விரதத்தின் விரிவகை - உண்டி கொடுத்தலின் உயர்வு - கலி விருத்தம் - வளையாபதி 18

வெண்டளை பயிலும் கலி விருத்தம்

துற்றுள வாகத் தொகுத்து விரல்வைத்த(து)
எற்றுக்கஃ துன்னின் இதுஅதன் காரணம்
அற்றமில் தானம் எனைப்பல ஆயினும்
துற்றவிழ் ஒவ்வாத் துணிவென்னு மாறே. 18 வளையாபதி

பொருளுரை:

(துறவி என்று சொல்லப்படும் நான்) சோற்றினை மிகுதியாக ஏற்றுக் கையிலேந்தி வருவது கண்டு, அங்ஙனம் செய்வதற்குக் காரணம் என்னவோ? என்று கேட்பாயானால் குற்றமில்லாத தானப் பொருள்கள் என எத்தனையோ பலவாக இருந்தாலும், அவையெல்லாம் உண்ணும் சோற்றிற்கு நிகராகாது என்பதுதான் தெளிவான முடிவு ஆகும். இதுவே அங்ஙனம் செய்தற்குக் காரணமாகும்.

விளக்கம்:

துற்று - சோறு. உளவாக - மிகுதியாக. விரல் - ஆகுபெயர், கை.

தன் பலிக்கலத்தில் நிரம்பிச் சோறு ஏற்று வரும் ஒரு துறவியைக் கண்ட ஒருவன் நீ இங்ஙனம் மிகவும் சோறு தொகுத்து வருதற்குக் காரணம் என்ன என வினவினான். அதற்குக் காரணம் கூறுபவன் தானங்களுள் வைத்து உண்டி கொடுத்தலே நனியுயர்ந்தது. அதனால், நானும் கண்பார்வையற்றோர், காது கேளாதோர், கால் முடமானோர் முதலியவர்க்குத் தானம் வழங்கவே இவ்வாறு ஏற்று வருகின்றேன் காண்! என விடை கூறினன். (இஃது ஊக்கமாத்திரமே)

அற்றம் - குற்றம். தானப் பொருட்களுள் உணவு தருவதைத் தலை சிறந்த தென்பதனை,

ஆற்றுநர்க்(கு) களிப்போர் அறவிலை பகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
மேற்றே யுலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே. (மணி -11-92:99)

என்ற ’மணிமேகலை’ பாட்டிலிருந்து துறவிகள் சோறு மிகவும் இரந்து ஏனையோர்க்கு வழங்கும் வழக்கமுடையர் என்பதனை உணர வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Jun-19, 8:32 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 41

சிறந்த கட்டுரைகள்

மேலே