அன்பு கலக்கும் உறவே ஆனந்தம்
அன்பு நெஞ்சில் வந்து பூப்பூவாய் மலரும்
நேச இதழ்கள் எங்கும் வாசம் வீசும்
உறவு மேகங்கள் வந்து காலடியில் குவியும்
பாச மழை இடை விடாது எங்கும் பொழியும்
மகிழ்வு நதி பெருக்கெடுத்து எங்கும் வழியும்
கலகலப்பில் வந்து சலசலப்பு முட்டுக் கொடுக்கும்
முட்டி மோதும் முன்னதை பின்னது தட்டிப் பறிக்கும்
பூக்களின் அருகிலிருந்த முட்கள் நேராய்த் தைக்கும்
நெஞ்சைக் கீறிக் கிழித்து இரத்தம் கசியும்
நேச இதழ்கள் சாக்கடையில் வீழ்ந்து
துர்நாற்றம் வீசும் உறவு நாசிகள் நாறும்
வைரிய காற்று கந்தகச் சுவாலையை வீசி
உடலெங்கும் எதிர்ப்புப் பொக்களங்கள் தோன்றும்
துரோக ஓடை பெருக்கெடுத்து எதிர்ப்பு நதி வழியும்
தூஷணச் சர்ப்பங்கள் இங்கும் அங்கும் நெளியும்
துக்க மாத்திரை விழுங்கி சோக ஒளடதம் அருந்தி
அடித்தொண்டை கரகரக்கும் பார்வை மங்கிக் கலங்கும்
வம்பு சூறாவளி ஓய்ந்து அன்புக் காற்று
அங்கு மெல்ல மெல்ல வீசத் தொடங்கும்
ஆத்திரங்கள் மறைந்து வார்த்தைத் தோத்திரங்கள்
ஒருவரை ஒருவர் துதி பாட உறவு ராகம் உயிர்த்தெழும்
மீண்டும் அங்கு பூபாளம் கேட்கும்
அஷ்றப் அலி