மன-பிறழ்வு

நீண்ட-ஒரு
இருள் வெளி பாதை
நான் மற்றும் எனது
நிழல்-தனிமையில்

வெளிச்சம் கண்டாலே
வீறிட்டு வரும் சினம்

இருப்பதுக்கும் இல்லாததுக்கும்
இடையில்-ஏதோ
ஒரு வித நிலை

வெற்றிடங்களை வெறிப்பதுமாய்
கூட்டத்தில் தனித்திருப்பதுமாய்
கடந்து போகும்
நாட்காட்டியின் காகிதங்கள்

தெரிந்த மொழியிலும்
சொற்களின் ஒலி மறந்து
தவிக்கும் மனம்
பழமொழிகள் தெரிந்தும்
ஊமையை நான்


ஏதோ ஒன்று
எதுவென்று தெரியாமல்
தோன்றுவதும்
மறைவதுமாய்

ஓவென்று அழவும்
ஒலி எழுப்பி சிரிக்கவும்
கண் முன்னே
நீண்டு கிடக்கும் ஆசை

எதற்குள்ளோ அடைபட்டு கிடப்பது
போலொரு உணர்வு
இந்த ஆடைகளை கிழித்து
வெளியே வர வேண்டும்
என்ற துடிப்பு

இங்கு எல்லாம் எனக்காக போலும்
இங்கே ஏதும் எனதில்லை போலும்
தொடரும் குழப்பங்கள்

எங்கோ ஒரு நீண்ட
மாய உரையாடல்
ஒலித்து கொண்டே
செவிப்பறையில் ....

சிறிதும் பெரிதுமாய்
ஊறும் புழுக்கள்
மனதிலும் மூளையிலும் ...

ஆழ்ந்த ஒரு ஆழ்கிணறில்
மெல்லமாகவும் வேகமாகவும்
நான் மூழ்கும் காட்சி...

வலியும் சுகமும்
மாறி மாறி
வந்து போகும்
உணர்வுகள்..

மனமெனும்
புதைகுழியில்
நான்

வெளி நீட்டி பிடிப்பு
தேடும் எனதிரு
கரங்கள்...

கண்டும் சிரித்து
அறிந்தும் அறியாமலும்
கடந்து போகும் உறவுகள்...

ஒருவேளை இவைகள்
வெறும் காட்சிகளாகுமோ..
கானல் நீரோ!!!!!

எழுதியவர் : (30-Aug-19, 4:32 pm)
சேர்த்தது : இளவரசன்
பார்வை : 145

மேலே