இலியிச் பாகம் 21 முதல் 25 வரை

பாகம் 21


"தந்திரங்களுக்குள் நகர்ந்து போகும் மனது எல்லாவற்றுடனும் பொருந்தி போவதுடன் வேகமாய் ஒத்துழைக்கவும் செய்கிறது" என்று இலியிச் சொன்னபோது சகுபரும் நானும் இருந்தோம் என்று சுனிதா போனில் கூறவும் நான் ஆர்வமானேன்.

நீங்கள் இலியிச்சை பார்க்கும் போது அவன் என்ன வாசித்து கொண்டு இருந்தான்? நினைவிருக்கிறதா?

படிப்பா..? அப்படி எதுவும் இல்லை. ஆனால் மூன்று நாட்கள் நாங்கள் மாலை நேரத்தில் உலாவினோம். அப்போது இலியிச் நிறைய பேசுவார்.

அவர் பேச்சு சற்று கொச்சையான தமிழில் இருந்தது என் ஆச்சர்யம். அதற்கான காரணங்களை அவர் விளக்கவும் இல்லை.

ஏதேனும் நாடகத்தின் ஒத்திகை போலும் என்று நினைப்பேன்.

சுனிதா எனக்கு உரிய செய்திகளை தர மாட்டார் என்று தோன்றி விட்டது. எனவே அவரே பேசட்டும் என்று விட்டுவிட்டேன்.

இலியிச், மனிதன் எப்பொழுதும் தனக்குள்ளேயே மகத்துவங்கள் மீது காதல் கொள்பவன் என்றும், வசமாக சிக்கிக்கொண்டபின் குருட்டு நம்பிக்கைகளில் புரண்டபடி விழுந்து விழுந்து சிரிக்க அவனால் மட்டுமே முடியக்கூடியதென்றும், பிறரிடம் தன்னை சிரிக்க வைக்கவேண்டும் என கேட்டு கொள்ளும்  பாவமான ஜீவன் அது என்றும் ஒருநாள் சொன்னார்.

யார் மீதும் எனக்கு வருத்தமில்லை. நான் பிறர் தோளில் சாய்ந்து கொள்ள விரும்பவில்லை. வசனங்களுக்குள் பாழ் படாத ஒரு கடவுளை தேடிக்கொண்டு இருக்கிறேன்.

ரயில் பயணங்கள் கவர்ச்சிகரமானவை. இப்படியெல்லாம் அவர் பேசும்போது முன் பின் முரண்கள் இருப்பது போன்று தோன்றினாலும் அர்த்தங்கள் கூடிக்கொண்டே போகும்.

யாவரிடத்திலும் நடிக்கும் மனிதனுக்கு அவன் மொழியும், விழியுமே காட்டி கொடுத்துவிடும்.

காற்றில் தூசி போல் பரவியிருக்கும் இந்த சிந்தனைகள் மட்டுமே இப்போதைய நாகரீகம் என்றான்.

அவரிடம் ஜெய்ப்பூர் வருமாறு அழைத்தேன். அது இந்த வருடம் என் பயணத்தில் இல்லை என்று சொல்லி விட்டார்.

நான் என் பயணத்தை துவக்கிய நாளில் என்னுடன் இலியிச் இருந்தார்.

உங்களுக்கு சொல்ல என்னிடம் இப்போது ஒன்றும் இல்லையே என்று சொல்லும் போதுதான் என்னால் முழுக்க அவரை உணர முடிந்தது என்றார் சுனிதா.

இலியிச் டார்ஜிலிங்கில் இருக்கிறார். நான் செல்ல வேண்டும் என்றேன்.

மிக நல்லது. அங்கு என் தோழர் பானர்ஜி இருக்கிறார்.

செல்லும் முன் தொடர்பு கொள்ளுங்கள், விருப்பமிருப்பின்.

நிச்சயம் தோழி என்று போனை வைத்தேன்.

____________________________

பாகம் 22

இலியிச்சை சந்திக்கும்போது என்னவெல்லாம் கேட்க வேண்டும் என்பதை நான் நினைத்து கொண்டே இருந்தேன்.

அவன் எழுதிய, பேசிய, வரைந்த எந்த ஒன்றும் என்னிடம் இல்லை. ஓரிரு முறை பார்த்திருக்கிறேன். அவ்வளவுதான்.
இப்போது ஈர்க்கிறான். அவனுக்கு அந்த ஈர்ப்புகள் இல்லை. வராது. பார்க்கும் போதே நத்தை போல் சுருண்டு விடுவான்.

கண் காணாத தேசம். டார்ஜிலிங். என்ன மொழி என்பதும் தெரியவில்லை.

