தீட்டும் தீண்டாமையும்

தீட்டும் தீண்டாமையும்

நான்
வெட்ட படாமல்
கொட்டுகிறது உதிரம்

அறுவை சிச்சையின்றி
மாதம் தோறும்
மடிந்த நிலையில்
மழலை பிஞ்சு
விதைகள் பிறக்கிறது

செய்யாத குற்றத்திற்கு
இயற்கை நீதிமன்றம்
மானிட பெண்ணிற்க்கு
மாதம் தோறும் வழங்கும்
மரண தண்டனை

மங்கையின் வலி
மழலை மலர வழி

மங்கையென்னும்
பெண் நிலவு
முகம் சுழிக்கும்
மூன்று நாள்

என்
சொந்த வீட்டில்
அந்த நாள்களில்
தங்க வைக்கப்பட்ட
அகதி
சிறை வைக்கப்பட்ட
கைதி

நான்
இந்த நாட்களில்
என் சமூகத்தின்
தீண்ட தகாதவள்

என் வலி அறியா
வேலை தரும் தந்தை
வேதனையறியா
விளையாடும் சகோதரன்
வெந்த புண்ணில்
வேல் பாய்ச்சும் சகோதரி
உனக்கு மட்டுமா ?
எரிஞ்சு விழும்
என் கணவன்

என்னை
எண்ணெய் தேய்த்து
வெந்நீர் வைத்து
தேகம் பிடித்து
ஆடை துவைத்து
குளிக்க வைத்து
குழந்தையை போல்
கொஞ்சி விளையாடி
உடலின் நிகழ்வையும்
உலக நடப்பையும்
பட்டியலிட்ட
பட்டம் பெறாத தாய்
உளவியல் மருத்துவர்

ஈர இரவுகள்
ஆயிரம் துயரங்கள்
சொல்லும்

சமூக பார்வையில்
தீட்டும் தீண்டாமையும்
என்னை பார்க்கும்
இரு கண்கள்

என் குழந்தையும்
என்னை தீட்டு என்று
சீண்டிவிட்டு தாண்டிவிட்டு
போகிறது

எழுதியவர் : கவிஞர் தமிழன் (18-Jul-19, 7:29 pm)
சேர்த்தது : muruganantham
பார்வை : 56

மேலே