வல்லான் பாதம் பணிவோம்

கருப்பை சுமந்த ஒரு கைபிண்டம்
தெருவில் நடக்கும் பெண்டீர் பின்போய்
மருவத் துடித்து மாண்பை இழக்கும்.
உருவம் குறுகி யுதிரம் வற்றி,
பருவம் தொலைத்து பாழில் வீழும்

கோபம் காமம் பொய் எனும் பேய்களை
தாபத்துடன் தரணியில் மருவி
பாவம் வறுமை பிணிபல தாங்கி
யாவுமிழந்த நடை பிணமாய் உலவும்

இறையை மறுத்து நன்னயம் இழந்து
மறையை ஒதுக்கி மனிதம் தொலைத்து
நரையில் வீழ்ந்து நடுக்கம் கொண்டே
நரகில் வீழும் பாழும் மனிதா

பெண்மையே சக்தி ! பெண்மையே தெய்வம் !
பெண்மையே வையம்! பெண்மையே யாவும் !
பெண்மையை சிதைத்து சிதையும் பிணங்காள்!
பெண்மையை இன்றி ஏதும் இல்லை.

சுகித்தற்கு மட்டுமா பெண்மையை இங்கே
சுத்த பிரம்மம் படைத்து அளித்தது ?
தாயும் அவளே தமக்கையும் அவளே !
தங்கையும் அவளே தாரமும் அவளே !
தரணியில் வாழ்வை இனிமையாக்கும்
தன் நிகரில்லா தோழியும் அவளே!
தாரம் சுமந்து நமக்காய் அளிக்கும்
மகளும் அவளே !
பொல்லா காமம் தானதை நீக்கி எல்லாம்
வல்லான் பாதம் பணிந்தே தொழுவோம்

.

எழுதியவர் : ச ரவிச்சந்திரன் (18-Sep-19, 12:27 pm)
சேர்த்தது : ச இரவிச்சந்திரன்
பார்வை : 40

மேலே