இலியிச் பாகம் 26 முதல் 30

பாகம் 26


தாமஸ் ஒரு முக்கிய நிகழ்வை அப்போது என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

இலியிச்சும் தாமஸும் ஒருமுறை காகிநாடா அருகில் உள்ள கபிலேஸ்வரபுரம் சென்று இருந்தனராம்.

அங்குள்ள ஒரு சிறிய தீவுக்கு செல்ல முடிவு செய்திருந்தனர். அதற்கு முந்தைய நாள் தங்கியிருந்த உணவகத்தில் அது நடந்தது என்றார்.

இலியிச் தன் சட்டையை கழற்றி கோட் ஸ்டாண்டில் மாட்டும்போது ஒரு சின்னஞ்சிறிய பல்லியை ஒரு கரப்பான் துரத்தியது. நெடுநேரம் போக்கு காட்டி ஓடிக்கொண்டிருந்தது அந்த பல்லி.

பின் கரப்பும் தன் சிறகை விரித்து முன்னிலும் ஆக்ரோஷமாக அதை துரத்த பல்லியும் தன்னால் முடிந்த அளவு அந்த சுவரின் ஓரங்களை கண்டறிந்து பதுங்கும் ஆவலுடன் வால் சுழற்றி ஓடியது.
கரப்பு அதிவேகமாக நெருங்கி வர பல்லி சட்டென்று தன் பொடி வாலை உதிர்த்து சுவற்றில் இருந்து தாவி கட்டிலில் விழுந்து கண நேரத்தில் மறைந்தும் போனது.

ஃப்ரொபஸர்...அந்த பல்லியை என்னால் நேசிக்க முடிகிறது. இப்போது ஓர் அன்பு உணர்வை என் மனம் உள்ளிழுக்கும் வேதனையை அனுபவிக்கிறேன். தரையில் எது விழுந்தாலும் அதை தூசி மறைப்பது போல்தான் இந்த அன்பும் அறிவின் முன் கோரமாய் தெரிகிறது.

இந்த பல்லியை நேசிக்கும் என்னால் அதை எடுத்து வளர்க்க தெரியாத ஒரு அறிவுதான் எனக்கு இருக்கிறது.

இந்த அறிவும் இந்த அன்பும் எனக்கு யாரால் ஊட்டப்பட்டதோ அவர்களின் வேதனையையும் சேர்த்தே எனக்கு ஊட்டி இருக்கின்றனர்.

இப்படி ஒவ்வொரு நாளும் என்னை கொலை புரியும் உணர்ச்சிகளுக்கு மத்தியில் நான் யார் என்பதை எப்போதும் உணர போராடுகிறேன் என்றான்.

இலியிச் இது சம்பவம். காட்சி. பார்ப்பதும் கேட்பதும் போதனைகள் அல்ல. உணர்வுக்கு மிஞ்சிய கல்வி வேறில்லை என்று அவனிடம் சொன்னேன்.

இல்லை ஃப்ரொபஸர். இதுதான் வாழ்க்கை என்றான். சில நொடிகளில் ஒரு பசி அனைத்தையும் குழப்பி விட்டது.
ஒரு கர்வமோ, அகங்காரமோ வேட்டையை தூண்டி விட்டது. ஒன்றின் துரத்தல் இன்னொன்றின் வேட்கை எல்லாமும்  சேர்ந்து சர்வ குழப்பத்தில் முடிந்தன.

ஃப்ரொபஸர்..நான் பல்லியோ அல்லது கரப்போ அல்ல.  கொஞ்சம் சிந்திக்க தெரிந்தவன். சிந்தனைகள் என்னை விரட்டி விரட்டி விளையாடுகிறது. கௌவிக்கொண்டு அலைகிறது. நான் யாராலோ யாருக்காகவோ சித்தரிக்கப்பட்ட பூச்சி. இதை அன்பு கொண்டு மெழுக வேண்டும் என்னும் சித்தாந்தத்தில் கொண்டு விடப்பட்ட ஜந்து. நான் ஓடுவது போலவே விரட்டவும் செய்கிறேன்.


