பரமா சாவு பயத்தை காட்டிட்டாங்க - பரமேஸ்வரனும் பாமரனும் கவிதை தொகுப்பு

பரமா! சாவு பயத்தை காட்டிட்டாங்க!
தவிச்ச வாய்க்கு தண்ணி இல்ல! ஆத்து எங்கும் மண்ணும் இல்ல!
தலைக்கு மேல வச்சிருக்க உன் கங்கையை!
தமிழ்நாடு வரைக்கும் கொஞ்சம் தொறந்து விடேன்!

பாமரா! அது சாவு பயமில்லை! உன் தற்கொலை முயற்சி!
பொன்னியும், வைகையும் அங்கே குற்றுயிரும் குலைஉயிருமாய் இருக்க!
என்ன தைரியத்தில்? என் தலையில் இருக்கும் கங்கையை கேட்கிறாய்!
ஒரு தரம் வரம் தந்து என் தலை தப்பியதே போதும்!

பரமா! யாரோ வீணாக்க! யாரோ கொள்ளை அடிக்க!
தண்டனை மட்டும் எனக்கா? வேறு வழி இல்லையா!
வாரம் ஒண்ணாச்சு! 'டே ௦' னு சொல்லியாச்சு!
தயை புரியுங்கள் மகாதேவா! தாகம் தணியுங்கள்!

யாரோ அல்ல பாமரா! தனி ஒருவரால் நீரையும் மண்ணையும் அழிக்க முடியாது!
இது கூட்டு கொலை முயற்சி! எனவே தண்டனையும் அனைவருக்கே!
அதே போல் வாரம் ஒன்றல்ல மகனே! வருடங்கள் பல ஆகிற்று!
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்க்காரம் என்பார்கள்! அது தான் இது!

வேறுவழி இல்லையா பரமா! காத்தருளுங்கள் எம் குழந்தைகளையாவது?
எங்கள் பாவம் எம்மோடு போகட்டும்! உங்கள் வாக்கு! இனி எங்கள் இலக்கு!
நீரும் மண்ணும் இனி எங்கள் மூச்சு!
மன்னியுங்கள் இம்முறை! மனம் தணிந்து! மழை அளியுங்கள்!

இறுதி வாய்ப்பு பாமரா! நினைவில் இருத்திக்கொள்!
குளம், குட்டை, ஆறு, ஏரி அனைத்தையும் தூறு வாறு! உன் மனதையும் சேர்த்து!
வீட்டிற்கு ஒரு குழாய் மட்டும் அல்ல! ஒரு கேணி வை!
இதோ வரும் மழையை! மழலையாய் நேசித்து பாதுகாத்து கொள்!

நீரின்றி அமையாது உலகு!

எழுதியவர் : பிரபு பாலசுப்பிரமணி (20-Jun-19, 6:17 pm)
சேர்த்தது : Prabhu Balasubramani
பார்வை : 122

மேலே