கீழடி எங்கள் தாய்மடி

சைகைமொழி மாற்றம்கண்டு சங்கம்வைத்து ஆய்ந்தவளாம்
பொய்கையிலே எறிந்தபின்னும் புனலாடி மீண்டவளாம்
வைகையாற்றுப் படுகையிலே வளம்கொழித்துச் சிறந்தவளாம்
வையகத்து மொழிகளுக்கு மூத்தவளாய்ப் பிறந்தவளாம்..!

மூடிமறைத்தாலும் முட்டியெழும் வித்தினைப்போல்
ஆழிவந்து அழித்தபின்னும் அவதரித்து வந்த தமிழ்
நாழிக்கணக்கறிந்து நற்காற்றுதிசையறிந்து
ஆழிசூழ் உலகமெலாம் அடிவைத்து ஆண்ட தமிழ்

ஏற்றமிகு எண்ணமைத்து இலக்கணமும் வகுத்தளித்து
மாற்றம்பல கண்டபின்னும் மங்கிடாத கன்னித் தமிழ்
காற்றடித்தால் கலைந்துபோக தமிழ் கார்மேக கூட்டமல்ல புவி
ஆற்றலையே ஆய்ந்தறிந்து அறிவியலைக் கண்ட தமிழ்

ஆய்தறியாத் துறையுமில்லை தமிழ் அறிவியலில் குறையுமில்லை
மாய்ந்துபோன மானுடத்தின் மாண்புரைக்கும் மண்புதையல்..!
தேய்ந்திடாதக் கதிரவன்போல் திக்கெட்டும் ஆண்டகுடி புகழ்
சாய்ந்திடாத தமிழ்பரப்பி தரணியாண்ட மூத்தகுடி

தடிகொண்டு அடித்தாலும் தடம்மாறிச் சென்றிடாமல் தாயின்
மடிதேடும் குழந்தையைப் போல் தமிழ்த்தேடி தவித்திருந்தோம்
அடிமேல் அடிசறுக்கி அந்நியரின் சதிநொறுக்கி
இடிதாங்கும் இதயங்கொண்டு எழுந்துநின்றாள் தமிழன்னை..!

காலடியில் தொலைத்துவிட்டும் கடலடியில் புதைந்துவிட்டும்
காணாமல் தேடியஎம் கலாச்சாரப் பொக்கிஷத்தை
கீழடியில் கண்டுமீட்டோம் எம் கிழக்குவானம் வெளுக்குதடா
தாளடியும் தமிழடியே கிடைத்தபொருள் விளக்குதடா..!

பெ.அசோகன்.
கிருஷ்ணகிரி.
9047111145

எழுதியவர் : பெ.அசோகன் (19-Oct-19, 3:25 pm)
சேர்த்தது : சாலூர்- பெஅசோகன்
பார்வை : 819

மேலே