கஜல் கவிதைகள் 4

மூச்சை அடக்கி முத்தை சேகரிக்கும் மானிடா!

சிற்பியில் முத்தாய் சேர்ந்த மழைத் துளி

மட்டுமல்ல,

ஒவ்வொரு துளியும் முத்துத்துளி தான்

சேகரிக்க வேண்டிய உயிர்த்துளி தான்

இல்லை எனில் நாம் மூச்சை அடக்க வேண்டாம்!

அதுவே அடங்கி விடும்.



நான் கவிஞன்..

உண்டியல் நிலா!

கனவுகள் காசுகள்!

நிலா நிறைய சிதறிய

காசுகள் நட்சத்திரமாய்!

நனவாகிய கனவாய்

உதயமாகும் சூரியன்!



என் குழந்தைக்கு நிலாச்சோறு

ஊட்டுவதில்லை!

நிலாத்தட்டில் சோறூட்டுவேன்!

பாருங்கள்!

சிந்திக் கிடக்கும்

நட்சத்திர பருக்கைகள்!





என் கனவுகளின் காலடியில்

சிகரங்கள் பாத்திரம் ஏந்துகின்றன!

உயரங்களை பிச்சை கேட்டு.

நான் கவிஞன்!



என் மனப் புண்ணில் தான் உங்கள்

புன்னகை மணக்கும் என்றால்

என் வெந்த புண்ணும் நீங்கள் வேல்

பாய்ச்சக் காத்திருக்கும்!



காகிதப் பூக்களையும் கருக்கொள்ளச் செய்யும்

வீரியமிக்க என் மகரந்த மனம்!

நான் கவிஞன்!

எழுதியவர் : பாபுகனி மகன் (15-Oct-19, 10:02 am)
சேர்த்தது : Babu Ganison
பார்வை : 558

மேலே