செவப்பி - அத்தியாயம் 10

செவப்பி அத்தியாயம் 10
========================

     பார்வதியம்மாவை தூரத்தில் கண்டதுமே, வயலில் இருந்த மகேஷ் வரப்புக்கு வந்துவிட்டான்.

     "எப்படிமா இருக்கீங்க?"

     "ரகு ஊருக்குப் போய்ட்டானா?", போன்ற வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு பேச்சை ஆரம்பித்தார்.

     "மகேஷ்.. எனக்கு ஒரு உதவி வேணும்..."

     "என்னனு சொல்லுங்கம்மா.. முடிஞ்சா நிச்சயமா செய்யறேன்"

     "என் பையனப் பத்தி சில விஷயங்கள் தெரியணும்.. ஸ்கூல்ல ரகுவும், நீயும் பத்தாவது வரைக்கும் ஒரே கிளாஸ்.. ஏதோ போறாத காலம், நீ விவசாயம் பார்க்க வந்துட்ட.. ஆனா ஸ்கூல் டேஸ்ல‌ நடந்த சில விஷயங்கள நான் தெரிஞ்சுக்கலாமா?"

     "என்னனு கேளுங்கம்மா.. சொல்றேன்.."

     "இந்த செவப்பியைப் பத்தி சொல்லேன்"

     கேட்டதுமே முகம் வாடிப்போனது மகேஷுக்கு..

     பார்வதிய‌ம்மா அதனை கவனித்துவிட்டார்.

     "கொஞ்ச நாளைக்கு முன்னாடி செத்துப் போச்சே.. அந்தப் பொண்ணாமா.. அதப்பத்தி இப்ப‌ தெரிஞ்சுக்கிட்டு  என்ன பண்ணப் போறீங்க?"

     'சரி.. இவன்கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்ல வேண்டியது தான்.. என.. பேத்தியின் பர்த்டே அன்று நடந்த விஷயங்கள், அன்று அவமானப்பட்டு, அடிபட்டு வந்த ரகுவின் துயரம், அதன் பின் சந்தேகம் நிவர்த்தியாக செவப்பி வீடு சென்று சோகமாக திரும்பியது..' என‌ அனைத்தையும் கொட்டித்தீர்த்தார் பார்வதியம்மா.

     "எல்லாம் எனக்கு தெரியும்மா..", எனச் சொன்னவனை தலை நிமிர்ந்து பார்த்தார் பார்வதியம்மா..

     "எப்படீனு கேட்டீங்கன்னா, ரகுவே என்கிட்ட சொன்னான்.. சரி செவப்பி விஷயத்துக்கு வருவோம்.. நாங்க படிச்ச ஸ்கூல்ல தான் செவப்பியும் படிச்சா.. எங்களோட ஒரு கிளாஸ் கம்மி.. அப்பெல்லாம் சாதாரணமாத்தான் இருந்தா.. எங்க கூடல்லாம் ரொம்ப நல்லா பேசுவா.."

     "நான் பத்தாவது பெயில் ஆகி, வருத்தத்துல இருந்தப்ப ஆறுதல் சொல்ல வந்தான் ரகு.. அப்ப கூட செவப்பியும் வந்திருந்தா.."

     "அப்ப அவங்க பேசின, பழகின விவரத்தப் பார்த்தப்பவே புரிஞ்சுக்கிட்டேன்.. ரெண்டு பேருக்கும் ஒருத்தர ஒருத்தர் ரொம்ப பிடிச்சுப்போச்சுனு"

     "அதுக்கப்புறமெல்லாம், என்னைக் காவலா வச்சுதான் ரெண்டு பேருமே அடிக்கடி சந்திக்க ஆரம்பிச்சாங்க"

     "பனிரெண்டாவது முடிச்சுட்டு அவன் காலேஜ் போக ஆரம்பிச்சும் இது தொடர்ந்துச்சு"

     "எப்ப செவப்பிக்கு அந்த சாமி மாதிரி ஒரு சக்தி வந்துச்சோ, அப்ப இருந்தே அவ அவங்கிட்ட இருந்து விலக‌ ஆரம்பிச்சுட்டா.."

