பாரி மொழியாக்கம் செய்த கதைகள் – -------------------கடிதங்கள்

ஜெ



இந்த தளத்தில் பாரி மொழியாக்கம் செய்து வெளியிட்டுவரும் சிறுகதைகள் புதிய வாசல்களைத் திறக்கின்றன. அறிவியல்கதைகள் என்றாலும் அவையெல்லாம் வெறும் ஆச்சரியத்தை மட்டும் அளிக்காமல் வாழ்க்கையின் பல கோணங்களை திறந்துகாட்டுவனவாக உள்ளன. மொழியாக்கமும் மிகவும் சரளமானதாகவும் எளிமையாக வாசிக்க வைப்பதாகவும் உள்ளது.



நான் மொழியாக்கக்கதைகளை பொதுவாக விரும்பி வாசிப்பதில்லை. ஏனென்றால் அவை எனக்கு அத்தனை வாசிப்பு அளிப்பவையாக இல்லை. ஆர்.சிவக்குமார், எம்.சிவசுப்ரமணியம் ஆகியவர்கள் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பு செய்த கதைகள்தான் மிகவும் பிடித்தமானவை. மலையாளத்தில் இருந்து யூசுப், யூமாவாசுகி ஆகியோரின் மொழியாக்கங்கள் சிறப்பானவை.



இதுவரை வந்த கதைகளில் முக்கியமானது நிலவின் தொலைவு அதை கதை என்பதைவிட ஒரு நீண்ட கவிதை என்றுதான் சொல்லவேண்டும்.நிலவைப்பற்றிய எல்லா பழைய உவமைகளையும் புதிய பாணியில் பயன்படுத்தியிருந்தார். அற்புதமான கதை. நிலவு வானத்தில் இருக்கும் ஒரு பெரிய பசுவின் மடி என்ற எண்ணம் வந்தது



ஆர்.எஸ்.மகாதேவன்



அன்புள்ள ஜெ,



அறிவியல்புனைகதைகளை மொழியாக்கம் செய்துகொண்டிருந்த டிஏ பாரி நிலவின் தொலைவை மொழியாக்கம் செய்திருக்கிறார். அற்புதமான கதை. கவிதை போல இருக்கிறது. மிகச்சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். ஆனால் இது அறிவியல்கதை அல்ல. இதை உருவகக்கதை அல்லது ஒருவகை ஃபெயரி டேல் என்றுதான் சொல்லமுடியும்



எஸ்.ராமச்சந்திரன்



அன்பின் ஜெ,



‘தீயின் எடை’ அறிவிப்பு கண்டு மகிழ்ச்சி :)



ஐசக் பாஷாவிஸ் சிங்கரின் ‘முட்டாள் கிம்பெல்’ மொழியாக்கத்தை இணைத்துள்ளேன். இதுவரை செய்த மொழியாக்கங்களிலேயே மிகவும் நிறைவளித்த கதை.



நான் மொழியாக்கத்திற்குத் தேர்வு செய்யும் கதைகள் குறித்து ஓர் சிறிய விளக்கம்: மொழியாக்கம் எனும் செயல்பாடு தன்னளவில் அளிக்கும் நிறைவின் பொருட்டே இதை தொடர்ந்து செய்வதாக முடிவெடுத்தேன். எனவே கதைத் தேர்வை பொருத்தவரை சுதந்திரமான போக்கையே மேற்கொண்டு வருகிறேன். அறிவியல் புனைவு சார்ந்த கதைகள் என்பது ஊட்டி முகாமை ஒட்டி இயல்பாக அமைந்த தேர்வு. இவற்றிலும் சில கதைகள் அறிவியலுக்கான தர்க்கங்கள் இன்றி ஒருவகை மிகை கற்பனையின் (Fantasy) எல்லைக்குள் இருப்பதை வாசகர்கள் காணலாம். எனவே கறாரான அறிவியல் சிறுகதைகளின் வரிசையில் இவற்றை கொள்ளத் தேவையில்லை.



மற்றபடி நான் மொழியாக்கத்திற்கு தேர்ந்தெடுக்க வைத்துள்ள அளவுகோல்கள் மிகவும் எளியவை. முதலாவாதாக ஒருகதை இலக்கிய பிரதியா இல்லையா? அடுத்து அக்கதை தனித்துவம் கொண்டதாகவும் என் ரசனைக்கு ஏற்பவும் உள்ளதா? இவ்விரண்டிற்கும் ஆம் எனில் தேர்ந்தெடுக்கலாம் என்பதே என் இப்போதைய அளவுகோல். வகைபிரிக்கும் வேலையெல்லாம் பின்னர் பாத்துகலாம், தற்போது பணியைச் செய்வோம் என்பதே என் மனநிலையாக உள்ளது. உதாரணமாக தற்போது மொழியாக்கம் செய்துவரும் ஐசக் சிங்கரின் கதைகளுக்கும் அறிபுனைவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. உண்மையில் இவ்வாறு வெவ்வேறு கதைக் களங்களில் ஈடுபடுத்திக் கொள்வது உற்சாகமான மீட்பாகவே உள்ளது. இது தொடர வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.



இரண்டாவது இக்கதைகளை ஆங்கிலத்தில் வாசிப்பது குறித்து: ஒருவர் ஆங்கிலம் சரளமாக வாசிப்பாரெனில் நிச்சயம் இவற்றை ஆங்கிலத்தில் வாசிப்பதையே பரிந்துரைப்பேன். எனவேதான் ஆங்கில மூலத்திற்கான சுட்டியை எப்போதும் அளித்து வருகிறேன். மொழியாக்கம் தமிழில் வாசிக்க விரும்புபவர்களுக்கானது. மேலும் துவக்கம்முதலே இம்மொழியாக்கங்களின் பயன்மதிப்பு சார்ந்து எனக்கு எந்தச் சிந்தனையும் இருக்கவில்லை. முன்னரே சொன்னதுபோல் இச்செயல்பாட்டின் மூலம் படைப்பு மற்றும் மொழியில் ஆழ்ந்திருப்பதன் இன்பமே என்னை வழிநடத்துகிறது.



பாரி,

பெருந்துறை.



Save
Share
------------------------------------------------
தொடர்புடைய பதிவுகள்


நிலவின் தொலைவு – இடாலோ கால்வினோ
அஸ்பெஸ்டாஸ் மனிதன்-ஸ்டீபன் லீகாக்
தக்கவைக்கும் இயந்திரம்-பிலிப் கே டிக்
முழுக் கோடையும் ஒரே நாளில்-ரே பிராட்பரி
பிரபஞ்ச மெளனம்- டெட் சியாங்

எழுதியவர் : எழுத்தாளர் ஜெயமோகன் by Email (26-Jun-19, 6:01 am)
பார்வை : 62

மேலே