சாப்பாட்டுக்கு இலியிச் என்ன செய்வான்? உயிர் மீது அக்கறை கொள்ளும் யாருமே கேட்கும் கேள்வி இதுதான். இலியிச்சிடம் நாம் இதை கேட்கவே முடியாது.

"வயிற்றுக்கு மூன்று வேளை பசியை போதித்த பின்னர்தான் மனிதனால் காமத்தில் இருந்து கொஞ்சம் விடுபட முடிந்தது. இதுதான் முதல் நாகரிகமான அசிங்கம்" என்பான்.

காமத்திற்கும் உரிய கால நேரங்களை ஒதுக்கி கொண்ட மனிதனுக்கு மட்டும்தான் எத்தனை விதமான ரசாயனங்கள் அவன் மனங்களில்.

நோன்பிலும் விரதத்திலும் தன்னையே பொசுக்கி கொண்டிருக்கும் போதும் கூட அவன் மனம் எச்சிலை விட்டு நகர்வதாக தெரியவில்லை.

ஒருநாள் நடுப்பகலில் தேவிகுளம் ராபர்ட்டுடன் பேசி கொண்டிருக்கும்போது இப்போது என் ஆண்மை முட்டுகிறது. நான் என்ன செய்ய வேண்டும்? இரவு வரை இப்படியே காத்திருக்கத்தான் வேண்டுமா? என்று கேட்டானாம்.

ஒழுக்கத்தின் மீது காய்ச்சல் கொண்டு மரத்து போய் இருக்கும் மனிதனின் அடுத்த கண்டுபிடிப்புதான் கோட்பாடுகள்.

ஒவ்வொருவனும் தன் அறிவை அழித்து கொள்ளும் போட்டியில் அடுத்தவனை மிஞ்சிக்கொண்டே இருப்பதில் எத்தனை புளகாங்கிதம் கொள்கிறான் என்று  இலியிச் சிரித்துக்கொண்டே கேட்பான்.

பசியின் கொடை தேடல். காமத்தின் கொடை படைப்பு. இந்த இரண்டும் இப்போது இல்லை. மாறாக அவனும் அவளும் ஆணும் பெண்ணுமாய் மாறிப்போய் இருக்கின்றனர்.

பெரியப்பாவும், சித்தப்பாவும் வாரித்தூக்கி அணைத்துக்கொண்டு வழங்கிய முத்தங்கள் எல்லாம் போயே போயிற்று. குட் டச்..பேட் டச்..தூ'வென துப்பிய இலியிச்...

இனியும் அவனை சந்திக்காது காலங்கள் நகர்த்த கூடாது என்பதிலும் நான் அதிக கவனம் கொள்ள ஆரம்பித்தேன்.


__________________________

பாகம் 23


கன்னம்பரம்பு தாமஸ் செங்கோட்டைக்கு வந்திருக்கிறார் என்ற செய்தி வந்தவுடன் அது நல்ல நிமித்தமாகவே பட்டது.

திருநெல்வேலியில் இறங்கி செங்கோட்டைக்கு சென்று அவர் இருந்த லாட்ஜை கண்டுபிடித்து விட்டேன்.

தாமஸ் இலியிச்சின் நெடுநாள் நண்பர்.
ஒரு வாரம் ஊரில் இல்லையென்றால் அவன் தாமஸை பார்க்கவே கன்னம்பரம்பு சென்று இருப்பான் என்பார்கள்.

வாரும் வே...அத்தி பூத்தது. என்றார்.

தாமஸ்.



இந்த பெயர் கேரள தமிழக மாநிலத்தில் சில வருடங்களுக்கு வயிற்றில் புளியை கரைத்து கொண்டிருந்தது. வெளியில் சொல்லி கொள்ளாதும், காட்டி கொள்ளாதும் பல பேர் இவரை சபித்து கொண்டிருந்தனர்.

"இட்லி மாவு அடி புகழ்" எழுத்தாளரும் இதில் அடங்குவார். போகட்டும். யார்தான் லட்சியமின்றி பொழுது போக்க மட்டும் எழுதப்போகிறார்கள்.

மடியில் கட்டிக்கொண்டு போவதற்கு கிடைக்கும் இடத்தில் கிடைத்தவரை எல்லாமே லட்சியங்கள்தான்.

தாமஸிடம் இலியிச் டார்ஜிலிங்கில் இருப்பதை சொன்னேன்.

அவன் அல்பெர் காம்யுவின் கல்லறையில் சுற்றிக்கொண்டு இருப்பானென்று நினைத்தேன் என சிரித்தார்.

பிறகு நினைத்து கொண்டவரை போல் ஓர் ஆழமான மௌனத்தில் நாட்டம் செலுத்தினார்.

