சுகம் என்று வரும் ====================

காலைஎனும் மென்பொழுது கண்திறக்கு முன்னே
கண்விழித்துத் தன்கடமை களைச்செய்யும் போது
ஆலையிலே சங்கொலிக்கும் அடுத்தகணம் தன்னை
ஆயத்தப் படுத்திவிடும் அன்னையர்கள் பாட
சாலைசெலும் பிள்ளைக்கும் சாதத்தைக் கட்டிச்
சட்டென்று அவர்தேவை சகலதையும் தீர்த்து
வேலைக்குச் செல்கின்ற விறுவிறுப்பைப் பார்த்து
வேதனையில் எறும்புகளும் விழிபிதுங்கி நிற்கும்
*
மாலைவரைத் தேயிலையை மளமளன்னு கிள்ளி
மலைத்தோட்டம் விட்டிறங்கி மடுவத்தில் கொட்டி
ஆலைக்கு அனுப்பிவிட்டு அலுப்போடு போனால்
அடுப்பெரிக்க விறகின்றி அலைமோத நேரும்.
சேலைக்கும் மாற்றின்றிச் சீரழிந்த வாழ்வை
சிலநூற்றாண் டிங்கேதான் சிறைகைதி வாழ்வாய்
சோலைக்குள் நின்றபடிச் சுமையோடு வாழும்
சோதனைகள் தீர்ந்திங்கு சுகமென்று கூடும்
**
**மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (14-Sep-19, 2:49 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 52

மேலே