கவிஞனே இறைவன்
கவிஞனே இறைவன்
சாகாக் கவிதைகளை
சகத்தில் படைத்தோர்
சாவதில்லை சாவதில்லை
சரித்திரமாய் வாழ்கின்றார்
அன்று பாரதியெனும்
அக்கினி குஞ்சொன்றை
அவனியில் விதைத்தோம் இன்றோ
அவனி யெங்கும் ஆயிரமாயிரம் பாரதிகள்
அக்கினிக் கணைகளை வீசியபடி உலாவர
அழுக்கு சித்தாந்தங்கள் பொசுங்கி கருக
ஆஹா வென எழுந்தது யுகப் புரட்சி
ஆண்களும் பெண்களும் சரி நிகர் சமானம்
வீணான சாதிகள் மறைந்தொழிந்தது
மாண்பினை அடைந்தது மறமும் அறமும்
தூண்களாய் நின்றது நீதியும் நேர்மையும்
வானோரும் வந்திடும் தலமதாய் ஆனது
வையம் வளம்பொழில் சூழ்ந்த மாநிலம் ஆனது
மக்களை காத்திடும் அரசுகள் நிலை பெற
மக்களோ மன்பதை செழித்திட உழைத்தனர்
ஆக மொத்தத்தில் கவிஞனே புவியில்
ஆண்டவனாய் நின்று அவனியை சமைக்கிறான்
ஆண்டவன் வேறு அவன் வேறல்ல
மாண்புகள் மீக்கொள் கவிஞனே இறைவன்