பிக்பாஸ் சேரன் என்னும் ஜென்டில்மேன்

நேற்று பிக்பாஸ் பற்றி எழுதலை... கொஞ்சம் வேலைகள்... தலைவலி... போன்ற காரணங்கள்தான் என்றாலும் பிரதிலிபியில் சகோதரி புவனா ராஜபாண்டி அவர்கள் பிக்பாஸ் இன்று எழுதலையான்னு குறுஞ்செய்தி அனுப்புனாங்க... விவரம் சொல்லி இன்று வியாழன், வெள்ளி இரண்டையும் எழுதிடலாம்... அதிகமெழுத ஒன்றும் இல்லைன்னு சொன்னேன். இங்க எழுத ஆரம்பிச்சா... நாம எப்ப சின்னப் பதிவா எழுதியிருக்கிறோம்... இன்னைக்கு எழுத... அது பாட்டுக்கு எப்பவும் போல் போயிக்கிட்டு இருக்க, சரி ரெண்டு பதிவுதான்னு முடிவு பண்ணி ரெண்டாவே எழுதிட்டேன். என் எழுத்தையும் தொடர்ந்து வாசித்து கருத்துப் பகிரும் பிரதிலிபி நட்புக்களுக்கும்... பதிவு வரலையே ஏன் என விசாரித்த புவனா அவர்களுக்கும் முதலில் நன்றி. நம் எழுத்து ஏதோ ஒரு விதத்தில் சுவராஸ்யமா இருக்கு போல... விடாதேடா குமாரு... பிக்பாஸ் முடியிற வரைக்கும் கொலையாக் கொன்னுருன்னு சொல்லிக்கிட்டே வெள்ளிக்கிழமை நிகழ்வை எழுத ஆரம்பிச்சாச்சு.காலையில புதுப்பேட்டை பட 'வரியா... வரியா...' பாட்டு திருப்பள்ளி எழுச்சியாய்... அவெஞ்சர்ஸ் அணி முன்னரே ஒத்திகை பார்த்தது போல் சிறப்பாய் ஆடியது... கவின் மட்டும் ஆண்டு விழா மேடையில் ஒரு ஓரமாய் ஸ்டெப்பை மறந்துட்டு ஆடும் குழந்தை மாதிரி ஆடினான். கஸ்தூரி எப்பவும் போல கஷ்டப்படுத்தினார்.காலையில பால்ல கெலாக்ஸைப் போட்டு கொடுத்திருந்தாங்க... யாராலும் சாப்பிட முடியாம அதை வச்சிக்கிட்டு வாழைப்பழம் போட்டிருக்கு... வேணான்டா இதச் சாப்பிட்டா நான் செத்துப் போவேன்னு சாண்டி குரூப் காமெடி பண்ணிக்கிட்டு இருந்தாங்க... டைனிங் டேபிள்ல சேரன் கூட இதெல்லாம் எவன்டா சாப்பிடுவான் என்பதாய் சொல்லிக் கொண்டிருந்தார். யாருமே முழுவதும் சாப்பிடவில்லை... இதைச் செய்த புண்ணியவதி சர்க்கரைப் பொங்கல்ல கடலைப் பருப்பு போட்ட கஸ்தூரியாத்தான் இருக்கணும்... ஏன்னா பட்ஜெட் டாஸ்க் முடிவுல பொருட்களைத் தேர்ந்தெடுக்கும் போது கெலாக்ஸ்... கெலாக்ஸ்ன்னு முட்டையிடப் போற வெடக்கோழி கத்துற மாதிரி கத்துனாங்க... காலையில கெலாக்ஸ்ல வச்சிச் செஞ்சிட்டாங்க.கக்கூஸ் கேமராவுக்கு முன்னால நின்னுக்கிட்டு 'லவ் பேர்ட்ஸ்... லவ் பேர்ட்ஸ்'ன்னு கஸ்தூரி பாட, கேமரா மேன் ஓடிட்டாரு போல... கேமரா ஆடாம அசையாம நின்னுச்சு... அப்புறம் வயிறு சரியில்லாமல் கக்கூஸ் போகும்போது முகத்தை அஷ்ட கோணலாக்குற மாதிரி ஆக்கிப் பாடுனா ஓடாம ஒக்காந்தா ரசிப்பாங்க... சரோஜாதேவி பாத்திருந்தா அந்தப் பாட்டையே மறந்திருப்பாங்க. இந்தம்மா லூசு மாதிரியெல்லாம் நடிக்கலை... லூசேதான்னு கன்பார்ம் பண்ணிக்கிட்டு இருக்காங்க.