தாலாட்டு

என் மகனுக்குத் தாலாட்டு
நான் பாட மயிலே நீ ஆடு.
என் பிள்ளைக்குத் தாலாட்டு
நான் பாட குயிலே இசை போடு.

என் மழலைக்குத் தாலாட்டு
நான் பாட மாங்கிளியே தமிழ் ஊட்டு.
என் பாலகனுக்குத் தாலாட்டு
நான் பாட துள்ளும் புள்ளி
மானே எனை நாடு.

என் குழந்தைக்குத் தாலாட்டு
நான் பாட முல்லை
மலரே தலையாட்டு.
என் கண்ணன் துரத்தி விளையாட
வெண் முகிலே விரைந்தோடு.


சிங்காரவேலன் சிரித்திடவே
நட்சத்திரமே உதிர்ந்து விடு.
சின்னத் தங்கம் இமை மூட
வெள்ளி நிலவே திரை மூடு.

யாராரோ ஆரிரரோ நான் பாட
யாழ் மீட்டும் மழையே நீர் வீசு.
ராரீரரோ ரராராரோ நான் பாட
தெற்குத் தென்றலே மெல்ல வீசு.

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (22-Aug-19, 6:58 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : thaalaattu
பார்வை : 142

மேலே