கருப்பு தினம்
இரண்டு நாட்களாக வீட்டைவிட்டு வெளியே செல்ல இயலாத காரியமாகிவிட்டது. வயதாகிவிட்டது போல் ஒரு நினைப்பு.
அப்படியொன்றும் வயதாகிவிடவில்லை.
வயது இப்போதுதான் அறுபதைக் கடந்திருக்கிறது.
முன்னாள் அமைச்சராக இருந்தவர்.
அமைச்சராக இருந்தபோது அடிக்கடி அலுவல்கள் விடயமாக வெளியூர், வெளிநாட்டு பயணங்கள், மக்களின் பிரச்சனைகள், போதாக்குறைக்கு எதிர்க்கட்சிகள் தரும் சிக்கல்கள் என்று அனைத்தையும் தாண்டி ஓய்வெடுக்க கொஞ்சம் கூட நேரம் இருந்ததில்லை.
இந்த முறை தேர்தலில் நிற்கவில்லை. ஏனெனில் வேலை செய்து செய்து அலுத்துப் போன உடல் அப்போது சோர்ந்து தன் வீம்பைக் காட்டத் தொடங்கி இருந்தது.
இருந்தால் எழுவது கடினம். குனிந்தால் நிமிர்வது கடினம்.
அதிகமாக உணவு உண்ண முடிவதில்லை.
உண்டலும் உணவு ஜீரணிப்பதில்லை.
கசப்பை மறந்து ஓய்வை தேடி தேர்தலில் நிற்க வேண்டாம் என்றது மனம்.
அதே போல நிற்கவில்லை. உடலும் கொஞ்சம் கொஞ்சமாக பலவீனப்பட மனதும் பலவீனமானது.
தினமும் ஏதாவது செய்து கொண்டிருக்கும் தாம் கடந்த மூன்று மாதங்களாக வீட்டிலேயே இருப்பதும், நண்பர்களோடு தொலைபேசியில் கதைகதைப்பதும், பழைய இனிமையான தருணங்களை நினைவு கூருவதும் என்று கழித்தாலும் ஏதோ ஒன்றை தொலைத்தாற் போல் உணர்ந்து கொண்டிருந்தது மனம்.
ஆம். சுறுசறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்த நாட்கள், இனி திரும்ப கிடைக்கப் போவதில்லை.
வாழ்க்கையின் கடைசி தருணம் நெருங்குவதாக தோன்றியது.
தண்ணீரில் இருக்கும் வரைதான் முதலைக்குப் பலம்.
ஒரே இடத்தில் தேங்காமல் ஓடிக் கொண்டே இருந்தால் தண்ணீர் தூய்மையாக இருக்கும்.
மனிதனும் அப்படி தான்.
இந்த உடல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம்.
பணத்தால் மருந்துகளை வாங்கி உண்டு மரணத்தைத் தள்ளிப்போடலாம்.
கிழிந்த பழைய சட்டையில் ஒட்டுகள் போட்டு அணிந்தாலும் கிழிந்தது கிழிந்தது தான். அதை மறைக்க முடியாது.
இனி வேண்டியது நிரந்தரமான உறக்கமே!
உலகமே! இந்த ஆன்மாவிற்கு விடை கொடு.
அது நிரந்தர உறக்கத்திற்கு போகட்டும்.
இந்த நாள் கருப்பு தினமாக கருதப்படலாம்.
ஆனால் அந்த ஆன்மாவைப் பொருத்தவரை தான் விடுதலை அடையும் ஆனந்த தினம்.
மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் சந்திப்போம்.
போய் வா உயிரே.
ஓம் சாந்தி ஓம்.