கற்பு
ஆழக் காமப் பள்ளத்தாக்கில்
ஒளிந்து ஒளிந்து விளையாட வரும்
ஒவ்வொரு விரகக் காற்றலையையும் ஆவியாக்கி
காதல் மேகங்களுக்குள் சங்கமிக்க செய்த
உன் கற்புச் சூரியன் ஈந்த மழையால்தான்
என் அந்தரங்க வியர்வைகள் அலசப்பட்டன.
இலக்கியப் பத்தினிகளின் கற்பாடை
வெயில் மறிக்க விரிக்கும் குடை.
ஆனால்…
மழையோடு வீசும் வெயிலுக்கும் ஈடிணையாக
பிடிக்கும் குடையாய்
உன் உடைகள் கூட கற்பு பேசுகின்றன
கர்வமற்ற கௌரவமாய் கற்பை அனுசரிப்பதால்
தெளிவான பசியாக
ஆரோக்கியமாக ஜீவித்துக்கொண்டிருக்கும் உணர்ச்சிகள்
விரசமாய் விரைந்து மரித்துப் போவதில்லை.
வானத்தின் அழகு
அதன் விஸ்வரூபத்தில் வியாபித்திருப்பதுப் போல்
உனது கற்பின் பிரம்மாண்டம்
உனதழகை பேரழகாக்கிறது
உனது சுவாசத்தில் அடங்கியுள்ள
எனது மூச்சுக் காற்றைப் போல
என் ஆயுளின் நிர்ணயம்
உன் கற்பின் காலச்சக்கரத்தை
மையமாக வைத்துதான் சுழல்கிறது
---------------------------