முதலும் நான் தான் முடிவும் நான் தான்...

நதியின் சலசலப்பு
பாம்பின் சரசரப்பு
பெயர் தெரியா
பூச்சிகளின் ரிங்காரம்
இரையைத் தேடும்
ஜந்துக்களின் நடுவே
நான் மட்டும்
ஆதிவாசியாய்

இரவும் பகலும்
ஒன்று தான் எனக்கு
விஷமும் அமுதமும்
ஒன்று தான் எனக்கு
என் நண்பன் நான் மட்டும்
என் உறவினர்கள் நான் மட்டும்
தனியாய்…

நாளும் தெரியாது
கிழமையும் தெரியாது

உணவைத் தேடி
சுற்றிக் கொண்டு
இருக்கிறேன்

யானைப் பிளிரும்
சத்தத்திலிருந்து
சிறுத்தையின்
சீற்றத்திலிருந்து
தப்பித்து ஒரு இடத்தை
அடைந்தேன்

நான் பார்த்திராத இடம்
சுற்றிலும் பூக்கள்…
எண்களும் தெரியாது
எண்ணங்களும் தெரியாது

அதில் ஒன்று எனக்கு
பிடித்திருந்தது
எடுத்தேன்
பசி இல்லை இப்போது
பூவையே பார்த்துக்கொண்டு
இருந்ததால்

பூவுக்கு ஒரு முத்தம்
பேசினேன்
கத்தினேன்
கொஞ்சினேன்
அசைவற்று இருந்தது

நிறமும் தெரியாது
மணமும் தெரியாது

பூவையே பார்த்துக்கொண்டு
இருந்தேன்
என்னிடம் பேசும் என்று
உறங்கிப் போனேன்

எழுந்தேன்.
அதே நிறத்தில்
அதே மணத்தில்
பூ இல்லை
அழுதேன் கதறினேன்

பூவையே கையில் வைத்து
திரிந்து கொண்டு இருந்தேன்
பசி இல்லை

கால் இடறி விழுந்தேன்
பறக்கிறேன்
நீர் வீழ்ச்சியிலிருந்து
விழுகிறேன்,
என் பூவோடு
நீரோடு -
பெரிய பாறை
பலத்த அடி
சிவப்பு பூ.

பார்த்தபடியே
இறக்கிறேன்

இந்த உலகத்தில்
முதலும் நான் தான்
முடிவும் நான் தான்.

எழுதியவர் : kathir@kathick (31-Jul-10, 3:48 pm)
சேர்த்தது : kathir
பார்வை : 683

மேலே