     "அப்படி அன்னைக்கு பேச்சு முத்திப் போய் தான் ரகு, அவ மேல கைய ஓங்கிட்டான்.. அப்ப‌ அவளுக்கு எங்க‌ இருந்து தான் அந்த ஆவேசம் வந்துச்சோ தெரியல..  ரகுவ நல்லா சாத்திட்டா.. தடுக்கப் போன எனக்கும் ரெண்டு மூணு அடி விழுந்துச்சு.. அப்பத்தான் அவனும் கோவமா, சோகமா அங்கிருந்து கெளம்பிப் போனான்"

     "ஆனா விஷயம் எங்கேயும் கசியாமப் பார்த்துக்கிட்டோம்.. அவன் செவப்பிகிட்ட அடி வாங்கினாங்கற விஷயம் வெளிய தெரிய ஆரம்பிச்சாலே போதும், ரகு தன்ன‌ விட்டு நிரந்தரமா விலகிடுவானு கணக்குப் போட்டாளோ என்னவோ தெரியல!.. ஆனா இப்ப அது தான் காரணம்னு ஓரளவு தெரிஞ்சு போச்சு"

     "இப்ப அவளே செத்துப்போயிட்டா"

     "அவ இறந்த அன்னைக்கி, அவனுக்கு போன் பண்ணேன். அழுதுக்கிட்டே கெளம்பினவ‌ன் அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு எனக்கு போன் பண்ணான்.. "இல்லடா.. இப்ப நான் ஊருக்கு வரல,, இத்தன நாளா சாமி மாதிரி வாழ்ந்தவ, இனியும் ஊரு கண்ணுக்குச் சாமியாவே இருக்கட்டும்.. நான் வந்து, அவ என் லவ்வருனு சொல்லி,  அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி, அவ பேரக் கெடுக்க விரும்பலனு" சொன்னான்.

     "திரும்ப ரெண்டு நாள் கழிச்சி, நான் போன் செஞ்சப்ப, 'டே.. அன்னைக்கு நான் கெளம்பிட்டு தான்டா இருந்தேன். ஆனா.. செவப்பியோட குரல் எனக்கு கேட்டுச்சுடா.. வேணாம்.. வேணா ரகு... இப்ப ஊருக்குப் போகாத.. நான் சொல்லும் போது போனா போதும்.. என்னைக் கொன்னவங்கல பலி வாங்காம விட மாட்டேனு,  அதனால தான் நான் வரல.. அவள கொன்னவங்கல பலி வாங்க, நானும் காத்துகிட்டு இருக்கேனு சொன்னான்.."

     "இப்ப ஊர்ல நடக்கிற விஷயங்களப் பார்த்தா அவன் சொன்னதுக்கு ஏத்த மாதிரி தான் இருக்கு"

     "அதுமட்டுமில்லாம.. இப்ப நீங்க‌ என்னை பார்க்க வருவீங்க.. இதெல்லாம் சொல்லுனு செவப்பியோட குரல் எனக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கேட்டுச்சுமா..  அன்னைக்கு ரகுவ அடிக்க காரணம் என்னனு நான் இப்ப சொன்னேனே அது தான்னும் செவப்பி சொன்னாமா.."

என ஒரு பெரிய சொற்பொழிவே ஆற்றி முடித்தான் மகேஷ்.

     தனது கேள்விக்கான விடை இப்போது இப்படி கிடைச்சிருக்கே...!

     'ம்.. எதுவுமே என்கிட்ட மறைக்க மாட்டான் ரகு.. இப்படி ஒரு விஷயத்த இத்தன வருஷமா எப்படி என்கிட்ட சொல்லாம மற‌ச்சான்..!!? அட.. நான் தான் எப்படி தெரிஞ்சுக்காம மிஸ் பண்ணேன்! இது மட்டும் தானா.. இல்ல இன்னும் பல சீக்ரெட் அவ‌ன்கிட்ட இருக்கா!?', என அனைத்தையும் நினைத்துக்கொண்டே மகேஷிடம் இருந்து விடை பெற்றார் பார்வதியம்மா....

(தொடரும்)

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (4-Oct-19, 9:43 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 108

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே