துப்புரவாளர்கள்

அவர்கள் அறியப்படாத தியாகிகள்… அறத்தால் உயர்ந்த பாமரர்கள்.

அவர்கள் சகிப்புத் தனமையின் எல்லையாளர்கள். பொறுமையால் பூமியையே மிஞ்சியவர்கள்
குறிப்பிடப்படாத குறிப்பிடப்படவேண்டியவர்கள்.

அவர்கள் சுவாச மண்டலத்தில் சுகாதார சீர்திருத்தம் செய்தவர்கள்… காற்றை சுத்திகரித்து தென்றைலை நமக்குத் ஈந்தவர்கள்.

ஆக்ஸிஜனை கார்பன்-டை-ஆக்ஸைட் அளவுக்கும் கார்பன்–டை-ஆக்ஸைடை ஆக்ஸிஜன் அளவுக்கும் சுவாசித்துக் கொண்டிருப்பவர்கள்.

மனிதர்களும் கொசுக்களும் 1:1கோடி என்ற விகிதாச்சரத்தில் உருவாகாதபடி தடுத்துக்கொண்டிருப்பவர்கள்

துடைப்பம் என்ற ஆயுதத்தால் தூய்மைப் போர் புரிந்துக் கொண்டிருப்பவர்கள்

நாசியுணர்வால் நம்மிலிருந்து அவர்கள் விதிவிலக்காகாதவர்களாக இருப்பாரெனில்…. எந்த மனிதரும் பருவத்தின் விளிம்பு வரை ஆயுளை தொட்டிருக்கமாட்டான்
.
மனிதர்களிலிருந்து அவர்கள் தோன்றாமலிருந்திருந்தால் பேரன்-பேத்தி என்ற வார்த்தைகள் காலப்போக்கில் அகராதியிலிருந்து விடுபட்டிருக்கும்

ஆறிலும் சாவு: பதினாறிலும் சாவு – என்று நிலைபெற்றிருக்கும் வழக்காடல்

அவர்கள் காலரா விலங்கின் கைகளை ஒடித்தவர்கள்…. மலேரியா ஜந்தின் முதுகெலும்பை முறித்தவர்கள்…. நிமோனியா எயினனின் நெஞ்சைத் தகர்த்தவர்கள்.

காசநோய் பேயையும் தொழுநோய் பிசாசையும் தற்கொலைக்காட்படுத்தியவர்கள்.

புனிதத்தன்மை நிமித்தம் பக்தன் நெற்றியில் பூசப்படும் விபூதி போல், பூமியின் சகாதாரத்தன்மை கருதி அதன்மீது ப்ளீச்சிங்க் பவுடர் பூசுபவர்கள் அவர்கள்.

சர்க்கார் வகுத்துத் தந்திருக்கும் சாலைகளில் நாம் பயணிக்கிறோம் எனினும், அவர்களால் வாளிப்பாக்கப்பட்ட வழிகளால்தானே நம்மால் சுகாதாரப் பிரயாணப்பட முடிகிறது.
துஷ்ட நாற்ற வலையிலிருந்து நம் நாசிப்புலன்களை விடுவித்து சுகாதார நதியில் நம்மை சங்கமித்தவர்கள்.

அசுத்தத்தால் சூழ்நிலைக் கைதிகளான நம் விலங்குகளை தகர்த்தெறிந்து ஆரோக்கிய சிறையில் நம்மை அடைத்தவர்கள்

பூமரங்களின் சாமரங்களுக்கு பிரமாணிக்கத்தை போதித்தவர்கள்

அவர்களது இரத்தத்தின் வெள்ளணுக்கள் குப்பைக் குன்றுகளிலும் சிவப்பணுக்கள் சாக்கடையாறுகளிலும் இரண்டக் கலந்திருக்கின்றன.

பூமியின் குமட்டல்களுக்கு அவ்வப்போது இஞ்சி-மரபா தந்து தணிக்கிறார்கள்.

பூமியின் கொப்பளிப்புப் பிராவக வாந்தியால் உருவாகவிருந்த துர் ஊற்றுகளை தங்கள் சிரத்தையால் கூவம் நதியில் ஆற்றுப்படுத்தினார்கள்

பணிரீதியாக அவர்களுக்கு பூட்டப்பட்டிருக்கும் தற்காலிக விலங்கை தகர்த்தெறிந்து எப்போது நிரந்தரப் பொன்னாடைப் போர்த்தப்படும்

அவர்கள், ஏனைய தொழிலாளர்கள் போல், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், நான்கே நாட்களில் நாறிப்போய் கிருமிகளின் புகலிடமாகிவிடும் நாடு.

ஒரு கலெக்டரின் பணியைக் காட்டிலும்….
ஒரு நீதிபதியின் நிதானத்தைக் காட்டிலும்….
ஒரு மருத்துவரின் சேவையைக் காட்டிலும்….
தலைசிறந்தது அப்பாமரர்களின் பணி-நிதான-சேவை.


-------------------------------------------

எழுதியவர் : யேசுராஜ் (19-Oct-19, 11:28 am)
பார்வை : 82

மேலே