நீலப்படம்
உங்கள் பொழுதுபோக்கு என்ன?
எனக்கு bird watching.
இப்படி நான் சொல்லும்போது காமாட்சி விழுந்து விழுந்து சிரிப்பான். எந்த பட்சிடா? சிக்கினதா? சிக்காத ஒண்ணா?
அவன்தான் சிங்கப்பூரில் இருந்து வரும் போது அந்த பைனாகுலர் வாங்கி வந்தான். ரேஞ் நாலு கிலோமீட்டர். துல்லியமான வீடியோ. நைட் விஷன். அருவி பக்கம் போனா பிட் எடுத்து அனுப்பு. கேட்டா பேர்ட் வாட்சிங் னு சொல்லு. மஜா பண்ணு.
எனக்கு நடக்கும் போதே வேட்டி தடுக்கினால் பயத்தில் கொஞ்சம் தூக்கி வாரி போடும். அருவிப்பக்கம்...பிட்... வாய்ப்பு இல்லை காமாட்சி.
எனது அறையில் இருந்து அந்த மெட்டாலிக் கருப்பனை ஆராய்ந்து கொண்டிருந்தேன். வழுவழு. கண்களில் வைத்து முதலில் பிள்ளையாரை மட்டுமே பார்க்க வேண்டும் என்று நூறு முறையாவது நினைத்திருப்பேன்.
ஆனால் ஒரு சுழற்சி அடைந்து ஜன்னல் வழியாக பார்த்தபோது எதிர் வீட்டில் கல்பனா தெரிந்தாள்.
அவள் மொட்டை மாடிக்கு வரும்போது எச்சிலை கூட்டி விழுங்கி கொள்வேன். குனிந்து துணியை உதறி கொடியில் தொங்கவிடும்போது வெளியில் வந்து பலமுறை ஹலோ சொல்லி விட்டு போகும்.
எதுவா...?
எதுவோ...!!!!
கல்பனா திருமணம் ஆனவள்தான்.
'நியூலி மேரிட்' வாசகம் ஒட்டிய காரில் போன மாதம் அவள் கணவன் ஜெயபிரகாஷ்வுடன் வந்த போது தெருவே பார்த்தது. நானும்தான்.
கல்பனா காபி விளம்பரக்காரி போலவே காலையில் சிறிது சிரித்து வாசனையான நைட்டியுடன் அவனை எழுப்பி கொண்டிருப்பாள் என்று நினைப்பேன்.
இருக்கலாம். யார் கண்டது?
இனி காண முடியும். இப்போது எனக்கு அடிஷனல் கண்கள் கிடைத்து விட்டது.
என்னைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது எனக்கு தெரியும்?
நமக்கு என்ன ஒட்டா உறவா... நினைத்து கொள்ளுங்கள். எதுவாயினும்.
கண்களில் பொருத்தி கொண்டவுடன் கல்பனா வீட்டு வாசலை அடைந்தேன்.
வீட்டை சுற்றி மூன்று செம்பருத்தி மரங்கள்.அனைத்தும் பூத்து குலுங்கின.
சுற்றிலும் டானஸ் க்ரிஸிப்பஸ். அப்படியென்றால், சிவந்த பட்டாம்பூச்சிகள். சிறகை விரித்து படபடத்தது. அழகாய் பூக்களில் தலை வைத்து முட்டி கொண்டிருந்தன.
தெய்வீக காட்சி.
கல்ப்...
நேரே அவள் வீட்டு ஹால் வரையில் எந்த இடர்ப்பாடும் இன்றி பயணித்தேன். வேறின்றி ஓரிரு போட்டோக்கள் தொங்கி கொண்டிருக்கும் வெண் சுவர். ஒரு அஜந்தா க்ளாக். பின் ஒரு பாதை நீண்டு போவதோடு பைனா நின்றது. அறையில் இரண்டு பேர் தாராளமாய் அமரும் படியான வெல்வெட் சோஃபா.
கல்பனா குளிக்க போய் இருப்பாளா?
ஒரு நிமிடம். உங்களோடு பேச வேண்டும். நீங்கள் வேலைக்கு நடுவிலோ அல்லது வேலை வெட்டி இல்லாமலோ இதை படிக்கலாம். நான் எந்த வேலையும் எந்த வெட்டியும் இல்லாத ஒருவன்.
அதோ கல்ப்...
குளித்து விட்டுத்தான் வருகிறாள். பைனாவின் வலப்புற குமிழ் திருகினால் ஜூம் ஆகும். ஆனது.