என்னைப்போலவே நீங்களும், அவர்களும் இருக்கிறீர்கள்.
நான் ஏன் இன்னமும் அவர்களை போலவே இருக்க வேண்டும் என்பதுதான் என் பிரச்சனை என்றான்.

இதை எழுதலாமே என்று கேட்டேன்.

"வழிகாட்டிகளின் ஜம்பம் என்னிடமில்லை" என்று அவன் சொன்னதும் என்னால் மீண்டும் பேச முடியவில்லை.

ஃப்ரொபஸர்...என் மீது எனக்கு ஒருபோதும் குழப்பங்கள் வருவதில்லை.
என் கேள்விகள் எப்போதும் சாத்தியமில்லாத பருவத்தில் வருவதும், வெறும் ஆட்களுக்கு இடையில் பகிர்ந்து கொள்வதும் மட்டுமே அதன் துரதிர்ஷ்டம்.

இதை சொல்லிவிட்டு தாமஸ் ஒரு சிகரெட்டை பற்ற வைத்து கொண்டார்.

இலியிச் ஒரே ஒரு பக்கத்தில் எழுதப்பட்ட காப்பியமோ புராணமோ கிடையாது. அவன் முடிந்தமட்டிலும் மோசடிகளை கிழித்து கொண்டிருந்தான் என்றார்.

______________________________
பாகம் 27

காதுகளுக்குள் மோட்டார் ஓடும் சத்தம் கேட்கிறது ஃப்ரொபஸர். நான் ரசிக்காத போதும் அது என்னை தூண்டிக்கொண்டே இருக்கிறது என்றான்.

ஒரே பாடலை நாள் முழுவதும் விடாமல் கேட்டு கொண்டிருக்கும் ஒருவனோடு எனக்கு எந்த உறவும் இல்லை.

ஒரு பெரிய பாறைக்கு பின் என்ன இருக்கிறது என்பது முக்கியமல்ல. எது இருக்க கூடாது என்பதுதான் முக்கியம். மறுநாள் என்பது இந்த பாறைதான் மனிதர்க்கு. எனக்கோ கிழமைகள் கூட நினைவில் இல்லை.

சின்னஞ்சிறு குழந்தை, கடகடவென்று நாட்டின் பெயர்களையும் அதன் தலைநகரங்களையும் ஒப்பிக்கும்போது இப்படி பிரித்து கூறு போட்டிருக்கும் மனிதனை நினைத்து குற்ற உணர்ச்சியிலும் அவமானத்திலும் தவியாய் தவிக்கிறேன்  ஃப்ரொபஸர்.

இப்படியே பேசிக்கொண்டிருக்கும் இலியிச் சர்வ அதிகாரத்துடன் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் மறுத்து வந்தது மட்டுமே அதிர்ச்சி.

கொள்கைகள், கோட்பாடுகள் என்னும்போது நீ அரசியலை மட்டும் நினைத்து கொள்ள கூடாது.

இலியிச் சித்தாந்தங்கள் பழக்கங்கள் மீதான பார்வைகள் பற்றி சொல்கிறேன்.
"எனக்கு கிளி ஜோசியக்காரன் மீது இருக்கும் அதே பரிவுதான் அவன் கிளியின் மீது இருக்கும் கருணையும்" என்பான்.

இருவருக்கும் ஒரே மாதிரி பசிக்கும் என்பதை சொல்லும்போது இலியிச் வெட்டுப்புலியாக மாறி விடுவான்.

சாட்சிகள் இல்லாது வாழ்க்கையை குழப்பி விடுவதுதான் கொள்கைகள்.

ஆற்றுக்கும், கடலுக்கும் என்ன கொள்கைகள்?

முருங்கை பூ தக்காளி செடியில் கிடைக்காது என்பான்.

