புங்கைமரக் கிளிகள்
புங்கைமரக் கிளிகள் ...!!!
*********************************
சிற்றூரில் நான்வசிக்க
சீமையிலே நீயிருக்கச்
சற்றும்நான் நினைக்கவில்லை
சந்திப்போம் இன்றென்றே!
உற்றதோழி உன்னுடனே
ஊருக்குள் திரிந்ததெல்லாம்
சுற்றிவரும் நினைவுகளில்
சுகமாக இனிக்குதடி !!
அலையில்லாக் குளத்தினிலே
அயிரைமீன்கள் குவிந்திருக்க
வலைபோலும் கைத்துண்டை
மறைத்துவைத்துப் பிடித்ததெல்லாம்
சிலநேரம் மின்னல்போல்
சிந்தையிலே வந்துபோகும்
தொலைதூரம் போனாலும்
சுத்தமாக மறந்திடுமோ ??
புங்கைமரத் தடியினிலே
பொரிவிளங்காய் கடித்தபடித்
தங்கையரை அனுப்பிவிட்டுத்
தனிமையிலே கதைபேசிச்
செங்காற்றின் தாலாட்டில்
சேர்ந்தயர்ந்து தூங்கிவிட
அங்குவந்த தமிழய்யா
அடித்தவடி மறக்கலையே !!
பொழுதெல்லாம் மகிழ்வோடு
புங்கைமரக் கிளிகளைப்போல்
செழுமையான வயல்வெளியில்
சிட்டுகளாய் வளையவந்து
மழையினிலே நனைந்தவண்ணம்
மனந்துள்ள நடனமாடி
வழுக்கியங்கே விழுந்தபோதும்
வாய்வலிக்கச் சிரித்தோமே !!
இருட்டோடு கண்விழித்தே
இழைக்கோலம் போட்டுவிட்டு
திருப்பாவை மார்கழியில்
தினம்பாடிப் பொங்கலுண்டோம்!
கருப்பசாமி கோயிலுக்கும்
கால்கடுக்க நடந்துசென்றோம்
சுருட்டுவாசம் அங்குவரச்
சுருண்டோடி வந்தோமே !!
பிடித்துவைத்த வெள்ளாட்டைப்
பின்பக்கக் கொல்லையிலே
மடிதடவிப் பால்கறக்க
மடியங்கே காணாமல்
படிக்கணக்கில் வழிந்தசுகம்
பட்டணத்தில் கிடைத்திடுமா ?
அடைந்தவின்பம் அடுக்கடுக்காய்
அகத்துள்ளே மலருதடி...!!!
சியாமளா ராஜசேகர்