ரொம்ப ரொம்ப கிட்டத்தில் போனேன். புள்ளையாரப்பா அவள் திரும்பி விட கூடாது. ஜூமினேன்.
பட்டென்று செல்ல தட்டு தலையில் விழ திடுக்கிட்டு திரும்பவும் மாலதி...
ஜோத்பூரில் வாழும் அத்தை பெண்.
பாவி என்னடா பண்றே...கொடு அதை.
இப்போதாண்டி கொரியர்ல வந்தது. பாத்திண்டு இருந்தேன். நீ வந்தே. அவரும் வந்திருக்காரா?
பேச்சை மாத்தாதே.
இல்லடி. காட் ப்ராமிஸ்.
போடா. பொறுக்கி. உன்னை பத்தி தெரியாது. பாத்ரூம்ல கல் போடறவன் தானே நீ. சனியனே.
அவள் கையில் கொடுத்து விட்டேன்.
நல்லவேளை, ஒன்றும் ரெக்கார்ட் செய்யவில்லை.
அவள் திருப்பி திருப்பி பார்த்துவிட்டு என் மடியில் தூக்கி போட்டாள். உருப்படற வழிய பாரு. வழக்கமான அட்வைஸ். கீழே இறங்கி போய் விட்டாள்.
பின்னாடியே நானும் சென்றேன்.
சுந்தா வரலையாடி.
இல்லடா..என்னமோ பிஸ்னெஸ் பேசணும் . நான் கல்கத்தா போறேன். நீ வேணும்னா மாம்பலம் போய்க்கோ னு சொன்னார். வந்துட்டேன். சாயந்திரம் சிவாவிஷ்ணு கோவிலுக்கு போலாமா?
அம்மாவை கூட்டிண்டு போ.
நீ...? நோண்டனுமாக்கும். பைனாகுலரை?
மாடிக்கு வந்துவிட்டேன்.
கல்ப்..
சமைப்பாள் போலிருக்கும். மூச்சை இழுத்து மோப்பம் பார்த்தேன். அது பழைய ரேடியோ போல் கொர கொர சப்தம் கொடுத்து நின்று.விட்டது.
ப்ளடி ஹியூமன் ஸ்ஃநிபிங் பவர்.
ஜேபி (ஜெயப்பிரகாஷ்தான் செல்லமாய்) வந்து காலிங் பெல் அழுத்தினான். அட்ரா சக்கை. பதினோரு மணி காட்சி.
காமாட்சி நீ வாழ்க.
அசட்டை கூடாது. கதவை சாத்திக் கொண்டு மோசர்ட் ஒலிக்க விட்டு பைனாவின் குமிழை திருகி சரியான கோணத்தில் வைத்து வீடியோ மோட் ஆன் செய்து கொண்டு...
கல்ப் கதவை திறந்ததும் சப்பென்று ஒரு அறை விட்டான் அந்த ஜேபி பாவி.
வெடுக்கென்று அவன் உள்ளே சென்றதும் அவளும் பின்னே விரைந்தாள்.
எனக்கும் பரவசம் மறைந்து பதைப்பு கூடியது.
பட்டாம்பூச்சிகள் அலங்கோலமாய் சிதறி மீண்டும் மலர்கள் தேடி அமர்ந்தன.
போச்சு. ஒன்றும் நடக்கவில்லை.
ஜேபி இரண்டு டீ குவளைகளை வெளியில் வந்து உடைத்தான். மீண்டும் உள்ளே சென்று விட்டான். நான் வீடியோ மோட் ஆஃப் செய்து விட்டேன்.
மாலு கதவை தட்டினாள்.
கீழே வாயெண்டா. கட்டெலே போறவனே.
இறங்கி போனேன். இந்த வைபவமான நாள் இப்படி சப்பென்று முடிந்து போய் இருக்க வேண்டாம்.
சுந்தா போன் பண்ணிட்டார். ஒரு டீ எஸ்டேட் தன் கம்பெனிக்கு வாங்கணும். நான் பேசி டீல் முடிச்சிட்டேன். எனக்கு ஆறு பெர்சென்ட் லாபம்னு சொன்னார்.
ரொம்ப சந்தோஷம்.
சாப்பிட்டுட்டு போயேன் மாடிக்கு.
அப்பறம். தலை வலிக்குது.
திரும்ப மாடிக்கு போனதும் மனம் எனக்கு உடைந்து போனது. பாவம் கல்ப். ஜேபி ஒரு கல் நெஞ்சுக்காரன்.