அறிவியலால் தரை தட்டி போயிருக்கும் கடைசி மனிதனுக்கும் என் அஞ்சலி என்று போஸ்டர் அடித்து கொல்லங்கோடு கம்யூனிஸ்ட் ஆபிஸில் ஒட்டிவிட்டான்.

மருத்துவத்தில் விவசாயத்தில் அறிவியல் சாதனைகளை மறுக்க முடியுமா? இன்றைய தொழில் புரட்சியில் விஞ்ஞானம் ஒன்றிணைந்து மானசீகமாக சர்வதேசமாய் உழைத்து வருகிறது. இதை மறுக்க முடியுமா?

இலியிச் இதையெல்லாம் மறுக்கிறான். "எத்தனை அறிவியல் கட்டுரைகள் படித்தாலும் வெளிக்கிருக்க முக்கத்தான் வேண்டியிருக்கிறது" என்கிறான்.

அவனுக்கு நிரம்பி இருந்தாலும் காய்ந்து இருந்தாலும் ஒரே பிரச்சனைதான்.

"கட்டுப்பாடுகளில் இருந்து தப்பித்து கொள்வதை விட சுதந்திரத்தில் இருந்து தப்பித்து கொள்வதே முக்கியம்" என்று இலியிச் சொல்லும்போது அதற்கான பதிலை தேட முடியாது போய் விடுகிறது.

தாமஸ் இதை சொல்லி முடித்துவிட்டு விழிநீரை துடைத்து கொண்டார். இலியிச் என் நண்பன். அவனை நினைக்காத நாள் என்பது இன்றுவரை இல்லை.

நீ அவனை சந்திக்கும்போது "ஒட்டபாலத்து தாமஸ் கௌதியார் பார்க்கில் தனியாக இருக்கிறான்" என்று மட்டும் சொல்ல வேண்டும் என்று கூறி என் இரு கைகளையும் பிடித்து குழந்தையை போல் உருகி அழலானார்.


____________________________________

பாகம் 28


தாமஸை சந்தித்தபின் மறுநாளே  நான் டார்ஜிலிங் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்து விட்டேன்.

இலியிச்க்கும் எனக்கும் இருக்கக்கூடிய உறவு அத்தனை திட்டமிட்ட ஒன்று அல்ல.
யாரையெல்லாம் அவன் விரும்பினானோ அவர்கள்தான் அவனை வெறுத்தனர். இதுதான் எனக்கும், நமக்கும் எனும்போது உருவாகும் அதே உறவுதான் எங்களுக்கு.

அவன் சட்டென்று கிளம்பி வெளியேறி விடும் இடத்தில் என்னால் அப்படி நடிக்க கூட முடியவில்லை. நான் அவனோடு இருந்திருக்கிறேன் என்றால் அது வெறும் சொற்பம். அப்போது அவனிடத்தில் தாடி இருந்ததா என்பது கூட நினைவில் இல்லை. வாசிக்கவும் அவன் எதையும் விட்டு வைக்கவில்லை.

அவன் இருந்திருக்கிறான் என்பதை விட இப்போது இருக்கிறான் என்ற செய்தியே
முக்கியத்துவம் வாய்ந்தது. இப்போதும் தவற விடக்கூடாது என்பதற்காக இந்த பயணம்.

அவனுக்கு சொல்ல நிறைய தகவல்கள் உண்டு. அவனோடு ஒன்றாய் கூடி களித்த நண்பர்கள் பற்றியும் தெரியும். அவர்கள் அவனுக்காக காத்திருப்பதும் தெரியும்.

இதை நினைக்கும்போது பெருமிதமாக இருந்தது. இலியிச் யாருக்காகவும் சாக்கு போக்குகளுடன் வாழவில்லை.

அவன் ஒரு உறுதியோடு இருந்ததையும், கூறியதையும் நம் கற்பனைகள் மறுத்து கொண்டே இருந்தது.

