ஒரு வீதி ஒரு மனிதன்
"மனித குணங்களை மனிதர்கள் சிலாகித்துப் பேசுவதைவிட கேலிக்கூத்து கிடையாது. ஏனெனில், சிந்திக்கும் நாய்கள் நாய் குணங்களையே உயர்வாகக் கருதுகின்றன."
----ஜி.என்.
**********
அவனை ரகசியங்கள் காப்பாற்றி கொண்டிருந்தன.
அப்படித்தான் எல்லோரும் அவனை பற்றி சொல்லி கொண்டிருந்தார்கள். அவர்கள் சொல்வதென்ன? ஏறத்தாழ அதுதான் உண்மை.
அந்த வீதிக்கு ஆழ்ந்த பைத்தியம் பிடித்து இருந்தது. அது பகலில் விழித்தும் இரவில் தூங்கியும் காலத்தை கழித்தது. அங்கு இருப்போர் ஒருவரோடு ஒருவர் பகை கொள்ளாது இருக்க உடல் வியர்க்க பணி புரிந்தனர்.
பணி என்ற ஒன்று அமங்களமான முறையில் மனிதனை பிணைத்து வைத்து இருந்தது.
வேலை என்பது பெருமை கொண்ட ஒன்றாக நம்பிய மனிதர்கள் வாழ்ந்து வந்த வீதி அது.
அவன் ஊர் திருவிழாவின் போது தன் ஆடைகளை களைந்து நின்று பின் கூட்டம் அதிர ஓடுவது வாடிக்கை.
பெண்கள் இதனை அந்த வருடம் முழுக்க பேசி பேசி தங்களுக்குள் சிரிப்பார்கள்.
அடுத்த வருடம் திருவிழாவில் மீண்டும் இது நடக்கும். அப்போது ஜார்ஜியாவின் மாமன்னர் வர நேர்ந்தால் என்ன ஆகும்?
என்று சிரிப்பார்கள். ஜோத்சனா வந்தாலும் அவன் அப்படி செய்வான் என்று ஊர் சிரித்தது.
அந்த ஊரின் தென்கிழக்கே பற்பல ஓக் பைன் மரங்களுக்கு இடையில்தான் உன்மத்தம் பிடித்த அந்த வீதி இருந்தது.
அம்மனிதர்கள் பணியில் சிறப்புற்று பின் சீரழிந்தனர். எந்த உழைப்பையும் அவர்கள் கட்டும் வரி தீய்த்து கொண்டே போனது. வரி ஒரு மென்மையான அரக்கன்.
பேதலித்த வீதிக்குள் நுழையும் மனிதரிடம் ஆவணமும் வரியும் கேட்க ஆரம்பித்தனர்.
பாதசாரிகள் அந்த புது நவீன வணிகம் கண்டு அதிசயித்து தங்கள் இருப்புகளிலும் அதை நகலெடுக்கவும் விரும்பினர்.
அரசனுக்கு வேண்டிய பலியாடுகள் நிரம்ப பெற்ற அந்த கிறுக்கு பிடித்த வீதியில்தான் மிகப்பல ரகசியங்களுடன் வாழ்பவன் தன் மௌனத்தால் பட்ஷிகளை உறுத்தி கொண்டிருந்தான்.
நாய்களும் எருதுகளும் கால் கடுக்க நின்று அவன் அசைவுகளை பிரதி எடுத்து கொண்டிருந்தன.
குழப்ப வீதி தன் பணிகளை மேலும் முடுக்கி கொண்டே இருந்தது. அது உள்ளூர் ஷெரிஃபின் விருதுகளை அள்ளி குவிக்க வேண்டுமென்று விரும்பியது.
உழைப்புக்கு இனிய இரவை பலி கொடுத்தாலன்றி அந்த விருப்பம் சாத்தியமல்ல என்பதை ஷெரிஃப் தன் துப்பாக்கியால் வான் பார்த்து ஒரு முறை சுட்டு பிரகடனப்படுத்தினார்.
சஞ்சல வீதி இரவை உழைப்பால் நிரப்ப விரும்பி அதை துவங்கியது.
அவன் தன்னந்தனியே அந்த வீதியில் தங்கி மடிய ஆரம்பித்தான்.
சிந்திய உணவிலும் சிதறிய நீரிலும் மட்டுமே அவன் உயிர் உடலுக்குள் கிண்ணத்தில் தேன் அசைவது போல் அசைந்து கொண்டே இருந்தது.
அன்று பெய்த கடும் மழையில் அவன் தன் கையில் இருந்த ஓலையை நெற்றிக்கு அருகில் வைத்து கொண்டான்.
வீதி மழையில் சுகிக்க ஆரம்பித்தது. பூப்போன்ற அந்த இருள் இரு உடல்களை நீராய், ஆவியாய்,புகையாய்,ஒலியாய் மாற்றி மாற்றி ஆற்றலுடன் இயங்க வைத்தது.
தெருவை சுற்றி சூழ்ந்திருந்த ஓக், பைன் மரங்கள் மழை அருந்தி கூச்சல் கொண்ட பறவைகளுக்கு இலைகளின் காதுகளுக்குள் முணுமுணுப்பை காட்டி கொண்டிருந்தன.
வஸிலியெவ்னா தன் கணவன் பாலியேனோவ் புணர ஆரம்பிக்கும் முன் கேட்டாள்... "உண்மையில் அவன் ரகசியம்தான் என்னவாக இருக்கும்"?.