ஜெயில் வாசல்ல உக்காந்திருந்த சேரன், 'அடிக்குது குளிரு'ன்னு அத்தி பூத்தாப்புல பாட ஆரம்பிக்க, அருகிலிருந்த கானக்குயில் கஸ்தூரி 'முல்லைப் பூங்கொடி கொம்பைத் தேடுது... கொம்பைப் போல உன் அன்பைத் தேடுது... வா கட்டப்பொம்மன் பேரா... கட்டழகு வீரா... கிட்ட வந்து நேரா... கட்டிக்கொள்ளு ஜோரா...'ன்னு பாடுனாங்க... நல்லவேளை 'சேரா'ன்னு சொல்லலை... அங்கிட்டு அங்கிட்டு லவ் டிராக் ஓட, சேரனும் லவ்வுறாருடான்னு கிளம்பிடுவாங்களேங்கிற பயத்துல இனி ஜென்மத்துக்கு பாடமாட்டேன் இறைவான்னு தலையில கை வச்சிக்கிட்டு உக்காந்துட்டார் சேர மன்னர்.என்னத்தைடா கொடுக்குறது... அடிச்சிக்கிட்டு நாறுவானுங்கன்னு பார்த்தா... நோ மீன்ஸ் நோன்னு சொல்லிடுறானுங்க... பாட்டுப்பாடி பாட்டுப்பாடி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ரேஞ்சுக்கு ஆக்கிட்டானுங்க.. அவங்க பாட்டுக்கு பாடிக்கிட்டுத் திரியட்டும்ன்னு முடிவு பண்ணி பிக்பாஸ் எல்லாருக்கும் லீவு கொடுத்து கென்னடி கிளப் படம் பார்க்க அனுப்பிட்டாரு போல. வெட்டியா உக்காந்திருந்தானுங்க.தர்ஷன் படுக்கையறையில போர்வைகளை எல்லாம் மடித்து வைத்து சுத்தம் பண்ணிக்கிட்டு இருந்தான். அங்கு வந்த ஷெரின்... சின்னதாய் ஒரு ஊடல் கொள்ளலாம் என மடித்து வைத்ததை கலைத்துப் போட்டு விளையாட, தர்ஷனும் சிரித்தபடியே ஒழுங்க மடிச்சி வையின்னு சொன்னான்... போடா முடியாதுடான்னு சிரிச்சிக்கிட்டே பெண்கள் படுக்கையறைக்குப் போக, சொடக்குப் போட்டு கூப்பிட்டான் தர்ஷன். சொடக்குப் போட்டா ஷெரினுக்குப் படக்குன்னு கோபம் வரும்ன்னு அவனுக்குத் தெரியும்... சீண்டிப் பாப்போமேன்னு சொடக்கைத் தொடர, ஷெரின் முகம் சிவந்து கோபமானார்... இந்த ஊடலை உள்ளிருந்து பார்த்தவர் சேரன் மட்டுமே.தலைவரைத் தேர்ந்தெடுக்கும் டாஸ்க்... இந்த முறை போட்டியாளர்கள் தவிர்த்து மற்றவர்கள் சீட்டை எடுத்து அதில் யார் பெயர் எழுதியிருக்கோ அதன்படி போர்டில் இருக்கும் அவர்களின் போட்டோவுக்குக் கீழே ஒண்ணு ரெண்டு மூணு என எழுத வேண்டும்... யார் முதலி ஐந்தை அடைகிறார்களோ அவரே வெற்றியாளர்... சாண்டிக்கும் சேரனுக்கும் நாலு... நாலு... லாஸ்லியாவுக்கு ரொம்பப் பிடித்த கவின் எடுத்த ஒரு சீட் மட்டுமே... இப்ப வனிதா மனசுல சாண்டி வரணும்ன்னு ஆசை... கவின் மனசுல லாஸ் வந்தா நல்லாயிருக்கும்... ஆனா அடுத்த நாலுமே லாஸ் பெயரா வருமான்னு யோசனை... ஷெரினுக்கு சேரன்... இறுதியில் சேரன் வெற்றி பெற்றார்.இந்த வெற்றிக்காக அவர் காத்திருந்தது பல வாரங்கள்... இதற்கு ஏன் இப்படி அலைகிறார் இந்த மனிதர் என்று உள்ளிருப்பவர்கள் மட்டுமின்றி வெளியிலும் பேசத்தான் செய்தார்கள் என்றாலும் தன்னோட வெற்றிக்காக அவர் சினிமாவிலும் காத்திருக்க வேண்டிய நிலையிருக்கிறது... பிக்பாஸ் வீட்டிலும் எல்லாம் நல்லாச் செய்யுறேன்னு சொல்லிக்கிட்டே வார இறுதியில் முகத்துக்கு நேரே சேரன் நல்லா விளையாடலைன்னு சொல்லிடுறாங்க...ஆட்டோகிராப்புக்குப் பின் நல்லதொரு வெற்றி கிட்டாத மனிதர்... வாழ்வில் பிரச்சினைகளை மட்டுமே சந்தித்து வரும் மனிதர்... ஓரு சிறிய வீட்டுக்குள் இருக்கும் சில மனிதர்கள் முன்னால் கூட வெற்றி பெற முடியாமல் இருப்பதன் வலியே நான் ஏன் தலைமை ஏற்கக்கூடாது... எனக்கு அந்தத் தகுதியில்லையான்னு வாய்விட்டுக் கேட்டதில் எந்தத் தவறும் இல்லை... மனசு ரொம்ப லேசாகியிருக்கும் சேரனுக்கு என்பது அவர் முகத்திலேயே தெரிந்தது. வலிகளைத் துடைக்கும் நிவாரணிதான் இந்த வெற்றி என்றாலும் இன்று கமல் சேரனை வெளியேற்றாமல் இருக்க வேண்டும்... அப்படியே வெளியே என்றாலும்... அது சேரனாகவோ கஸ்தூரியாகவோ இருக்கும்பட்சத்தில் ரகசிய அறை பயன் படுத்தப்படலாம் என்றே தோன்றுகிறது.அவெஞ்சர்ஸ் அணி அவர்கள் இடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, லாஸ்லியா தர்ஷனிடம் போ... போய் அவகிட்ட பேசு... தனியா இருக்கா பாரு என ஷெரினிடம் பேசச் சொல்ல, எப்பவும் நான்தான் சாரி கேக்கிறேன்... இன்று நான் ஒன்றும் சொல்லவில்லை... அவளாத்தான் பிரச்சினை பண்ணினா... அவ வந்து கேட்கட்டும் இல்லேன்னா... நீ போயி கேளு என்று சொல்ல, நான் எதுக்குக் கேட்கணும்ன்னு லாஸ் சொல்லிட்டாங்க.அதன் பின் இரவெல்லாம் கண் விழித்துக் காதல் வளர்க்கும் கவினும் லாஸ்லியாவும் வீட்டை விட்டு ஓடிய காதல் ஜோடி போல் வெளியே படுத்துத் தூங்க, பிக்பாஸ் சுட ஆரம்பித்தார்... தலைவர் சேரன் ஆஹா... பொறுப்பெடுத்தவுடனே எவனோ நம்ம பருப்பெடுக்க பிளான் பண்ணிட்டானேன்னு ஓடியாந்தார். ஏன்டா அப்பா டேய்... பொறுப்புக்கு வந்த உடனே தறுக்குன்னு மிதிக்கிறீங்களேடா... எந்திரிங்கடான்னு சொல்ல, லாஸ்லியா தலைவலி எனக் கையைக் காண்பித்தார்... தலைவலின்னா வெயில்லயா படுப்பே... உள்ளே வந்து படும்மான்னு சொன்னதும் ராமன் இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தி என்பதாய் அமர்ந்திருந்தார் லாஸ்லியா.