இலியிச் எது இருந்ததோ எது இருக்க போகிறதோ அந்த இரண்டுக்கும் முதல் எதிரி நானே என்று மார் தட்டிக்கொண்டதை யாரால் எப்படி தைரியத்துடன் ஏற்க முடியும்?

அவன் ஓடியதாகவோ, ஒளிந்து கொண்டதாகவோ நினைப்பவர்கள் நினைக்கட்டும். அது அவர்கள் விருப்பம்.

இலியிச் எங்கேயோ இருந்து இன்னும் ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறான் என்பதை மறுக்கவே முடியாது.

சுனிதாவை தொலைபேசியில் அழைத்து என் பயண திட்டங்களை கூறினேன்.
அவர் பானர்ஜியிடம் தெரிவித்து பின் மீண்டும் அழைப்பதாக கூறியுள்ளார்.


_________________________________

பாகம் 29


மூன்று நாட்கள் பயணத்திற்கு பின் டார்ஜிலிங்கில் இறங்கிய போது டோலா பானர்ஜி வந்து அணைத்துக்கொண்டார்.

அங்கேயே ஒரு ஹோட்டலில் அறை அமர்த்தி இருந்தார். நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தோம்.

சுனிதாவை அழைத்து என் நன்றியை பரிமாறிக்கொண்டேன்.

சொனடா.

சற்று தள்ளி இருக்கும் ஒரு சிறிய கிராமம் என்பதால் நான் காலையில் கிளம்பி செல்லலாம். அதற்கு வண்டி அமர்த்தி இருப்பதால் கவலை வேண்டாம் என்றும் டோலா பானர்ஜி கூறினார்.



நான் வருவதை இலியிச்க்கு தெரியப்படுத்த விரும்பவில்லை. அது புதிய வேறு சிக்கலை உருவாக்க கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.

சொனடா எஸ்டேட்கள் சூழப்பட்ட அழகிய கிராமம். இருப்பினும் உங்கள் முகவரியை கொண்டு அந்த இருப்பிடம் செல்வது மிக எளிதுதான். நீங்கள் நன்கு ஓய்வெடுங்கள் என்று புறப்பட்டு சென்றார்.

என்னால் டோலா பானர்ஜி சென்றபின் அமைதியாக இருக்க முடியவில்லை. சில புத்தகங்களை வாசிக்க முயற்சி செய்தும் பலன் இல்லை.

சால்வையை போர்த்திக்கொண்டு வெளியேறினேன். குளிர் இருந்தும் வெயில் இருந்தது. "கண்களை இறுக்க கட்டிக்கொண்டாலும் வெயில் பொசுக்கவே செய்கிறது" என்று இலியிச் கோத்தகிரியில் ராஜமுந்திரி விஜயனோடு இருந்தபோது சொல்லி சிரித்தானாம்.

"மனிதனுக்கு விடுதலை முக்கியமல்ல. நம்பிக்கையும் முக்கியமல்ல. அவனுக்கு அவன்தான் முக்கியம். யாரையோ நினைத்து கொண்டிருப்பதன் மூலம் தன்னையே மறக்கும் சுயஇன்பத்தில் அவனுக்கு இணை வேறில்லை" என்று இலியிச் சொன்னதை இப்போதும் என்னால் மறக்க முடியாது.

அவனை தேடி வந்ததும் இதை நினைவுபடுத்தி பார்க்காமல் இருக்க முடியவில்லை.


__________________________________

பாகம் 30

சொனடா.

சில ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் பயணித்த பின் அந்த ஏல தோட்டத்தில் கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலே பணியாற்றிய மாரிமுத்துவை பார்த்து விட்டேன். மார்முது என்றே அவர்கள் அழைக்கின்றனர்.

வீட்டுக்கு அழைத்து சென்றார்.

இலியிச்... ராமு...எப்படி சொல்லி புரிய வைக்க முடியும் அவருக்கு? ஒரு தமிழன் உங்களோடு...என்றேன்.

மாரிமுத்து புரிந்து கொண்டு சற்று அமைதியாக இருந்தார். ஒரு சுருட்டை பற்ற வைத்துக்கொண்டு பேசாலானார்.


நீங்கள் சொல்லும் அவர் இங்குதான் மூன்று வருடம் மேல் இருந்தார்.

சென்ற வாரத்தில் இருந்து அவர் இங்கு இல்லை. சொல்லிக்கொண்டும் போகவில்லை. புகைப்படங்கள் கூட இல்லை என்றார்.

நான் எதிர்பார்த்ததுதான் இது.
இலியிச் இப்படிப்பட்டவன்தான்.

அவன் உள்ளுணர்வு அதி நுட்பமானது.
வருவது அறிந்து சென்றிருக்க மாட்டான். ஆனால் வெளியேறுவது மட்டுமே அவன் கடமையாகி இருக்கும்.

மூன்று வருடங்கள் அவர் உங்களோடு என்ன செய்து கொண்டிருந்தார்?

ஆடு மட்டும் மேய்த்தார். வேறு வேலை எதிலும் எந்த நாட்டமும் செலுத்தவில்லை.

அவர் ஏதேனும் பேசி எழுதியது இருக்கிறதா? குறிப்புகளாக இருந்தாலும் பரவாயில்லை என்றேன்.

தம்பி...நான் எழுத படிக்க தெரியாதவன். அவரும் அப்படி ஒன்றும் செய்த  மாதிரி நினைவில்லை என்றார்.

அவர் உடல்நிலை என்று இழுத்தேன்..

பதிலுக்கு பெரியவர் புன்னகைத்து தன் முஷ்டியை மடக்கியபோது நான் புரிந்து கொண்டேன். இலியிச்சின் மேனரிசம் அது. ஆக நலமுடன் இருக்கிறான்.

அவர் என்னை கூட்டிக்கொண்டு அவன் இருந்த இடமெல்லாம் காட்டினார். மண் பாதைகள், உட்கார வசதியான பாறைகள், நதிக்கு செல்லும் குறுகலான சரிவுகள்...

இங்கெல்லாம் இலியிச் எதுவும் பேசாமல், எழுதாமல் வாழ்ந்து வந்திருக்கிறான் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

போதும். பாதைகளை பார்ப்பதும் இலியிச்சை பார்ப்பதும் ஒன்றுதான். அவன் ஒரு பாதைதான். மனம் கொஞ்சம் கொஞ்சமாய் லேசாக மாற ஆரம்பித்தது.

இனி விடைபெற்று கொள்ள வேண்டும்.


மீண்டும் மாரிமுத்து வீட்டுக்கே வந்தோம்.
அவரின் பேரக்குழந்தைகள் வாசலில் விளையாடி கொண்டிருந்தது.

தாத்தா சொன்னவுடன் ஓடி வந்து கால்களை கட்டிக்கொண்டன. இலியிச் அந்த குழந்தைகளை எவ்வளவு நேசித்திருப்பான் என்பதும் புரிந்தது.

ஒரு குழந்தை அவசரமாய் வீட்டுக்குள் ஓடி ஒரு கனத்த அட்டையை கொண்டு வந்தது.

"மாமா வரஞ்சு கொடுத்தார்..."

நான் ஆவலுடன் வாங்கி பார்த்தேன். கோட்டோவியம்தான் அதுவும்.

ஒரு விநாடியில் இருந்து ஒரு மணி நேரத்திற்குள் பல சிந்தனைகளை தோற்றுவிக்கும் எந்த நுட்பமும் அதில் இல்லை. நதிக்கரையை சூரியன் வந்து சேரும் காட்சி. கீழே ராமு என்றும் அதற்கு கீழே இலியிச் என்றும் எழுதியிருந்தான்.


_________________________________

எழுதியவர் : ஸ்பரிசன் (11-Jul-19, 12:31 am)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 66

மேலே