பாலியேனோவ் சொன்னான். "அவன் கையில் வைத்திருக்கும் ஓலையில் எதுவோ உண்டு. அது மன்னனின் காலாட்படை ஒற்றனின் தகவல்கள் கூட இருக்கலாம். இந்த புணர்ச்சிக்கும் நாம் அரசு கஜானாவில் வரி செலுத்துவோம்".
புணர்ச்சி முடிந்த பின் கேட்டாள். "வரும் திருவிழாவில் அவன் நிர்வாணமாய் செல்வானா? கிரேக்க சிற்பம் போல் இருக்கும் திமிர்ந்த அந்த உடல் பார்க்க நாங்கள் மிக விரும்புகிறோம்."
பாலியேனோவ் திரும்பி படுத்தான்.
மழை சொட்டு சொட்டாய் முடிந்த காலத்தில் திருவிழா வந்தது.
பைத்தியம் பிடித்த அந்த வீதி தன்னை அலங்கரிக்க துவங்கியது. அது வீட்டுக்கு வீடு மரத்தால், பஞ்சால் வர்ணங்களால் அலங்கரித்து பருவம் கொண்டது.
அவன் தன் உடலுக்குள் உயிர் தவளையை போல் தாவிக்கொண்டு துள்ளுவதை உணர்ந்தான்.
அவன் ஓலையை கொண்டு தன் முதுகை சொறிந்து கொண்டான்.
வீதியின் தோரண அழகில் பிரும்மாண்டத்தில் யௌவனத்தில் பூரிப்பில் மிளிர்ந்தன.
அவை எதனிலும் ஒட்டாத எதனோடும் பொருந்தாத அந்த ரகசியவாளி ஒரு காய்ந்து போகாத மான் விட்டையை போல் இருந்தான்.
கிறுக்கு பிடித்த வீதி அந்த திருவிழா துவங்கும் முன்பே அவன் சாக வேண்டும் என்று பிரார்த்தித்து கொண்டது. பின் நித்திரை கொள்ள வேண்டும் என்று திருத்தி சொல்லி கொண்டது.
எல்லா இரவுகளிலும் முதல் பிரார்த்தனை அந்த ரகசியனுக்கு இருந்தது.
பனி கொண்ட இரவில் வஸிலியெவ்னா பாதி புணர்ச்சியில் கேட்டாள். "ஒருவேளை ரகசியவாளி இந்த திருவிழாவுக்கு முன் இறக்காது போனால் நிர்வாணமாய் ஓடுவானா?".
***********
திருவிழா வந்தது.
எல்லோரும் எதிர்பார்த்தது போலவும் எந்த ஒன்றும் நிகழவில்லை.
மாறாக ஒன்று நடந்தது.
வாலெரி லெபெடெவ்வின் வளர்ப்பு கழுதை அந்த ரகசியவாளியோடு ஒன்றி திரிந்தது.
இருவரும் உணவென்று கிடைத்ததை பங்கிட்டு உண்டனர். கிடைத்த இடத்தில் படுத்து கொண்டனர். புரண்டனர்.
ஒப்பனை கொண்ட கிலேச வீதி இந்த உறவை பார்த்து சிரித்து பின் மறந்து திருவிழா கேளிக்கையில் களித்தது.
அன்று மதியம் திருவிழா நிகழும் போது யாரும் எதிர்பாராவிதமாய் அவன் தன்னை நிர்வாணம் செய்து கொண்டான்.
அதற்கு இன்னும் இரு நாட்களேனும் இருக்கும் என்று பேசி சிரித்த கூட்டத்தில் அச்செயல்
அதிர்ச்சியூட்டியது.
பதைத்து விழித்து தெருவை தாண்டி ஓடியது.
அவன் குலுங்க குலுங்க கூட்டத்தை விரட்டி ஓடினான்.
தெருவுக்கு வெளியில் மக்கள் சிரித்து சிரித்து சிதறி ஓடினார்கள்.
மேகம் குவிந்திருந்தது. அந்த கிறுக்கு வீதியில் பெருத்த சட்டென்று ஓர் பெரும் இடி விழ இன்னும் நான்கைந்து மின்னல்கள் கீசி கீசி தெறித்து கண்களில் குத்தியது.
ஓடிய கூட்டம் ஓசை கேட்டு திரும்ப அந்த தெரு மொத்தமும் தீக்குள் போனது.
அவன் சிரித்தான். ஒரு பெரும் கூவலுடன் கை ஓலையை உயர்த்தியபடி நெருப்புக்குள் பாய்ந்தான்.
கூட்டம் அதிர்ந்தது.
ரகசியவாளிக்காக தவித்து பதறியது.
அந்த பைத்தியக்கார வீதியின் ஓவ்வொருவருக்கும் அவன் ஏதோ ஒரு உறவு என்பதை அந்த மரணம் சொன்னது.
நெருப்பு தணிய துவங்கியதும் கூட்டம் அலறியவண்ணம் உள்ளே சென்றது.
மிச்சம் என்று ஒன்றும் இல்லை.
ஒரு கை. அதில் ஓலை.
வேறு ஒன்றும் இல்லை.
ஸில்வியா டாண்டெ அந்த ஓலையை கையில் எடுத்து அதில் எழுதி இருப்பதை சத்தமாய் வாசித்தாள்.
"கடவுள் என்பது வெறும் பெயர்ச்சொல் அல்ல. வினைச்சொல்."
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