வீட்டுக்குள் வனிதாவிடம் தர்ஷன் பிரச்சினை பற்றி ஷெரின் பேச, வனிதா ஆஹா வந்து மாட்டிட்டா விடக்கூடாது... ரெண்டு பேரையும் பிரிச்சி அடிச்சிக்க வைக்கணும்ம்னு சம்மணம் போட்டுக் கேட்டு, அவன் அப்படித்தான்... நீ இங்க எதுக்கு வந்தேன்னு எல்லாம் கேட்டு ஏத்திவிட, ஒருத்தவங்க எங்கிட்ட இவ்வளவு உரிமை எடுக்கிறாங்கன்னா அதுக்கு நான் கொடுத்த இடம்தானே காரணம்... என்மேலயும் தப்பிருக்குல்லன்னு ஷெரின் சொன்னதும் வனிதா அப்செட்.... ஆமா வனிதாக்காவோட மிஷன் ஷெரின் மிஸ்ஸாயிருச்சு.சேரன் பெண்களுக்கிட்ட இப்படிப் பேசக்கூடாதுடா... அவ உன்மேல பிரியமா இருக்கதாலதான் அப்படி நடந்துக்கிட்டான்னு தர்ஷனைத் திட்டிக் கொண்டிருந்தார். கவின் லாஸ்லியா எப்பவும் போல் தெருநாயாக வெளியில் லவ்விக்கிட்டு இருந்தாங்க... சாண்டிக்கு கெலாக்ஸ் வயித்துக்குள்ள கரகாட்டம் ஆடுச்சு போல பாத்ரூம்ல பக்காவா செட்டிலாயிட்டார். அடிச்சி ஆடிய சாண்டியை தூக்கிக்கிட்டு ஓடினார் முகன்.படத்துக்கு போன பிக்பாஸ் குரூப் வந்துட்டாங்க போல வாங்க விளையாடலாம்ன்னு ரெண்டு டீமாப் பிரிச்சாங்க... எப்பவும் போல சேரனை நடுவராக்குனாங்க... மாவுல காயின் பொறுக்குறதுக்கு கவினும் முகனும், மூக்குல ஜெல்ல ஒட்டி பந்த எடுத்து டிரேயில போடுறதுக்கு ஷெரினும் லாஸ்லியாவும், முதுகுப்பக்கம் கட்டிய டிஸ்யூ பாக்ஸ்ல இருந்து பந்தை குதித்து வெளியே தள்ள கஸ்தூரியும் வனிதாவும், லட்டு சாப்பிட தர்ஷனும் சாண்டியும்... இதுல கவின், தர்ஷன், கஸ்தூரி, லாஸ்லியா டீம்ல லாஸ்லியா மட்டுமே ஜெயிச்சாங்க... தர்ஷன் டிரா பண்ணினார். இறுதியாக இரு குழுவும் பந்து போட்டாங்க அதிலும் சாண்டி, வனிதா, ஷெரின்,முகன் அணி வெற்றி பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் ஆனாங்க. சாக்லெட் வர எல்லாரும் பகிர்ந்து கொண்டார்கள். கஸ்தூரி சேரனுக்கு சாக்லெட் கொடுக்க, லாஸ்லியாவிடம் நீ ஏன் தரலைன்னு கேட்டார் சேரன்... நீங்க சாப்பிட மாட்டீங்கதானேன்னு சொல்ல, நான் சொன்னேனா என லாஸ்லியாவை அருகில் வரவைத்து கஸ்தூரி கொடுத்த சாக்லெட்டில் பாதியைக் கொடுத்தார்.கவினுக்கிட்ட லாஸ்லியா தன் விரலில் சின்னதா ஏதோ ஒரு காயம் ஏற்பட்டிருப்பதை பெரிதாய் சொல்லி வருத்தப்பட, சாண்டி எப்பா டேய் முடியலைடா ரேஞ்சுக்கு முகத்தைத் திருப்பிக் கொண்டார். உங்க காதலுக்கு கண் இல்லைங்கிறது தெரியும் அதுக்காக ஏன்டா எங்களை கொலையாக் கொல்லுறீங்கங்கிற மாதிரி முகத்தை வச்சிக்கிட்டார். அங்க வந்த சேரனிடமும் லாஸ்லியா கையைக் காட்ட மருந்து போட்டாச்சுல்ல... வலி இருக்கான்னு விசாரிக்க நேசத்துடன் விசாரிக்க, சாண்டியோ சார் ஆம்புலன்ஸ்க்குப் போன் பண்ணியாச்சான்னு கேக்க. ம்... பண்ணியாச்சு... இப்ப வண்டி வந்திரும்ன்னு சேரனும் சொல்ல, எல்லாரும் சிரித்தார்கள்.அடுத்ததாய் மீண்டும் ஒரு டாஸ்க்... இது நிப்பான் பெயிண்ட் டாஸ்க்... சேரன்தான் இதற்கும் நடுவர்... குறிப்பு அட்டைகளை அவர் ஒளித்து வைக்க வேண்டும்... அதை அணித் தலைவர் கண்டுபிடித்து எடுத்து ஒவ்வொன்றாய்ச் சொல்ல, மற்றவர்கள் அட்டையை சரியாய் போர்டில் ஒட்ட வேண்டும்... முகன் தலைமையில் தர்ஷன், சாண்டி, ஷெரின் ஒரு அணி... கஸ்தூரி தலைமையில் லாஸ்லியா, கவின், வனிதா ஒரு அணி... சேரன் சிரத்தையோடு கண்டுபிடிக்க முடியாத வண்ணம் ஒளித்து வைத்தார். முகன் அணி சேரனிடம் ஒரே ஒரு குளுவைப் பெற்றுக் கண்டுபிடித்து விரைவாக முடிக்க, கஸ்தூரி அணி இரண்டு குளூக்கள் பெற்று மெல்லக் கண்டுபிடித்து போட்டியை முடிக்க முகின் அணி பத்து நிமிடங்களுக்கு முன்னரே போட்டியை முடித்தால் வெற்றி பெற்றார்கள்.இந்த டாஸ்கில் குறிப்பு அட்டைகளைத் தேடி எடுத்த கஸ்தூரி, டாஸ்க் நடந்து கொண்டிருக்கிறது என்ற நிலையில் நான் தண்ணி குடிச்சிட்டு வாரேன் என்று சொன்னதெல்லாம்... ஆஹா.... அதன் பிறகு பாடலை மட்டும் வாசித்தால் போதும் விரைவாய் முடிக்கலாம் என்றபோது அந்தப் பாடலின் ராகத்தைப் பிடித்துப் பாடியது... ஓஹோ... கவின் பாடாதம்மா... சும்மா சொல்லுன்னு கத்திக்கிட்டே இருந்தான்... கானக்குயில் கஸ்தூரி கேக்கவேயில்லை... முடிவில் யாரு உன்னைப் பாடச் சொன்னான்னு கவின் கோபமாக, இதை டிவியில் காட்டுவாங்க... மக்கள் பாப்பாங்கதானே... அதான் பாடினேன்னு சொன்னாங்க பாருங்க... ஆஹா... ஓஹோ...ஹா...ஹா...ஹா...அப்புறம் வெற்றியாளர்களுக்கு கேக் வந்தது எல்லாரும் பகிர்ந்து சாப்பிட்டார்கள். தர்ஷன் - ஷெரின் பிரச்சினையை வைத்து களமாட நினைத்தார் வனிதா... ஆனால் இந்தப் பிரச்சினை பெரிதாகக் கூடாது... இது முடிவுக்கு வரவேண்டும் என இருவரிடமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேசிக் கொண்டிருந்தார் சேரன்.தர்ஷனை நீ பண்றது தப்பு... அவளுக்கு யாரும் இல்லை... உங்கிட்ட அன்பு கிடைக்குதுங்கும் போது அவ பண்ற சின்னச்சின்ன விஷயங்களைத் தப்பா எடுத்துக்கக் கூடாது என்று சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வனிதா, ஆஹா இந்தாளு ஆட்டையைக் கெளச்சிடுவான் போலயே... நம்ம மிஷன் என்னாகுறதுன்னு தர்ஷன்கிட்ட போன வாரத்தில் முகன்கிட்டச் சொன்ன மாதிரி அவகிட்ட இப்பப் பேசாதேன்னு கட்டையைப் போட்டு வச்சிருச்சு... சேரன் இதுக்கு இதுதான் பொழப்பு போலன்னு மனசுக்கு நினைச்சிக்கிட்டார்.சேரனும் ஷெரினும் இதே பிரச்சினையைப் பேசிக் கொண்டிருந்தார்கள்... தர்ஷனிடம் பேசும் போது அவன் சொன்னதைச் சொல்லி இருவருக்குள்ளும் நட்புக்கும் காதலுக்கும் இடையிலான ஒரு அன்பு ஓடிக்கிட்டு இருக்கு... அதைத் தொடருங்க.... தர்ஷன் நேற்றுத்தான் எல்லாம் சுத்தம் பண்ணினான்... வனிதா படுக்கை அறை சுத்தமில்லைன்னு சொன்னதால மறுபடியும் சுத்தம் பண்ணினான்... அவனுக்கு நாம வேலை செஞ்சும் பழி சுமத்துறாங்கன்னு கோபம்... அப்ப நீ வந்து விளையாட கோபமாப் பேசிட்டான்... உங்களுக்குள்ள புரிதல் இருக்கணும்... சண்டை வரக்கூடாது... அப்படின்னு விரிவாய் பேசிக் கொண்டிருந்தார். உண்மையில் சேரன் பக்கா ஜென்டில்மேன்... நாம் அவரைக் கேலி கிண்டல் பண்ணலாம் அதற்கெல்லாம் அப்பாற்பட்டு யார் மனதும் புண்படாமல் மற்றவர்களைப் பற்றி புறம் பேசாமல் அகத்துக்குள் அன்பை வைத்திருக்கும் மனிதர்... எனக்குச் சேரனை ரொம்பவே பிடிக்கும்... காரணம் இதுதான்.சேரன் ஷெரினுடன் பேசிக் கொண்டிருக்கும் வேளையில் தர்ஷன் நண்பர்களிடம் இதே கருத்தைப் பேசிக் கொண்டிருக்கிறான். இருவரின் பனிப் போரும் விலக வேண்டும் என்பதே நம் எண்ணமும்... ஷெரின் வனிதாவுடன் அன்பாய் இருந்தாலும் சேரனுடன் பேசும் போது மனம் திறந்து பேசுகிறார்... அவருக்கு சேரனின் அக்கறையும் அன்பும் ரொம்பவே பிடித்திருக்கிறது. மற்றவர்களுடன் பேசுவதைக் காட்டிலும் சேரனிடம் எல்லா விவரங்களும் பேசுகிறார்... சேரனுடன் பேசுவதைத் தான் விரும்புவதாகவும் அதில் பாதுகாப்பு உணர்வு இருப்பதாகவும் கமலிடமும் சொல்லியிருக்கிறார். ஷெரின் மற்றும் சேரன் இறுதிப் போட்டி வரை செல்லத் தகுதியானவர்கள் என்றே தோன்றுகிறது.இன்று ஆண்டவரின் வருகை... என்ன நடக்கிறதுன்னு பார்ப்போம்.பிக்பாஸ் தொடரும்

-'பரிவை' சே.குமார்.

எழுதியவர் : சே.குமார் (25-Aug-19, 5:31 pm)
சேர்த்தது : சே.குமார்
பார்வை : 49

மேலே