கொஞ்சம் கொஞ்சமாய் காதல் சாரல் - பகுதி 16

அட்லஸ் பேண்ட் ஒன்றை அணிந்துக் கொண்டு அவனின் கை கட்டை அவிழ்த்தெறிந்து நேராய் சோபாவில் சென்றமர்ந்தான். முன்பதாகவே வீட்டின் விளக்குகளை அணைத்து அவ்வீட்டை இருட்டாக்கி வைத்திருந்தான். வெட்டுப்பட்ட கையிலிருந்து ரத்தம் சொட்டு சொட்டென கொட்டின. நிசப்தமான அமைதியில் அந்த ரத்தம் ஒழுகும் சத்தம் மட்டும் கேட்டது.

சுஜி குளியல் அறையிலிருந்து அப்படியே தொப்பையாக, நனைந்தவாறே வந்தாள். தலையை கூட துவட்டாமல், தண்ணீர் ஒழுக.

இயல்பாகவே, இருட்டில் கொஞ்சம் நேரம் வெளிச்சமின்றி இருந்து விட்டால், கரு விழிகள் அகல விரிந்து சிறிது நேரம் கழித்து நம்மால் நன்றாகவே பார்க்க இயலும். அது போலவே, அட்லஸ் சோபாவில் அமர்ந்திருப்பது சுஜி கண்களுக்கும் தெரிந்தது. நேராய் அவனை நோக்கி சென்றாள்.

அட்லஸ் சோபாவின் மூலையில் தலையை வசதியாய் சாய்த்துக் கொண்டு படுத்திருந்தான். காயம்பட்ட கையை சோபாவின் மேல் தொங்க விட்டிருந்தான். சுஜி சோபாவின் பின்னாலிருந்து அவனின் தலையை வருடினாள்.

விருட்டென எழுந்து உட்கார்ந்து கொண்டான் அட்லஸ். சுஜி அவன் முன் வந்து மண்டியிட்டு கீழே அமர்ந்தாள். அவனை மட்டுமே பார்த்தாள். அட்லஸ் அவளை பார்க்கவே இல்லை. தரையை மட்டுமே பார்த்தான்.

சுஜி எழுந்து சென்று அந்த வீட்டின் பால்கனி கதவை திறந்து விட்டாள். நல்ல சில்லென்ற காற்றோடு சேர்ந்த நிலவொளி வீட்டிற்குள் வெளிச்சம் தந்தது. அன்றைக்கு பௌர்ணமி.

சுஜி மீண்டும் பழையபடியே அட்லஸிடத்தில் சென்றமர்ந்தாள். அவன் கைகளை பற்ற முயற்சித்தாள். வேண்டாம் என்பது போல் கைகளை தன்னிடம் இழுத்துக் கொண்டான் அட்லஸ். சுஜி கண்களில் கண்ணீரோடு அவனையே பார்த்தாள்.

சுஜி, அட்லஸின் முகத்தாடையை பிடித்து உலுக்கினாள்.

சுஜி: யார்டா நீ? உனக்கு என்னடா பிரச்சனை? நிமலன் என் புருஷன். அவன் என் கைய பிடிச்சா உனக்கு ஏண்டா வலிக்குது? இவ்ளோ ஆர்ப்பாட்டம் ஏன் பண்றே? எதுக்காக அங்கே அப்படி அந்த போத்தலை உடைச்சே? எதுக்காக இங்கே இப்படி எல்லாத்தையும் சிதறடிச்சி வெச்சிருக்கே? சொல்லுடா சொல்லு?

அட்லஸ் பேசாமல் அவளையே பார்த்தான். சுஜி தொடர்ந்தாள்.

சுஜி: ரொம்ப வேதனையா இருக்கு ஷெரிப். இப்படி பண்ணாதடா. அங்க நான் ஒன்னும் பண்ண முடியாதுடா. நிமலனை எல்லாருக்கும் தெரியும். அங்கே நான் உன்கூட ரொம்ப நெருக்கமா இருந்தா மத்தவங்களாம் ஒரு மாதிரியா பேசுவாங்க, பார்ப்பாங்க. நிமலன் கிட்ட சொல்லிட்டா பிரச்சனை ஆயிடும். அதனாலதான், நானும் கண்டுக்காத மாதிரி இருந்தேன். அதுகூட புரிஞ்சிக்காம இப்படி கோபப்பட்டா எப்படி? நான் என்னதான் பண்றது?

அட்லஸ் எதற்கும் மசிவதாய் இல்லை.

கடுப்பாகிய சுஜி, எழுந்து நின்றாள்.

சுஜி: நான் என்ன சொன்னாலும் நீ காதுல வாங்கறதா தெரியல. சரி, நீயே சொல்லு நான் இப்போ என்ன பண்ணனும்? சொல்லு, என் அன்பு உன் மேல உண்மைங்கிறதா நிரூபிக்க, நான் இப்போ என்ன பண்ணனும்? சொல்லுடா?

அட்லஸ் அவன் பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டே,

அட்லஸ்: போடி!! உன் காதலும் உன்னே மாதிரி வெறும் நடிப்புதான்!

சுஜி: நடிப்பா? என் காதலா? உன் மேல இருக்கற என் காதலா? ஷெரிப் மேல கயல் தீரா வெச்சிருக்கற காதலையா நடிப்புனு சொல்றே?

அவனின் முகத்தை அவள் கைகளால் பற்றி உலுக்கினாள். அட்லஸ் இப்போதும் பேசாமலேயே நின்றான் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு.

கோவக்காரி சுஜிக்கு அட்லஸின் வார்த்தைகள் இதயத்தை கத்தியால் குத்தி கிழித்தது போல இருந்தது. அவனை தள்ளி விட்டு வேகமாய் கிச்சன் பக்கம் போனாள்.

அந்த பௌணர்மி வெளிச்சம் பால்கனி கண்ணாடியில் சுஜியின் பிம்பத்தை காட்டியது. சுஜி கிட்சன் சுவற்றில் தொங்க விடப்பட்டிருக்கும் அந்த கூர்மையான கத்தியை கை பற்ற, அதை கண்ணாடி பிம்பத்தில் பார்த்த அட்லஸ், கோபங் கலைந்து பதற்றத்தோடு வேகமாய் அவளை நோக்கி ஓடினான். அட்லஸ், சுஜியின் இடது கையை பிடித்து இழுக்க வலது கையால் சுஜி கத்தியை கை பற்ற விருட்டென திரும்பியதால் சுஜியின் கையில் இருந்த கத்தி அவளின் வயிற்றில் சதக் என்று சொருகியது.

சொருகிய கத்தியோடு ரத்த வெள்ளத்தில் சுஜி அட்லஸின் கைகளில். அலறினான் அட்லஸ்.

அட்லஸ்: பாப்பா !!

தொடரும்...

எழுதியவர் : தீப்சந்தினி (8-Oct-19, 12:35 pm)
சேர்த்தது : தீப்சந்தினி
பார்வை : 140

மேலே