புத்தகத்தையும் பார்த்தான்.விருட்டென்று எழுந்து அதை கைப்பற்றினான்.அதன் முகப்பை பார்த்தவன் நொடி பொழுதில் தன் பள்ளிப்பருவ வாழ்க்கையில் அப்பாவுடன் செலவழித்த தருணங்களையெல்லாம் ஒன்று திரட்டினான்.

இரகசிய எழுத்துக் கலையை(Cryptography) அருணின் அப்பா முழுமையாக அவனுக்கு விளக்கி சொல்லி கொடுத்தது நினைவிற்குவர உடனே முகப்பில் உள்ள எழுத்துக்களை மறைக்குறியாக்கம்(Decrypt) செய்தான்.

அவனுக்கு கிடைத்த பதில் அவன் கண்களில் ஆனந்த கண்ணீரை பெருக்கெடுக்க செய்தது..அது தான் "This is only for you my dear Arun".

வேகவேகமாக புத்தகத்தில் உள்ள ப்ரோக்ராமை மறைக்குறியாக்கம் என்று சொல்லப்படும் பெயர்ப்பை செய்து முடித்தான்.

தற்பொழுது தன்னிடம் உள்ள algorithmஐ கொண்டு சிறிய ரிமோட் ஒன்றை தயார் செய்தான்.இதனை கொண்டுதான் எதிரிகளை ஒழிக்கவேண்டுமென தனக்குள் கூறிக்கொண்டான்.
இதனை பயன்படுத்தி எதிரிகளை நேரடியாக எதிர்க்க முடியாவிட்டாலும் அவர்களின் பறக்கும் தட்டுகளின் செயல்பாடுகள் அனைத்தையும் அருணின் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.எனவே தன் வேலையை தொடங்கினான்.முதலில் ஒரு பறக்கும் தட்டை செயலிழக்க செய்தான்.கண்ணிமைக்கும் நேரத்தில் அதிலிருந்த ஏலியன்கள் அடுத்த பறக்கும் தட்டினுள் புகுந்துகொண்டன.
இப்படியே ஒவ்வொன்றாக செயலிழக்க செய்யலாம் என்று நினைத்தவனுக்கு அதுவே பெரிய சவாலாகி போனது.ஏலியன்கள் ஒன்றோடொன்று கூட்டணி வைத்து மேலும் பூமியை தாக்க துவங்கிற்று.
இதற்குமேல் தாமதிக்க வேண்டாமென அவசரஅவசரமாக அணைத்து பறக்கும் தட்டுகளையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அதை அப்படியே மலை பகுதிக்கு செலுத்தி வெடிக்க செய்தான்.நீண்ட பெரும் சப்தத்தில் மக்கள் அனைவரும் மிரண்டனர்.
அரைமணி நேரத்திற்கு பின்பு மழை பெய்து ஓய்ந்ததுபோல் மக்களனைவரும் பதுங்கும் குழியிலிருந்து வெளியேறினார்..அதற்குள்ளாக மீட்பு குழுவினர் அருணை பாராட்ட துவங்கியிருந்தனர்.

இரண்டு மாதங்களில் அனைத்தும் பழைய நிலைக்கு மாறியிருந்தது...அணைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் அருணின் சாதனைகள் பேசப்பட்டது.அருணை பெற்றதற்கு அவன் தாய் மிகவும் பெருமைபெற்றாள்...
"நான் தான் அன்னிக்கே சொன்னேன்ல மா,என்னை நெனச்சு நீ பெருமை படுவனு...இப்போ பாத்தியா" என கண்ணடித்தான் அருண்.

"டேய் அண்ணைக்கு நீ சொன்னது நிலாவுல போய் ஷாப்பிங் பண்றது டா", என அர்ச்சனா அருணின் காதை திருக...
"ஸாரி மா ஸாரி மா...இன்னும் கொஞ்ச நாள் டைம் குடு உன் ஆசையை நிறைவேத்திடறேன்",என்றான் அருண்..
இதையெல்லாம் டைம் மெஷினில் கண்டு ஆனந்தத்தில் கண்கலங்கினார் அருணின் தந்தை முகிலன்.
மெல்ல அருணின் அறைக்கு சென்று பார்த்தார்...அங்கே எட்டு வயது குட்டி அருண் தூங்கிக்கொண்டிருந்தான்.அவன் நெற்றியில் முத்தமிட்டு "Advance Congratulations da Arun" என்று கூறிவிட்டு தூங்க சென்றார் முகிலன்.

எழுதியவர் : Shagira Banu (15-Jun-19, 11:18 am)
சேர்த்தது : Shagira Banu
பார்வை : 179

மேலே