காரைக்கால் அம்மைக்கு விண்ணப்பங்கள்

காரைக்கால் அம்மைக்கு விண்ணப்பங்கள்

பா.அகிலன் -

கேள்விப் பதிகம் - 01

தேகங்கள் தேகங்கள்மீது விடாய் கொள்கின்றன
திறந்து நுழைந்து
நுழைந்து திறந்து
நீர் மேல் நீரைப் பொழிந்தாறி
தாமரைகள் இலங்கும் நீர் மேடாகின்றன கடல்கள்
மின்னுகின்றன மறைகின்றன மகரந்த மணிகள்

பரஸ்பரம் அனுமதி மறுக்கப்பட்ட உடல்களிற்
பாசி படிந்து நிராசைகள் குடிலிடுகின்றன பெருகிப் பெருகி
மறைந்து மறுத்து
நடித்து ஒறுத்து
தேகங்களின் ஓலமறாமலே
ஒழுக்கச் சேலைகளுடன் பிணவாயடைகின்றன அவை
காரைக்காலம்மை ஏன் பேய் வடிவு கேட்டீர்?
கல்லுடல்களும்
கனிவிலா நாட்களும் சலித்தா?
வலித்தா?
எதிர்த்தா?



கேள்விப் பதிகம் – 02

ஆகாயமும் தரையும் தொடுமிடமொன்றில்
தடுமாறும் வர்ணங்களில் ஒரு விரிப்பு
திரண்டு பொங்கிய தலையணைகளில்
தவறி வீழ்ந்த நிலாவும் மழை வானும் உறங்க

போகம் தாழிடப்பட்ட வறிய உடலில்
மோகம் கண்டியதால் தவறும் சமநிலையில்
கடதாசிப்பூக்கள் நாடகங்கொள
ஒருமுறை கல்லாயச் சமையும் விந்து
மறுமுறை தரைக்கு நீராகும்

நெடுமூச்சுப் புற்றெறிந்து
இராசப் பேரளவை மஞ்சத்திற் சுருளும்
பெருந்தகை
காரைக்காலப்பன் எவ்வடிவம் கேட்பான் அம்மை?

எழுதியவர் : பா.அகிலன் - (15-Jun-19, 9:29 pm)
பார்வை : 28

மேலே