செவப்பி - அத்தியாயம் 11
செவப்பி - அத்தியாயம் 11
========================
அப்போது தான் மந்திரவாதியின் கிராமத்திற்கு வந்தடைந்தார் பெரியவர்..
'இவன் சக்தி வாய்ந்தவன் தான்.. இவன்கிட்ட சொன்னா நம்ம பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைக்குமா? மருமகன் அவனோட பிரச்சனையில இருந்து வெளிய வருவானா? பழைய படி நம்ம வீடு மகிழ்ச்சியான கட்டத்துக்கு திரும்புமா? கற்பகத்து முகத்துல மறுபடியும் சிரிப்ப பார்க்க முடியுமா...' என பலவாறு யோசித்தபடியே மந்திரவாதியின் வீட்டிற்கு வந்தார் பெரியவர்..
அந்த கிராமத்திலேயே அந்த வீடு தனித்து இருந்தது.. வீட்டைச் சுற்றிலும் ஏராளமான மரங்கள்.. மரங்களிலிருந்த பறவைகள் சத்தம் காதைத் துளைத்தது.
இவர் வீட்டில் நுழையும் முன்னே,
"நில்லு பெரியவரே... நீ வீட்டுக்குள்ள வராதே..", என கத்திச் சொன்னார்.
பெரியவர் பயந்துவிட்டார்.
"ஏம்பா.. மந்திரவாதியே... ஏன் என்னை உள்ள வராதேனு சொல்ற?"
"நீ அங்கேயே நில்லு பெரியவரே..! நானே வரேன்", என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் உடனடியாக வெளியேயும் வந்து விட்டார்..
மந்திரவாதி தனி மனுஷன் தான். அதிக நேரம் பூஜையிலேயே செலவிட்டுக் கொண்டிருப்பதால் ஜடா முடியோடு, பெரிய மீசையோடு திடகாத்திரமாய் பெரிதாய் நெற்றியில் குங்குமம் வைத்தவராய் கொஞ்சம் பயமுறுத்தும் தோற்றத்துடனேயே காணப்பட்டார்.
"நீ வருவேனு எனக்குத் தெரியும்.. ஆனா செவப்பியோட சக்தி அதிகமா இருக்கு.. அவளோட தீராக்கோவத்த என்னால அடக்க முடியாது.. நான் கும்படற சாமி.. உனக்கு எந்த உதவியும் பண்ணக்கூடாதுனு நேத்து என் கனவுல வந்து சொல்லிடுச்சு.. நான் மட்டுமல்ல.. வேற யாராலயும் செவப்பிய அடக்க முடியாது.. ஒன்னு செவப்பியாவே கோவத்த விடனும், இல்ல அவ கோவத்துக்கு பரிகாரம் கெடைக்கனும்.. இது ரெண்டுல ஒன்னு தான் நடக்கும்.. அதனால நீ கெளம்பு"
இப்படி ஒரு பதிலை பெரியவர், மந்திரவாதியிடம் எதிர்பார்க்கவில்லை.
'அப்ப மருமகன காப்பாத்த வேற வழியே இல்லையா..!!!' என யோசித்தவாரே துக்கத்துடன் வீடு திரும்பினார்.
இவரது முகத்தைக் கண்டதுமே கற்பகத்திற்கு புரிந்து விட்டது.
"என்ன பெரியவரே..! இப்படி முகத்த தொங்கப் போட்டுட்டு வந்துருக்கீங்க..?"
"அதுவாமா.. அது ஒன்னுமில்ல.."
"அப்படியா.. அப்ப உங்க கூட மந்திரவாதி வரல"
"அவர் வந்து இன்னும்.. ரெண்டு.. ரெண்டு.. நா.. நாள்ல...."
"பெரியவரே.. எதுக்கு திக்கறீங்க? ஏதாவது என்கிட்ட மறைக்கப் பாக்குறீங்களா? ஏதா இருந்தாலும் பரவாயில்ல.. சொல்லுங்க"
"இல்லம்மா..."
"அட... சொல்லுங்க பெரியவரே.."
"அது.. மந்திரவாதி வர முடியாதுனு சொல்லிட்டான்மா.. அது மட்டுமல்ல.. வேற எவனும் வரமாட்டானு வேற சொல்லிட்டான்... அதான் ரொம்ப கஷ்டமா இருக்கு..."
"என்ன! அப்படியாச் சொன்னார்?", எனச் சொன்ன கற்பகம் ஓவென அழ ஆரம்பித்து விட்டாள்.
(தொடரும்)