வருடங்கள் நினைவில் இல்லை. அவனும் நானும் திருவனந்தபுரத்தில் சாலை கடைகளில் சுற்றிக்கொண்டு இருப்போம்.

நகுலனையும் மாதவனையும் பேச விட்டு பார்க்க வேண்டும் ஸார் என்பான்.

காந்தி பார்க்கில் அமர்ந்து நெடு நேரம் பேசிக்கொண்டு இருப்போம். தமிழ் பேசும் கடலை வியாபாரிகள் அனைவரும் அவன் நண்பர்கள்.

அவன் குணங்கள் என்பது பற்றி நான் பேச முடியாது. யாரும் பட்டினியில் சாகவே கூடாது ப்ரொபஸர். பிறந்ததன் அர்த்தம் அதுவல்ல என்பான்.

நாங்கள் வண்டிபெரியாரில் இரண்டு வாரங்கள் தங்கி இருந்தோம். அது மழைக்காலம். இலக்கியமும் அரசியலும் மட்டுமே பேசிக்கொண்டு இருந்தோம்.

அப்போது இலியிச்  'வண்ணத்து பூச்சியின் இறந்தகாலம்' னு ஒரு கைப்பிரதி எழுதி இருந்தான். அதை நான் வாசித்தேன் என்றார்.

__________________________________

பாகம் 24

வண்ணத்துப்பூச்சியின் இறந்தகாலம் ஒரு படிமம். அதன் கூட்டுபுழு பருவத்தை தனது களமாக்கி அதில் இலியிச் பலவும் எழுதி இருந்தான். மனப்போக்கில் மட்டுமே எழுதினான் என சொல்ல முடியாது.

சில கவிதைகளும் சில பத்திகளுமே அதில் இருந்தது. அவை முன் பின் தொடர்ச்சி இல்லாமல் ஆதாரக்குறிப்புகள் இல்லாதும் கண்ணிகளாகவே இருந்தன.

"பறக்கத்தெரிந்த எதற்கும் மொழி இல்லை. இருந்தும் அவை தன் ஒலிகளின் குறைகளை  குறித்து யாரிடமும் எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை. அவைகள்தான் பறக்கின்றன".

இப்படி ஆரம்பிக்கும் இலியிச் பின் தாவரங்களின் பொறுமை, நிலத்தின் நிறம், அறிவியலில் சரிந்து போன காலங்கள், கூட்டுபண்ணையும் அதன் அரசியலும் என்று பலவற்றை பேசுகிறான்.

எதையும் விட்டு விடாமல் படிப்பதற்கு நீண்ட அமைதி தேவைப்படும். அவன் எப்போது இதை யாருக்காக எழுதினான் என்ற குறிப்புக்கள் அதில் இல்லை.

"அறிவியல் மனிதனை தாழ்த்தி விட்டது. அது கற்பனையின் கொடூரம். நம்ப முடியாத விசித்திரங்களை தனக்குதானே பேணி வளர்த்த மனிதனின் எல்லைகளை குறுக்கி அவனை சாதாரண சந்துக்குள் அடைத்து மூடி விட்டது."

"மொழியும் சிந்தனையும் கடைகளில் கிடைக்கும். சில சமயம் ஓட்டல்களிலும்."

"அறிவின் கடைசி பேரழிவும் அதன் துரதிர்ஷ்டமும் வீழ்ச்சியும் மனிதனே"

"நான் சபிக்கப்பட்ட காரணத்தினால் மட்டுமே இன்று வரை நிம்மதியாக இருக்கிறேன்".

"தெய்வங்கள் எப்போதும் சக்கர நாற்காலியில் போகின்றன".


"கருப்பையை கேலி செய்யும் ஒரே  ஒரு வார்த்தை உறவுகள்".


"தூங்கிக்கொண்டிருக்கும் எலியை நான் இதுவரை பார்த்ததில்லை".


"பெரும் சம்பவங்களை அடைத்து கொண்டிருக்கும் சந்தர்ப்பங்களை மட்டும் வரலாறு பார்க்காமல் சென்று விடுகிறது."

"காட்டு நதிகளுக்கு பெயர்களும் இல்லை."

"மனிதனின் அழுக்கு படிந்த சொத்து அவன் மூச்சுக்காற்றும், மரணமுமே."

"தோற்றுபோனவன் ஏன் தோற்று போனான் என்பதை விடவும் ஜெயித்தவன் எப்படி தோற்று போனான் என்பதே முக்கியம்."

"பயந்த விமரிசகனின் கம்பளி நாற்றமாகத்தான் இருக்கும்."

இதையெல்லாம் தாமஸ் நினைவில் இருந்து சொல்லிக்கொண்டே போனார்.

நேரம் கடந்து சென்றதால் நாங்கள் கீழே இருந்த ஓட்டலுக்கு சென்றோம்.


______________________________

பாகம் 25


கடும் உளைச்சலில் தன்னை சமாதானமாய் நெகிழ்த்தி கொள்ள முடியாத போதும் இலியிச் ஒருபோதும் காலத்தையும் நேரத்தையும் எவ்வித குறையும் சொல்லவில்லை.

சிம்மக்கல் கிளினிக்குக்கு ஒருநாள் மாலை இலியிச்சை பார்ப்பதற்காக நான் போய் இருந்தேன்.

அழுக்கான மெத்தையில் அவன்  படுத்திருக்க அருகில் அவன் தங்கை பார்வதி மட்டும் இருந்தாள். அவன் அப்பாவை அங்கு காணவில்லை. இலியிச்க்கு இவ்வளவுதான் மனிதரா என்று நான் யோசிக்க ஆரம்பித்தேன்.


இலியிச் அதுபற்றி அப்போதும் நினைத்து இருக்க மாட்டான்.


கூட்டமோ அல்லது கூட்டமான கூட்டமோ எதனிலும் ஓசை மட்டுமே விடாப்பிடியாக கொக்கரிக்கிறது. நான் என்னையே ஆராதிக்கிறேன். ஓடி ஒளிவதற்கு பயம் காரணம் அல்ல. என் தனிமை மீது எதையும் பூசவோ, ஒட்டவோ, படியவோ எப்போதும் அனுமதிக்க மாட்டேன் என்று சொன்னவனுக்கு பழைய மெத்தையும் சாம்பல் நிற ஃபேனும் கற்பகாம்பாள் டிகிரி காஃபியும் அத்தனை விவரத்துடன் அவன் நினைவில் அன்று இருந்து இருக்குமா என்பதை இன்று வரை என்னால் அனுமானிக்க முடியவில்லை என்றும் மல்லேஷ் சொல்லி கொண்டே இருந்தான்.

தந்தை காலத்தின் குறியீடு. தந்தைகள் மோகத்தை புதுப்பிக்கவே தன் அன்பின் பாகங்களை பாதுகாக்கின்றனர். பழைய வரலாற்றின் புளித்த நெடிதான் அவர்கள் மீது வீசிக்கொண்டிருக்கிறது.

யாரேனும் தந்தையோடு சுற்றுவதை பார்க்கும்போது சமையல்காரன் தன் ராசியான ஜாரிணியோடு அலைவதை போலவே எனக்கு தெரிகிறது. அப்பாவை போல் என்னை பிளந்த கருத்துருவம் வேறில்லை என்றான்.

பெண் என்பவள் புவியியலின் மஞ்சம். அவள் மகளாய் தாயாய் பாட்டியாய் எப்போதும் எல்லைகளை கடக்காது சுருண்டு கிடக்கிறாள்.

ஒரு களிம்பேறிய வரலாறும் சிக்குண்ட புவியியலும் என்னை ஈன்று எடுத்து உதறி விட்டதை என்னை சூழ்ந்திருப்பவர் ரசித்ததை போல் இன்னொரு காட்டுமிராண்டித்தனம் நான் பார்க்கவில்லை.

மனிதம் என்பது சல்லடை. அதில் ஒழுகி ஓடும் உறவுகளை நிறுத்தி வைக்க முடியாது. என் நினைவில் துல்லியமாக பதிந்த முகங்கள் எப்போதும் என் விருப்பத்திற்கு எதிரான கொண்டாட முடியாத நம்பிக்கைக்கு உதவாத உறவுகளில் இருந்து மட்டுமே என்னை சூழ்ந்து இருக்கிறது.

தோழர்களும் கூட இதில் அடக்கம். இதையெல்லாம் சகிக்க முடியாது தள்ளாடும் ஜீவன்கள் மட்டுமே உடலுறவுக்கு ஏங்கி அலைகிறது. நான் என் உடலை எப்போதும் முத்தமிட்டு கொண்டது இல்லை. என் உதடுகளில் யார் எச்சிலும் படிய அனுமதிக்க மாட்டேன்.

மல்லேஷ் என்னிடம் சொன்ன இத்தனை விஷயங்களையும் நான் தாமஸிடம் சொன்னேன். அவர் அத்தனையும் கேட்டுக்கொண்டு மீண்டும் அமைதியாக இருந்தார்.


__________________________________

எழுதியவர் : ஸ்பரிசன் (11-Jul-19, 12:23 am)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 59

மேலே