பெண் குழந்தை

"அறை அதிரும் அழுகையோடு

அழகாய் தொடங்குகிறது

இந்த அகிலத்தில் அவள் வரவு"



"தத்தி நடக்கும் நடை அழகு

சிரித்து பேசும் மொழி அழகு

சின்ன சின்ன கண் உருட்டி

சித்திரம் போல் இருக்கும் சின்ன தேவதை தான் எத்தனை அழகு"



"அப்பாவின் அழகி

அம்மாவின் மாமியார்

அண்டை வீட்டாருக்கு அவள் ஒரு அதிசயம்"



"கொலுசு ஒலி ஊரை கூட்ட

பூமியில் அவள் பாதம் பதிய

பறவையாய் அவள் பறக்க

பார்ப்பவர்கள் தான் வியந்து நிற்க

நாம் சொக்கிட தான் சிரிப்பு ஒன்று உதிர்த்திடுவாள்"



"பட்டு பாவாடையில் அவள் பவனி வரும் போதெல்லாம்

ஊர் கண் பட்டுவிடுமோ என்று பதறுகிறது

பெற்றவள் நெஞ்சம்"



"மழலையில் அவள் அனைவரையும்

மிரட்டிடும் அழகில்

மயங்கி நிற்கிறது என் நெஞ்சம்"



"அவள் கோவம் கூட

என்னை கவிஞனாய் மாற்றுகிறது

கோவத்தில் சிவக்கும் அவள் மூக்கினை கண்டு"



"பாரதி சொன்ன

கண்ணம்மா இவள் தானோ "



"அவள் சிரிப்பொலியிலும்

அவள் கொலுசொலியிலும் எல்லாம்

சிறப்பாய் இருந்த வீடு இன்று

சூரியனை காணாத சூரிய காந்தியாய் வாடி நிற்கிறது'



"காரணம் அவள்

கணவன் கைபிடித்து

காலத்தால் கரையாத காதல் ஓவியம் வரைய சென்றுவிட்டாள்"



"இன்பம் என்ற ஒன்று வேண்டுமெனில்

பெண் குழந்தை பெற்றுப்பார்"



"அன்னையாய் அவள் இருப்பாள்

ஆதரவு தான் கொடுப்பாள்"



"இனி ஒரு ஜென்மம் உண்டெனில்

என் மகள் வேண்டும்

மீண்டும் நான் அவளின் அப்பாவாக"

எழுதியவர் : கனி (18-Jul-19, 2:49 pm)
சேர்த்தது : KANI
Tanglish : pen kuzhanthai
பார்வை : 16941

மேலே