மரணம் ஒரு கறுப்புக் காகிதம்
(இக்கவிதை மரணத்தை நோக்கி படுவது போல அமைக்கப் பட்டு உள்ளது. இதில் நீ - உன்- உன்னை என்பதெல்லாம் மரணத்தைக் குறிக்கும்)
வாழ்க்கை ரணங்களின் தாய்
நீ அவளைக் கொல்ல இறந்தே
பிறந்த கடைசிக் குழந்தை!
ஒரு தட்டில் கிடக்கிறது பிறப்பு.
மறுதட்டில் போடப்படும்
கருப்புக் கல் நீ.
வாழ்க்கைத் தராசு சமநிலையில்!
நீ எமக்கான கல்லறையில்
தூங்கிக் கொண்டிருக்கிறாய்.
எழுந்தவுடன் உனக்கு அகோரப்பசி
எடுக்கும் என்று தெரிந்து தான்
சுமந்தே திரிகிறோம் உன் உணவை!
வாழ்க்கையால் தவறாகவே
உச்சரிக்கப் படும் பொருளற்ற
வார்த்தை பிறப்பு!
நீ சப்தமின்றி உச்சரிக்கிறாய்!
அர்த்த ஞானம் அடைகிறது
வார்த்தையோடு வாழ்க்கையும்!
ஒரு விபத்தில் உன்னில் இருந்து
துண்டாகித் துடிக்கும் பிறப்பை
உன்னோடு ஒட்ட வைக்க நடக்கும்
அறுவை சிகிச்சை-
வாழ்க்கை!
வாழ்க்கைத் தேர்தலில்
செல்லாத ஒட்டுக்களை
மட்டுமே பெறும் எங்களை
'செல்ல' வைக்கும் ஒரே ஒரு
கள்ள ஓட்டு நீ!
வாழ்க்கை செவிடர்களின்
செவி வழிச் செய்தி!
புரிய வைக்கும் ஊமைகளின்
மொழி நீ!
உயிரே பிணம் !
வாழ்க்கை சவ ஊர்வலம்!
பிணத்தை உன்னில் தான்
புதைக்கிறோம்!
காலக்கண்ணாடி எரியும்
கல்லால் உடைபடும்
வாழ்க்கைநிழல்!
கண்ணாடியில் தெரியும்
உடைந்த நிழல்களின்
நிஜம் நீ!
உயிர் புதையலின் ரகசிய அறையை
சுவாசங்களின் கள்ளச் சாவிகள் திறக்க
முயன்று தோற்கும் வேளையில்
புதையலை அள்ளிக் கொண்டு போன
காலனின் மூலச் சாவி நீ!
நான் ஆண்- பெண் கத்தரிக் கோலால்
நறுக்கப் பட்டு கிடக்கும் துணி!
வாழ்க்கைக்கு ஏற்றாற் போல் தைக்க
முற்பட்டு கந்தலான என்னை
ஒரு பெருநாளில் அணிந்து கொள்கிறாய் நீ!
தாய்தந்தை இரு கை தட்ட வருகிறோம்!
சுவாசங்களின் கைகள் தட்ட ஆடுகிறோம்!
உன் ஒரு கை ஓசையில்
காணாமல் போகிறோம்!
வாழ்க்கை ஒரு அறுவை சிகிச்சை!
ஜனனம்-மரணம் இந்த ஒட்டிப் பிறந்த
ரெட்டைக் குழந்தைகளை பிரிக்க
நடக்கும் அறுவை சிகிச்சை!
நீ மட்டும் தான் பிழைக்கிறாய்!
ஜனனம் உன் வருகையைச்
சொல்லும் தூதன்!
வாழ்க்கை முழுதும்
உனக்கான விருந்து
ஏற்பாடு!
ஓர் இரவில்
தரப்பட்ட
கறுப்பு மையை ஊற்றி
கவிதை எழுத
எத்தனிக்கையில்
எனக்குள் நிகழ்ந்த
மின்வெட்டுக்குப் பின்
இருட்டில் தரப்பட்ட
கறுப்புக் காகிதம் நீ!