முறைப்பெண்

வைகறையில் வந்தேன். அந்தியிலேயே திரும்பினேன்.

குளக்கரையில் உடலை உலர்த்தும்போதுதான் கலங்கலான நீர்குமிழிகள்போல் உன் நினைவுகள் வந்து வந்து போயின.

திருவிழாக் கூத்துகளில் உன் வேடிக்கையைத்தானே நான் வேடிக்கை பார்த்தேன்.

குச்சி புதைத்து மணல்மூடியாடும் விளையாட்டில் இஷ்டமில்லாத என்னை
வேண்டுமென்ற ஜெயிக்கவைத்த பிரியக்காரி.

சிவன்கோவிலின் மையப்பிரகாரத்தில் கம்பிவலைப் பரணின் ஊடாக விரவும் இளங்காலை வெளிச்சத்தில் ஆதிகோபுரத்தின் உள்ளிருந்து கீச்சிடும் குருவிகளுக்கு எதிரொலி கொடுத்த உன் குரலோசையை பதிவு செய்த காற்று… இன்று என் மௌனத்தை அங்கீகரிக்க மறுக்கிறது.

என் பேச்சுகளுக்காகவும்…. எதிர்காலத்தில் என் கடித எதிர்பார்ப்புகளுக்காகவும்…..பருவவயதில் பாடம் கற்றாய்.

காலப் பிரிவுகளை ஆலமர அவயங்களில் செதுக்கிட்டு அடுத்தடுத்த திருவிழா வருகைகள்போது முதற்கண் அதைப்போய் படிப்பதில் எனக்கொரு அற்ப சந்தோஷம்தான்.

பல நாட்கள் பட்டினி கிடந்தவனுக்கு பழையசோறு ஒரு பல்சுவை பண்டம்.

எதுவானாலும் அந்நேரத்திற்கு அமிர்தம்தான். காதல் யாகனுக்கோ….
சாகும்வரை ஒரே நினைவுதான்.

அனுபவிக்காத அந்தரங்கத்திற்குத்தான் எப்படியெல்லாம் கற்பனை!

அன்று நான் ஊர் திரும்பியபோது……நிர்மல வானில் தடுமாறும் ஒற்றைமேகம் போல் வெண்சேலை, விபூதி நெற்றியுடன் என்னைக் கடந்து போனாய்.

என்னை பார்க்கவேயில்லை.

மலர்களை இப்போதெல்லாம் நான் கவிதைகளில் சேர்ப்பதில்லை.

---------------------------------------------

எழுதியவர் : யேசுராஜ் (4-Oct-19, 4:44 pm)
சேர்த்தது : யேசுராஜ்
Tanglish : muraipen
பார்வை : 373

மேலே