கஜல் கவிதைகள்-2

பறவைகளே! உங்கள் பழைய கூடுகளைக் காட்டுங்கள்!

என் மனம் உறங்கட்டும்.



இறந்து போன என்னை

நிகழ்காலப் பிணந்தின்னி மனம்

தோண்டித் தின்னுகிறது!



இறந்த இதயத்தைபுதைக்க தெரியாமல்

சுமந்து திரிகிறேன், ஒரு பாடை போல!

பாவம்! பாடைகளுக்கு மயானத்தில்

இடம் இல்லை!



இன்று தொலைத்த என்னைத் தேடும் போது நேற்று தொலைந்த நான் கிடைத்தேன்!







செத்துவிட்ட என் இதயத்தை

உன் அமில நினைவுகளால்

பாடம் செய்து இக்கவிதைப் பிரமிடுக்குள் புதைத்து

வைக்கிறேன்!





உனக்கும் உன் நினைவுகளுக்கும்

பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை!

தூக்கத்தையும் மரணத்தையும் போல!

உன் மடியில் தூங்கினேன்.

உன் நினைவில் சாகிறேன்..





உன்னோடு நான் கொண்ட காதல்

ஏசுவிற்கு யூதாசு தந்த முத்தம்!

இதோ உன் நினைவுச் சிலுவையில்.. நான்.



கருவறுக்கும் என்று தெரியாமல்

அலைபேசி கோபுரத்தில் கூடு கட்டி

முட்டையிடும் பருந்து போல

காயம் கொடுத்தவளின்

நினைவுகளிடம் மருந்து தேடுகிறது பித்துக் கொள்ளி மனம்!



பாசி படர்ந்த குளத்தங்கரை மீது

உன் நினைவைப் புதைத்த கல்லறை நான்!

கல்லறை, கல்லொன்று எரிய

குளத்தில் உன் முகம் நிலவின் நிழலாக!



பிரிவு மட்டும் தான் நம் இருவரையும் இணைக்கிறது!



பழைய பறவைக் கூட்டைப் போல் உதாசீனம் உணரும் உள்ளம்!

உள்ளே உன் நினைவுகள், இறகாக!

எழுதியவர் : பாபுகனி மகன் (11-Oct-19, 12:12 pm)
சேர்த்தது : Babu Ganison
பார்வை : 193

மேலே