கல்பனா வெளியில் வந்து நின்று வாசலில் யாரையோ தேடினாள். சிவந்த அவள் காதருகில் சாம்சங் உட்கார்ந்து இருந்தது.
அப்போது ஆட்டோவில் அவள் அப்பா நான்கு பேருடன் இறங்கி உள்ளே சென்றார். இன்று மண்டகப்படி போலும். வேண்டும் அந்த ஜேபி ராஸ்கலுக்கு.
இப்போது அவன் அந்த பழைய அஜந்தா கடிகாரத்தை மரத்தடியில் போட்டபோது பட்டாம்பூச்சிகள் சொல்லிக்கொள்ளாது கிளம்பின. நானும் வெளியேறினேன்.
இனி வாசலில் நின்று ரகளை பார்த்தால் போதும்.
கீழே இறங்கி வந்தேன்.
மாலதி இன்னும் போன் பேசி கொண்டு இருந்தாள். என் முகத்தை பார்த்து சிரித்து டன் என்று கட்டைவிரல் காட்டினாள்.
போடி கடங்காரி...
அம்மா சாதம் போடேன்.
இரு. மாலதியும் வரட்டும்.
தட்டை கழுவும்போது சுற்றி நின்று என் கன்னத்தில் மாலதி சின்னதாய் ஒரு முத்தம் கொடுத்தாள். கங்கிராட்ஸ்.
எதுக்குடி?
நீ சுந்தாக்கிட்டே சொன்னியே. பெங்களூர் டைட்டன்ல ஒரு எக்ஸிக்யூட்டிவ் போஸ்ட் இருக்கு. தெரிஞ்சவா இருந்தா சொல்லுங்கோ னு.
ஆமா.. ஸோ வாட்...
அந்த ஜாப் உனக்குத்தாண்டா. பேசிட்டாராம். இப்போ போன்ல சொன்னார்.
மாலு.. ஸோ மச் தாங்க்யூ. அவள் கைகளை உணர்ச்சிபெருக்கில் பிடித்தேன்.
அசடு. வா சாப்பிடலாம். நன்றி அவருக்கு சொல்லு. சாயரச்சே கோவில் போணும்.
டபுள் டன் மாலு.
************
இரவு.
காமாட்சி வாட்ஸாப்பினான்.
என்னடா பைனாகுலர் எப்படி?
சூப்பர்டா. ஒரு நிமிஷம் இரு. வரேன்.
மீண்டும் கல்ப் நினைவு வர நைட் விஷன் முடுக்கி அவள் வீட்டுக்குள் அலை பாய்ந்து பார்க்க அறையெல்லாம் வெளிச்சம்.
அந்த சுவர்களில் நீல நிறத்தில் இடுக்கு விடாது கிருஷ்ணர் ராதை படங்கள். தம்பதிகள் சிரித்து கொண்டே டீவினார்கள்.
கன்னத்தில் போட்டு கொண்டு பெட்க்கு ஓடி வந்தேன். மொபைல் எடுத்து காதில் வைத்தபோது காமாட்சி கொசு அடிக்கும் சத்தம் கேட்டது.
சொல்றா...
வேலை கிடைத்ததை சொன்னேன்.
ஓ...பெங்களூரா? கப்பன் பார்க் பைனாவோட போய்டு.விடாதே. நிறைய சிக்கும் என்றான்.
அதை விடுடா. இன்னிக்கு கல்ப்க்கு ஒரே அடி என்றேன்.
அப்படியா? கால் பண்ணு. பேசுவோம்.
கிர்ர்ர்ர்ர்ர்....
இப்ப சொல்லு.
அதாண்டா... சொல்லி முடித்தேன்.
முழுக்க கேட்டுவிட்டு சொன்னான்.
கேயாஸ் தியரி.
அப்படின்னா?
அவன் டீ கிளாஸ் உடைக்கும்போது ஒரு எஸ்டேட் விற்பனை ஆயாச்சு. கிளாக் தூக்கி போடும்போது உனக்கு டைட்டன் கம்பெனியில் ஜாப். அங்கே பட்டாம்பூச்சி பறந்து இருக்கும் கவனிச்சியா என்றான்.
அட...ஆமாம்..எனக்கு ஜில்லென்று இருந்தது. நீ ஜீனியஸ்டா. ஆனாலும் இதை நான் நம்ப மாட்டேன்.
ஏன்?
இப்போ ஜேபி சுவர் முழுக்க சாமி படம் வச்சுட்டான். அதுக்கு என்ன சொல்லுவே?
அது என்ன கலர்?
நீலம்...
அதுதான்டா இந்த கதைக்கு டைட்டில்.
******************************