என் ஆசான்
என் ஆசான்
பிரசவ அறையில்
பிறப்புறப்பைக் கிழித்து
உலகம் தொட்டேன்!
அன்று தொடங்கியது பாடம்!
இன்று வரை பாடம் ஒன்று தான்!
வாழ்க்கை! படிப்பிப்பவரோ உருவத்தால்
மாறிக் கொண்டுதான் இருக்கிறார்கள்! தவழப் பழக்கி
சிரிக்கப் பழக்கி
நடக்கப் பழகி
வார்த்தை மெல்ல அசை போட வைத்து...
என் முதல் ஆசான்கள் ஒப்படைத்தார்கள்...
என் இரண்டாம் பெற்றோரிடம்!
வாழ்வில் வரும் முதல் ஏதும்
மறப்பதில்லை எளிதில்!
வயது சிறிதென்றாலும் இன்னும்
பசுமையாகத் தான் உள்ளது!
பள்ளி நினைவுகள்!
அகவை ஐந்தில் தொடங்கியது! சுய செதுக்கல்!
ஆசான் எனும் கைஉளி கொண்டு!
அம்மையப்பன் உயிர் கொடுத்தார் என்றால், உயிரெழுத்து தந்தது
என் ஆசான்! அகரம் சொல்லி ஏற்றுவித்தார்! இன்று நான் சிகரமாய்!
ஒரு கருவை கருவறையில்
தாய் சுமந்தாள்! பல உருவை அதன் கனவை
வகுப்பறையில் சுமப்பவர் தான்
என் ஆசான்
களர் நிலத்தை தோண்டி எடுத்து
கலை நிலமாய் உழுதவர்தான்
என் ஆசான்!
பிரம்பு பட்டு சிவந்த கரம்,
உதவி செய்து சிவக்கிறது! அன்று கற்பித்த ஒழுக்கத்தால்!
எத்தனையோ வசை பாடி இருக்கிறேன்!
இன்று நினைத்தால் கண்களில் நீர் துளிர்க்கிறது! வாழ்க்கைப் பாடத்தில்
வான் ஏற்றிவிட்டு, வெறும் வரப்பாக நின்று
வேடிக்கை பார்ப்பவர் தான் என் ஆசான்!